IPL 2023 : அந்த டீம பாத்து எனக்கு ரொம்ப பயம், அவங்க ஃபைனலுக்கு வந்தா சிஎஸ்கே ஜெயிக்காது – ப்ராவோ கவலையுடன் பேட்டி

Bravo
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பரபரப்பான போட்டிகளை விருந்து படைத்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிப்பதற்கு 10 அணிகள் கடுமையாக போட்டி போட்டன. அதில் நடப்பு சாம்பியன் குஜராத் முன்னாள் சாம்பியன், சென்னை, லக்னோ மற்றும் வெற்றிகரமான மும்பை ஆகிய 4 அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. அதைத்தொடர்ந்து தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த குஜராத்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது.

அதை தொடர்ந்து நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் புள்ளி பட்டியலில் 3வது இடம் பிடித்த லக்னோவை 81 ரன்கள் வித்தியாசத்தில் தெறிக்க விட்ட மும்பை மே 26இல் அகமதாபாத் நகரில் நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை எதிர்கொள்ள தகுதி பெற்றுள்ளது. அந்தப் போட்டியில் வெல்லும் அணி மே 28ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் சென்னையுடன் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளது.

- Advertisement -

ப்ராவோவின் பயம்:
அந்த வகையில் சென்னையுடன் ஃபைனலில் மோதப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தங்களை குவாலிபயர் 1 போட்டியில் தோற்கடித்த சென்னையை மீண்டும் ஃபைனலில் எதிர்கொண்டு சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க குஜராத் போராட உள்ளது. மறுபுறம் அது போன்ற பல நாக் அவுட் போட்டிகளில் வெற்றிகரமாக செயல்பட்டு 5 கோப்பைகளை அசால்டாக வென்றுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அப்போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தங்களுடைய பரம எதிரியான சென்னையை மீண்டும் ஃபைனலில் தோற்கடித்து 6வது கோப்பையை முத்தமிடுமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஃபைனலில் தங்களுடன் மும்பை மோதினால் சென்னை வெற்றி பெறுவது மிகவும் கடினம் என்று அந்த அணியின் பயிற்சியாளர் ட்வயன் ப்ராவோ கவலையுடன் பேட்டி கொடுத்துள்ளார். குறிப்பாக வெற்றிகரமான மும்பையை கண்டாலே தமக்கு பயம் என்று வெளிப்படையாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் மேத்தியூ ஹெய்டன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தது பின்வருமாறு. “நிச்சயமாக மும்பையை நினைத்தால் எனக்கு பயம். இருப்பினும் நாங்கள் அவ்வாறு பார்ப்பதில்லை. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற எஞ்சிய 3 அணிகளுமே மிகவும் ஆபத்தான தரமான அணிகள் என்பதில் சந்தேகமில்லை”

- Advertisement -

“இருப்பினும் உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் என்னைப் பொறுத்த வரை ஃபைனலில் நான் மும்பையை எதிர்கொள்ள விரும்பவில்லை. அதற்கான காரணத்தை எனது நண்பர் பொல்லார்ட் அறிவார். ஆனால் இந்த நகைச்சுவையை தாண்டி அனைத்து அணிகளுமே சிறந்தது என்பதில் சந்தேகமில்லை. எனவே ஃபைனலில் எந்த அணி வந்தாலும் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்கான தகுதியும் திறமையும் எங்களிடம் இருக்கிறது என்று நினைக்கிறேன்” என கூறினார். அவர் இவ்வாறு கூறுவதில் பெரும்பாலான சென்னை ரசிகர்களுக்கு எந்த ஆச்சரியமும் இருக்காது என்று சொல்லலாம்.

ஏனெனில் 2011 வரை அடுத்தடுத்த கோப்பைகளை வென்று ராஜாங்கம் நடத்திய சென்னையை 2013இல் ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்றதும் தெறிக்க விட்ட மும்பை மொத்தமாக இதுவரை மோதிய 36 போட்டிகளில் 20 முறை வென்றுள்ளது. அதிலும் குறிப்பாக கோட்டை என்று கருதப்படும் சேப்பாக்கத்திலேயே 2011க்குப்பின் தொடர்ந்து 12 வருடங்களாக சென்னையை மண்ணை கவ்வ வைத்து அதிக வெற்றிகளை பதிவு செய்த பெருமையையும் மும்பை கொண்டுள்ளது. அந்த மோசமான சாதனையை இந்த சீசனில் தான் ஒரு வழியாக சென்னை போராடி உடைத்தது.

இதையும் படிங்க:IPL 2023 : 5 ரன்னுக்கு 5 விக்கெட் – இன்ஜினியர் டூ ஐபிஎல் சாதனையாளர், யார் இந்த ஆகாஷ் மாத்வால் – ஆர்சிபி கழற்றிவிட்ட வீரரின் கதை இதோ

அவை அனைத்தையும் விட 2010இல் ஒரு ஃபைனலில் மட்டுமே மும்பைக்கு எதிராக சென்னை வென்றுள்ளது. ஆனால் 2013, 2015, 2019 என சென்னைக்கு எதிராக விளையாடிய 4 ஃபைனல்களில் மும்பை 3 கோப்பைகளை வென்றுள்ளது. குறிப்பாக 2019இல் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் கோப்பையை வென்ற மும்பை வரலாற்றில் வெற்றிகரமான அணியாக திகழும் சென்னையை தெறிக்க விட்ட அணியாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement