எத்தனை ரோஹித் – கோலி வந்தாலும், அவர மாதிரி கேப்டன் இந்தியாவுக்கு எப்போதுமே கிடைக்க மாட்டாங்க – கம்பீர் அதிரடி

Gambhir
- Advertisement -

உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 8வது ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த தொடரில் சூப்பர் 12 சுற்றில் பங்கேற்ற 5 போட்டிகளில் 4 வெற்றிகளை சுவைத்து அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா வழக்கம் போல இங்கிலாந்துக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து பரிதாபமாக வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

ENg vs IND Jos Buttler Alex hales

- Advertisement -

அதிலும் குறிப்பாக 169 ரன்களை துரத்திய இங்கிலாந்தின் ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியாத அளவுக்கு படுமோசமாக பந்து வீசிய இந்தியா கொஞ்சமும் போராடாமல் தோற்றது தான் இந்திய ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. அதனால் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோகித் சர்மாவால் கூட 2013க்குப்பின் அடுத்த ஐசிசி கோப்பையை இந்தியாவுக்கு வென்று தர முடியவில்லை. அதன் காரணமாக முன்னாள் கேப்டன் தோனியை நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிஸ் செய்வதை பார்க்க முடிகிறது.

தோனி மாதிரி:

ஏனெனில் 2007ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ராகுல் டிராவிட் தலைமையில் வங்கதேசத்திடம் படுதோல்வியை சந்தித்த இந்தியாவுக்கு தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக நடைபெற்ற டி20 உலக கோப்பையில் எம்எஸ் தோனி புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அதற்கு முன் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத அவரது தலைமையில் இளம் வீரர்களுடன் சொல்லி அடித்த இந்திய அணி முதல் வருடத்திலேயே சாம்பியன் பட்டம் என்று சரித்திரம் படைத்தது.

Trophies Won By MS Dhoni

அத்துடன் 2011இல் கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து 28 வருடங்கள் கழித்து உலக கோப்பையை வென்ற அவர் 2013ஆம் ஆண்டு இதே இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராஃபியில் தாம் உருவாக்கிய விராட் கோலி, ரெய்னா போன்ற இளம் வீரர்களை வைத்து கோப்பையை வென்று தன்னை மிகச்சிறந்த கேப்டன் என்பதை நிரூபித்து காட்டினார். அந்த வகையில் 3 விதமான ஐசிசி வெள்ளைப் பந்து உலக கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் செய்ய முடியாத சாதனையை படைத்த அவர் 2007 – 2016 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவை தலைமை தாங்கிய 9 ஐசிசி தொடர்களில் 3 கோப்பைகளை வென்று கொடுத்தார்.

- Advertisement -

ஆனால் வரலாற்றில் அவரை தவிர்த்து எஞ்சிய கேப்டன்கள் தலைமை தாங்கிய 18 ஐசிசி தொடர்களில் இந்தியா வெறும் 2 கோப்பைகளை (1983 மற்றும் 2002) மட்டுமே வென்றது. தன்னுடைய காலத்தில் இருந்த அத்தனை வீரர்களின் திறமையையும் அவர்களை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி தெரிந்து வைத்திருந்த தோனி அழுத்தமான உலகக்கோப்பை போட்டிகளில் முக்கிய நேரங்களில் சரியான முடிவுகளை எடுத்து செய்த அபாரமான கேப்டன்ஷிப் தான் இந்த வெற்றிகளுக்கு காரணமாகும். ஆனால் அவருக்குப் பின் பொறுப்பேற்ற விராட் கோலியும் தற்போது ரோகித் சர்மாவும் அவரது உச்சத்தில் கால்வாசியை கூட எட்ட முடியவில்லை என்பது அவருடைய தனித்துவத்தை காட்டுகிறது.

Gambhir

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற பேட்ஸ்மேன்கள் உருவாகலாம். ஆனால் 3 விதமான ஐசிசி உலக கோப்பைகளை வென்று கொடுத்த தோனியை போன்ற ஒரு கேப்டன் கிடைக்க மாட்டார் என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய கிரிக்கெட்டில் யாராவது வந்து ரோகித் சர்மா அடித்துள்ள இரட்டை சதங்களை விட அதிகமாக அடிக்கலாம். அதே போல் விராட் கோலி அடித்துள்ள சதங்களை விட அதிக சதங்களை அடிக்கலாம். ஆனால் 3 விதமான ஐசிசி உலகக் கோப்பைகளையும் வேறு எந்த இந்திய கேப்டனாலும் வெல்ல முடியும் என்று எனக்கு தோன்றவில்லை” எனக் கூறினார்.

முன்னதாக 2007 மற்றும் 2011 உலகக்கோப்பை பைனல்களில் அதிக ரன்கள் குவித்து கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் எப்போதுமே தோனி மட்டும் தனியாளாக கோப்பையை வெல்லவில்லை என்ற விமர்சனங்களை சமீப காலங்களில் வைத்து வருபவர். அப்படிப்பட்ட கம்பீரே இங்கிலாந்துக்கு எதிரான தோல்விக்கு பின் தோனியின் அருமையை உணர்ந்து அவரைப் போன்ற ஒரு கேப்டன் இனி இந்தியாவுக்கு கிடைக்க மாட்டார் என்ற வகையில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement