ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மிகுந்த பரபரப்பான தருணங்களை கடந்து வெற்றிகரமாக 3-வது வாரத்தை தொட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த முறை 10 அணிகள் விளையாடுவதால் தற்போது நடைபெற்று வரும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான போட்டி கடந்த வருடங்களை விட கடுமையாக நிலவி வருகிறது. அதில் நிறைய கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் என பெயரெடுத்த நடப்புச் சாம்பியன் சென்னையும் மும்பையும் அடுத்தடுத்த தோல்விகளால் புள்ளி பட்டியலில் கடைசி இடங்களில் திண்டாடுகின்றன.
ஆனால் புதிய அணிகளான குஜராத் மற்றும் லக்னோ அடுத்தடுத்த வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்து எதிரணிகளை மிரட்டுகின்றன. அதேபோல் டு பிளேஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தனது முதல் 6 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தீர்மானிக்கும் டாப் 4 இடங்களுக்குள் வெற்றி நடை போட்டு வருகிறது.
பினிஷெர் டிகே:
அந்த அணிக்கு பேட்டிங்கில் டு பிளேஸிஸ், கிளன் மேக்ஸ்வெல், விராட் கோலி ஆகியோரை விட கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடி சரவெடியாக ரன்களை குவித்து அடுத்தடுத்த வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றி வரும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்த வருட ஐபிஎல் தொடரில் ஒரு மிகச்சிறந்த பினிஷராக செயல்பட்டு வருகிறார். அதிலும் இந்த வருடம் அவர் பங்கேற்ற முதல் 6 போட்டிகளில் முறையே 32*(14), 14*(7), 44*(23), 7*(2), 34(14), 66*(34) என 197 ரன்களை 209 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் விளாசி எதிரணிகளை தெறிக்கவிட்டு வருகிறார்.
இந்த 6 போட்டிகளில் ஏற்கனவே 2 ஆட்ட நாயகன் விருதுகளை வென்று பெங்களூருவின் கருப்பு குதிரையாக செயல்பட்டு வரும் அவர் 5 போட்டிகளில் ஆட்டமிழக்காமல் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார். அதிலும் ஹர்டிக் பாண்டியா, பொல்லார்ட் போன்ற இதர அணி பினிஷர்களைவிட மகத்தான பினிஷராக உருவெடுத்துள்ள அவர் அனைவரின் பாராட்டு மழையில் நனைந்து வரும் நிலையில் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் இந்தியாவிற்காக விளையாடி கோப்பையை வெல்வதே தமது லட்சியம் என தெரிவித்து வருகிறார்.
வயச பாக்காதீங்க:
இருப்பினும் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா போன்ற இளமையான வீரர்களுக்கு மத்தியில் 36 வயதை கடந்துள்ள அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் வயதை பார்க்காமல் அபாரமாக செயல்படும் தினேஷ் கார்த்திக் திறமையை பார்த்து இந்திய அணியில் தாராளமாக வாய்ப்பு கொடுக்கலாமே என்று இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது பற்றித் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விளையாட விரும்புவதாக கூறியுள்ளார். எனவே அவரின் வயதைப் பற்றி ஆராயாமல் அவர் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுகிறார் என்பதை மட்டுமே நான் பார்க்கிறேன். அவர் தனது அபார செயல்பாடுகளால் போட்டியின் தலையெழுத்தையே மாற்றி வருகிறார். அவர அவரது அணிக்கான வேலையை கச்சிதமாக முடிக்கிறார். அதிலும் டி20 உலக கோப்பையில் 6 அல்லது 7-வது இடத்தில் ஒருவர் எப்படி விளையாட வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்களோ அந்த வேலையை மிகச் சிறப்பாக செய்து வருகிறார்” என்று கூறினார்.
திறமையை பாருங்க:
என்னதான் வயசானாலும் ஸ்டைல் மாறவில்லை என்பதற்கு ஏற்றார்போல் இளம் வயது வீரர்களை விட அசத்தலாக செயல்பட்டு வரும் தினேஷ் கார்த்திக் விளையாடுவதற்கு வயது ஒரு தடையல்ல என்று ஒவ்வொரு போட்டியிலும் நிரூபித்து வருகிறார். இத்தனைக்கும் கடைசியாக கடந்த 2019-ஆம் ஆண்டு இந்தியாவிற்காக விளையாடிய அவர் ஐபிஎல் தொடரிலும் உள்ளூர் கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணிக்காகவும் அவ்வப்போது மட்டுமே விளையாடியிருந்தார். இடையில் இங்கிலாந்தில் வர்ணனையாளராக பணிபுரிந்த அவர் தொடர்ச்சியாக கிரிக்கெட்டில் விளையடாத போதிலும் தற்போது ஐபிஎல் தொடரில் நேரடியாக களமிறங்கியதும் சரவெடியாக பேட்டிங் செய்கிறார்.
அதிலும் டெல்லிக்கு எதிரான 6-வது போட்டியில் 92/5 என பெங்களூரு தடுமாறிய போது களமிறங்கிய அவர் மைதானத்தின் நாலா புறங்களிலும் பவுண்டரிகளை பறக்கவிட்டு 66* ரன்கள் குவித்து தனி ஒருவனை போல வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.
இதையும் படிங்க : 5 வருடம், 100 மேட்ச் ! எதுவுமே ஒர்க் ஆகாமல் பார்மின்றி தவிக்கும் அசுரன் முகம் விராட் கோலி – அதிர்ஷ்டம் இல்லையா
அந்த நிலையில் ஏப்ரல் 19-ஆம் தேதி ந்டந்த லக்னோவுக்கு எதிராக நடந்த 7-வது போட்டியிலும் கடைசி நேரத்தில் களமிறங்கிய அவர் 8 பந்துகளில் 1 சிக்சர் உட்பட 13* ரன்கள் எடுத்து மீண்டும் அவுட்டாகாமல் இருந்தார். இப்படி அசராமல் எதிரணி பவுலர்களை புரட்டி எடுக்கும் அவரின் ஆட்டத்தில் 36 வயது கடந்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என்பதால் கண்டிப்பாக அவருக்கு டி20 உலக கோப்பையில் வாய்ப்பு கொடுப்பதில் எந்த தவறுமில்லை.