அஷ்வின் சிறப்பா ஆடுறாரு. ஆனாலும் டி20 உ.கோ டீமில் தேவையில்லை – காரணத்தை கூறும் முன்னாள் வீரர்

Ashwin
- Advertisement -

வரும் ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு நாடுகளில் துவங்கும் வரலாற்றின் 15ஆவது ஆசிய கோப்பையில் பங்கேற்பதற்காக ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் தொடராக நடைபெறும் இந்த தொடரிலிருந்து தான் இறுதிக்கட்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட உள்ளது. அதன் காரணமாக வரும் ஆகஸ்ட் 28இல் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிகளை விட இந்த தொடரில் யார்யார் சிறப்பாக செயல்பட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Ravichandran Ashwin

குறிப்பாக தமிழகத்தின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த 2010 முதல் 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக செயல்பட்டு வந்த அவர் கடந்த 2017 சாம்பியன்ஸ் டிராபியில் ஓரளவு சுமாராக செயல்பட்டார் என்பதற்காக மொத்தமாக கழற்றி விடப்பட்டார்.

- Advertisement -

அசத்துவாரா அஷ்வின்:
இருப்பினும் ஐபிஎல் தொடரில் முடிந்தளவு அசத்தி வந்த அவருக்கு 2020 வாக்கில் அவருக்கு மாற்றாக வந்த சஹால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் பார்மை இழந்தது சாதகமாக மாறியது. அதனால் 4 வருடங்கள் கழித்து கடந்த வருடம் துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் நேரடியாக தேர்வாகும் வாய்ப்பு கிடைத்தது. அதில் முழுமையான வாய்ப்பு பெறாத அவர் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டு அதைத் தொடர்ந்து நடந்த நியூசிலாந்து தொடரிலும் அசத்தினார். ஆனால் அதன்பின் காயத்தால் வெளியேறிய அவரை கண்டு கொள்ளாத தேர்வுக்குழு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் ஆல்-ரவுண்டராக அசத்திய போதிலும் அதன்பின் நடந்த தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து டி20 தொடர்களில் தேர்வு செய்யவில்லை.

ashwin

அந்த நிலையில் நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 8 மாதங்கள் கழித்து மீண்டும் டி20 அணிக்கு விளையாட தேர்வான அவர் 3 போட்டிகளில் 3 விக்கெட்களை 6.66 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்து சிறப்பாகவே செயல்பட்டார். அதனால் இந்த ஆசிய கோப்பையில் தேர்வு செய்யப்பட்டுள்ள அவர் நல்ல எக்கானமியில் பந்து வீசினாலும் விக்கெட் தேவைப்படும் போது அதை எடுத்து கொடுப்பவராக செயல்படுவதில்லை என்பதை அவர் மீதான ஒரே குறையாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

எந்த பயனுமில்லை:
மேலும் சஹால் மீண்டும் நல்ல பார்முக்கு திரும்பியுள்ளதால் இந்த ஆசிய கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்தால்தான் டி20 உலக கோப்பை அவருக்கான வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வருடம் போல இந்த டி20 உலகக் கோப்பையிலும் அஷ்வின் விளையாட அதிக வாய்ப்புள்ளது என்றாலும் அதனால் எந்த பயனுமில்லை என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தை விளக்கி அவர் பேசியது பின்வருமாறு.

Chopra

“ரவிச்சந்திரன் அஷ்வின் கடந்த உலக கோப்பையிலும் கற்பனைக்கு எட்டாத வகையில் திடீரென்று தேர்வு செய்யப்பட்டார். இப்போதும் உலக கோப்பைக்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தேர்வு செய்யப்பட்ட அவர் தற்போது ஆசிய கோப்பையில் விளையாட உள்ளார். இதை வைத்து பார்க்கும்போது இம்முறையும் அவர் உலக கோப்பையில் விளையாடுவார் என்று தெரிகிறது”

- Advertisement -

“இருப்பினும் இது யார் சிறந்தவர், யார் சுமாரானவர் என்பதைப் பொறுத்ததல்ல. யார் உங்களின் தேவைக்கேற்ற சிறந்த ஸ்பின்னர் என்பதைப் பொருத்தது. கடந்த உலகக் கோப்பைக்கு பின் 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 6 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அந்த வகையில் ஒரு போட்டிக்கு ஒரு விக்கெட்டுக்கும் மேல் எடுப்பது மோசமானதல்ல. அவரின் சராசரி 20 மற்றும் எக்கனாமி 6.1 என்பது இந்த 5 போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்பதை காட்டுகிறது”

ashwin

“ஆனால் இந்த வருட ஐபிஎல் தொடரில் முழுமையான 17 போட்டிகளில் விளையாடிய அவர் வெறும் 12 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். சுமார் 7 என்ற எக்கனாமியில் பந்து வீசினார். அந்த வகையில் நல்ல எக்கனாமியில் பந்துவீசும் அவரின் சராசரி 40 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 33 என சுமாராக உள்ளது. அந்த வகையில் நீங்கள் அவரிடம் ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய வேலையை கொடுத்தால் அவர் கச்சிதமாக செய்வார்.

- Advertisement -

ஆனால் அவரிடமிருந்து விக்கெட்டுகள் வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அது நடக்காது என்பதை எதிர்கொள்ள தயாராகிக் கொள்ளுங்கள். எனவே அவருக்கு நீங்கள் என்ன வேலை கொடுக்கப் போகிறீர்கள் என்பது முக்கியமானது” எனக்கூறினார்.

இதையும் படிங்க : சுதந்திரதின ஸ்பெஷல் : இந்திய தேசப்பற்றை வெளிப்படுத்தி இந்தியனுக்கு சான்றாக நின்ற தோனியின் 5 தருணங்கள்

அவர் கூறும் இந்த கண்ணோட்டத்தில் வெறும் 1 சுழல்பந்து வீச்சாளர் மட்டும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படும் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையில் சஹாலை தாண்டி அஷ்வின் தேர்வாவது கடினமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Advertisement