IPL 2023 : 5 ரன்னுக்கு 5 விக்கெட் – இன்ஜினியர் டூ ஐபிஎல் சாதனையாளர், யார் இந்த ஆகாஷ் மாத்வால் – ஆர்சிபி கழற்றிவிட்ட வீரரின் கதை இதோ

Akash Madhwal.jpeg
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 24ஆம் தேதியான நேற்று தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் புள்ளி பட்டியலில் 3வது இடத்தை பிடித்த லக்னோவை 4வது இடம் பிடித்த வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் எதிர்கொண்டது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 182/8 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 41 (23) ரன்களும் சூர்யகுமார் யாதவ் 33 (20) ரன்களும் எடுக்க லக்னோ சார்பில் அதிகபட்சமாக நவீன்-உல்-ஹக் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை துரத்திய லக்னோ சவாலான சேப்பாக்கம் மைதானத்தில் துல்லியமாக பந்து வீசிய மும்பைக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 16.3 ஓவரிலேயே வெறும் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கெய்ல் மேயர்ஸ் 18, கேப்டன் க்ருனால் பாண்டியா 8, நிக்கோலஸ் பூரான் 0 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ் 40 (27) ரன்கள் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மாத்வால் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

ஐபிஎல் சாதனையாளர்:
அதனால் 81 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்ற மும்பை மே 26இல் நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் ஏற்கனவே குவாலிபயர் 1 போட்டியில் சென்னையிடம் தோல்வியை சந்தித்த குஜராத்தை எதிர்கொள்கிறது. அந்த வெற்றிக்கு ஆரம்பம் முதலே அனலாக பந்து வீசி 3.3 ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டும் கொடுத்து நிக்கோலஸ் பூரான் உள்ளிட்ட 5 விக்கெட்டுகளை சாய்த்த இளம் மும்பை வீரர் ஆகாஷ் மாத்வால் சந்தேகமின்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் எலிமினேட்டர் போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் என்ற வரலாறு படைத்த அவர் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் (5/5) சாதனையை சமன் செய்தார். அது போக ஐபிஎல் வரலாற்றில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத பவுலர் என்ற சாதனையும் படைத்த அவர் சேவாக், கும்ப்ளே உள்ளிட்ட நிறைய முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளி வருகிறார்.

- Advertisement -

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அவர் 2016இல் சிவில் இன்ஜினியரிங் படித்து பட்டம் பெற்ற போதிலும் கிரிக்கெட்டின் மீதான காதலால் உள்ளூர் க்ளப் அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் விளையாட தொடங்கினார். குறிப்பாக இந்திய வீரர் ரிஷப் பண்ட்டும் அவரும் பிரபல பயிற்சியாளரான அவ்த்தார் சிங்கிடம் ஒரே சமயத்தில் ஒன்றாக பயிற்சிகளை துவங்கினர். அதில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் 2019இல் உத்தரகாண்ட் மாநில வாரியம் சார்பாக நடத்தப்பட்ட தேர்வு முகாமில் தன்னுடைய 24 வயதில் கலந்து கொண்டு அசத்திய அவரின் திறமையை உணர்ந்து அப்போதைய பயிற்சியாளர் மற்றும் முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் முதல் முறையாக தேர்வு செய்தார்.

இருப்பினும் பெரிய அளவில் வாய்ப்பு பெறாமல் இருந்து வந்த அவர் அடுத்த பயிற்சியாளராக பொறுப்பேற்ற சர்வீசஸ் முன்னாள் வீரர் மனிஷ் ஜா தலைமையில் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்று ரஞ்சிக் கோப்பை கொன்ற உள்ளூர் கிரிக்கெட்டில் உத்தரகாண்ட் அணிக்காக வேகப்பந்து வீச்சாளராக அசத்த துவங்கினார். அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் நெட் பவுலராக வாங்கப்பட்ட அவர் கடந்த சில வருடங்களாகவே வலைப்பயிற்சியில் மட்டும் வாய்ப்புகள் பெற்று வந்தார்.

- Advertisement -

இருப்பினும் கடைசி வரை அணியில் வாய்ப்பு கொடுக்காமல் பெங்களூரு கழற்றி விட்ட அவரை இந்த வருடம் 20 லட்சம் அடிப்படை விலைக்கு வாங்கிய மும்பை பும்ரா, ஜோப்ரா ஆர்ச்சர் போன்ற முக்கிய வீரர்கள் காயத்தால் விலகியதால் வாய்ப்பு கொடுத்தது.

இதையும் படிங்க:IPL 2023 : மாம்பழம் சாப்பிடலையா? ஆப்கன் வீரரை கலாய்த்த மும்பை வீரர்கள் – தொல்லை தாங்காமல் மியூட் செய்த லக்னோ

அதை கச்சிதமாக பயன்படுத்தும் அவர் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 13 விக்கெட்களை 7.77 என்ற எக்கனாமியில் எடுத்து அசத்தியுள்ளார். மேலும் பெங்களூரு அணியில் நெட் பவுலராக இருந்தும் கிடைக்காத வாய்ப்பு மும்பை அணியில் கிடைத்ததாலேயே தம்மால் அசத்த முடிந்ததாக அவர் நேற்றைய போட்டியின் முடிவில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement