சுதந்திரதின ஸ்பெஷல் : இந்திய தேசப்பற்றை வெளிப்படுத்தி இந்தியனுக்கு சான்றாக நின்ற தோனியின் 5 தருணங்கள்

Dhoni
- Advertisement -

ஆகஸ்ட் 15ஆம் தேதியான இன்று இந்தியா தனது 75 வருட சுதந்திர மூச்சு காற்றை சுவாசித்து 76ஆவது சுதந்திர தினத்தை கோலாகலமாகக் கொண்டாடுகின்றது. அறியாமையால் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு பொறுமையின் எல்லைகளைக் கடந்து தியாகிகளின் வருகையால் கொதித்தெழுந்த இந்தியா அகிம்சை வழியில் போராடி கடந்த 1947 ஆகஸ்ட் 15இல் சுதந்திரமடைந்தது. அப்போது முதல் பல்வேறு துறைகளில் சுதந்திரமாக செயல்பட்டு உலக அளவில் முதலிடத்தை பிடிக்க போட்டி போட்டு வரும் இந்தியா விளையாட்டு துறையில் குறிப்பாக ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்த கிரிக்கெட்டில் இன்று அவர்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு இன்று நம்பர் ஒன் அணியாக உருவெடுத்துள்ளது. 1983இல் கபில்தேவ் தலைமையில் உலக கோப்பையை வென்றபோது இந்தியாவில் மிகப்பெரிய மறுமலர்ச்சி கண்ட கிரிக்கெட் இன்று நம்பர் ஒன் விளையாட்டாக உருவாகியுள்ளது.

Trophies Won By MS Dhoni

- Advertisement -

இந்த மாபெரும் வளர்ச்சிக்கு சசின் டெண்டுள்கர், சௌரவ் கங்குலி உள்ளிட்ட ஏராளமான ஜாம்பவான்கள் தங்களது அளப்பரிய பங்காற்றிய நிலையில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த முன்னாள் வீரர் எம்எஸ் தோனி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனாக இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர் எனக்கூறலாம். முதலில் இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் அதிரடியாக ரன்களை சேர்க்க வேண்டும் என்று அடிப்படை இலக்கணத்தை மாற்றிய அவர் அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பொறுப்பில் 2007, 2011, 2013 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற 3 விதமான ஐசிசி உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சரித்திரம் படைத்துள்ளார்.

தோனியும் தேசப்பற்றும்:
இன்றைய இந்திய அணியில் விளையாடும் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட 70% மேற்பட்ட வீரர்களுக்கு அப்போதே வாய்ப்பளித்து வளர்த்து வளமான வருங்காலத்தை கட்டமைத்த அவர் இந்தியாவில் உள்ள பல இளம் வீரர்களுக்கும் இளைஞர்களுக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார். பொதுவாகவே இந்தியாவுக்காக விளையாடும் வீரர்கள் தேசப்பற்றுடன் விளையாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை என்றாலும் அவர்களுக்கு முன்னோடியாக முக்கிய நேரங்களில் தேசப்பற்றை வெளிப்படுத்திய தோனியின் 5 தருணங்களை பற்றி பார்ப்போம்:

5. ஒற்றைக்காலில் தயார்: தனது கேரியரில் பெரும்பாலும் காயங்களை தவிர்த்து நாட்டுக்காக அதிக போட்டிகளில் விளையாடிய தோனி கடந்த 2016இல் நடந்த ஆசிய கோப்பைக்கு தயாராக உடற்பயிற்சி செய்யும் போது காயமடைந்தார். அதனால் அந்த தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் பார்த்திவ் படேல் பேக்-அப் கீப்பராக சேர்க்கப்பட்ட நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது.

- Advertisement -

அப்போது அவரை சந்திக்கச் சென்ற தம்மிடம் “என்னுடைய ஒற்றைக்கால் இல்லையென்றாலும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி என்றால் நிச்சயம் விளையாடுவேன், எனவே நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று தோனி கூறியதாக அந்த அணியை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியிருந்தார். அதன்பின் பெரிய அளவில் காயமடையாத தோனி தலைமையில் அந்த ஆசிய கோப்பை இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.

Dhoni

4. தேசியக்கொடி பாசம்: இந்தியாவுக்காக விளையாடும் பேட்ஸ்மேன்கள் பிசிசிஐ லோகோவை மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில் 90களில் நட்சத்திரமாக உருவெடுத்த சச்சின் முதல் முறையாக தேசிய கொடியை ஹெல்மெட்டில் அணிந்து விளையாடும் நாட்டுப்பற்றை கொண்டு வந்தார்.

- Advertisement -

இருப்பினும் தாம் ஒரு விக்கெட் கீப்பர் என்பதால் களத்தில் நிறைய தருணங்களில் தேசியக்கொடி இருக்கும் ஹெல்மெட்டை தலைகீழாக மண்ணை பார்க்கும் வகையில் வைக்க வேண்டிய சூழ்நிலை வரும். எனவே அதை விரும்பாத தோனி விக்கெட் கீப்பிங் செய்வதற்காக தேசியக்கொடி இல்லாமல் தனியாக ஒரு ஹெல்மட்டையும் பேட்டிங் செய்யும்போது தேசியக் கொடியுடன் கூடிய ஹெல்மெட்டையும் பயன்படுத்தி வந்தது தேசியக் கொடியின் மீது அவர் வைத்திருக்கும் மரியாதையும் காட்டுகிறது.

Dhoni

3. தேசமே முக்கியம்: பொதுவாக எந்த ஒரு சராசரி இந்தியக் குடிமகனும் திருமணத்திற்கு பின் தனது முதல் குழந்தையை பெற்றெடுக்கும் போது அருகில் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அந்த வகையில் கிரிக்கெட்டில் நிறைய வீரர்கள் குழந்தை பிறப்புக்காக விளையாடிக் கொண்டிருக்கும்போதே அந்த தொடரிலிருந்து பாதியில் வெளியேறி பின்பு மீண்டும் இணையும் நிகழ்வுகளைப் பார்த்து வருகிறோம்.

- Advertisement -

ஆனால் தாய்நாட்டை விட எதுவும் முக்கியமில்லை என்ற கோட்பாட்டைக் கொண்ட தோனி கடந்த 2015இல் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டுக் கொண்டிருந்த போது அவரின் மகள் ஜிவா தோனி இந்தியாவில் பிறந்தார்.

Ziva

இருப்பினும் அணியை விட்டுவிட்டு நாடு திரும்பாமல் தொடர்ந்து இந்தியாவுக்காக ஆஸ்திரேலியாவில் விளையாடிய அவரிடம் குழந்தையை பார்க்க செல்லவில்லையா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது “நான் தேசத்துக்காக கடமையாற்றும் பணியில் இருக்கிறேன். எனவே மற்ற அனைத்தும் காத்திருக்கலாம்” என்று ஒரு தகப்பன் என்பதைவிட முதலில் இந்தியன் என்ற வகையில் பதிலளித்தார்.

2. ராணுவ மரியாதை: இன்று நாம் வீடுகளில் சுதந்திரமாக செயல்படுவதற்கு இந்திய எல்லையில் எத்தனையோ ஒரு ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியாற்றுகின்றனர். அந்த வகையில் தேசத்துக்காக ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பதை ஆசையாக கொண்டிருக்கும் பலரில் தோனியும் ஒருவராவார்.

Dhoni 1

கிரிக்கெட்டிக்கு வந்ததால் அந்த வேலைக்கு முழுமையாக செல்ல முடியாத அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பே பாராசூட் ராணுவப் பிரிவில் கௌரவ லெட்டினன்ட் பதவியைப் பெற்று நிறைய தருணங்களில் அந்தப் பிரிவு ராணுவ வீரர்களுடன் இணைந்து நேரம் கிடைக்கும்போது பணியாற்றுபவராக உள்ளார். மேலும் அந்த லோகோவை தனது கையுறையில் பயன்படுத்தியதும் அதற்கு ஐசிசி மறுப்பு தெரிவித்ததும் மறக்க முடியது. குறிப்பாக 2019இல் நிகழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடுவாரா அல்லது எப்போது ஓய்வு பெறுவார் என்ற கேள்வி எழுந்த நிலையில் ஜூலை 31 – ஆகஸ்ட் 15 வரை ராணுவத்தில் பணியாற்ற சென்ற அவர் தேசப்பற்றை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

1. தேசமே முடிவு: பொதுவாக தோனியை போன்ற ஜாம்பவான் வீரர்கள் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரில் அல்லது சொந்த மண்ணில் நடைபெறும் ஏதாவது ஒரு தொடரில் அல்லது ஏதோ ஒரு செய்தியாளர் சந்திப்பில் ஓய்வு பெறுவார்கள்.

Dhoni DP

ஆனால் 2019இல் கடைசியாக விளையாடியிருந்த அவர் மேற்கொண்டு விளையாடுவாரா அல்லது எப்போது ஓய்வு பெறுவார் என்று தினம்தோறும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் 2020இல் இந்தியா கொண்டாடிய 73-வது சுதந்திர தினத்தின் இரவு 7.29 மணிக்கு சாதாரண இன்ஸ்டாகிராம் போஸ்ட் வாயிலாக ஓய்வு பெறுவதாக எளிமையாக அறிவித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாகினர். உலகிலேயே நாட்டுப்பற்றுடன் சுதந்திர தினத்தில் ஓய்வை அறிவித்த கிரிக்கெட் வீரர் என்றால் அது தோனி என்று கூறும் வகையில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்திய அவருடன் ரெய்னாவும் நட்புக்கு இலக்கணமாக விடைபெற்றார்.

Advertisement