ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியில் துணைக் கேப்டன் சுப்மன் கில் கடைசி நேரத்தில் கழற்றி விடப்பட்டார். கடைசியாக விளையாடிய 18 சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு அரை சதம் கூட அடிக்காத அவர் மோசமான ஃபார்மில் இருக்கிறார். அதனால் அவரை கழற்றி விட்ட தேர்வுக்குழு சஞ்சு சாம்சனை ஓப்பனிங்கில் விளையாட வைப்பதற்கான முடிவை எடுத்துள்ளது.
அதற்காக பேக்-அப் கீப்பர் ஜிதேஷ் சர்மாவை கழற்றி விட்ட தேர்வுக்குழு கடைசி நேரத்தில் இசான் கிசானை தேர்ந்தெடுத்துள்ளது. இந்திய அணியில் கம்பேக் கொடுப்பதற்காக உள்ளூர் போட்டிகளில் போராடி வந்த அவர் சயீத் முஸ்டாக் அலி 2025 கோப்பையில் 500+ ரன்கள் அடித்தார். குறிப்பாக கேப்டனாக ஃபைனலில் சதமடித்த அவர் ஜார்கண்ட் முதல் முறையாக கோப்பையை வெல்ல உதவினார்.
கதவை உடைத்துக்கொண்டு:
அதனால் அவரை தேர்ந்தெடுத்துள்ள தேர்வுக்குழு ஃபினிஷிங் செய்வதற்காக ரிங்கு சிங்கை சேர்த்தது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் சாம்சன், இஷான், ரிங்கு ஆகியோர் உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாக போராடி கதவை உடைத்துக்கொண்டு 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்குள் கம்பேக் கொடுத்துள்ளதாக தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வாழ்க்கையில் உங்களுடைய நேரம் வரும் என்று நம்பிக்கையுடன் அமைதியாக இருப்பது மிகவும் கடினமானதாகும். இந்த 3 பையன்கள் கடந்த 4 மாதங்களில் அதைச் சரியாக செய்து இந்திய அணிக்குள் வந்துள்ளனர். சாம்சன், இஷான் கிசான் ஆகியோருடன் அபாரமான ரிங்கு சிங். இவர்கள் கதவை உடைத்துக்கொண்டு இந்திய அணிக்குள் கம்பேக் கொடுத்துள்ளனர்”
டிகே பாராட்டு:
“கடைசியாக இஷான் 2023இல் இந்தியாவுக்காக விளையாடினார். அப்போதிலிருந்து வெளியே இருந்த அவர் உள்ளூர் கிரிக்கெட்டுக்குச் சென்று விளையாடினார். இந்த வருடம் தமிழ்நாடுக்கு எதிராக சதமடித்த அவர் சயீத் முஸ்டாக் அலி கோப்பையில் அதிக ரன்கள் குவித்து ஜார்கண்ட் அணியை சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். சாம்சன் ஓப்பனிங்கில் தமக்குக் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக விளையாடினார்”
இதையும் படிங்க: சூரியகுமார் யாதவ் பேட்டிங்கில் அசத்த வேண்டிய நேரம் வந்தாச்சு.. கப்புக்கு அவரோட பார்ம் முக்கியம் – விவரம் இதோ
“2022 டி20 உலகக்கோப்பை முதலே இந்திய அணியை சுற்றியிருந்த அவர் இம்முறை தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதில் சந்தேகமில்லை. கடைசியாக ரிங்கு சிங். கொல்கத்தா அணியில் இளம் வீரராக அவரைப் பார்த்துள்ளேன். அங்கிருந்து சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய வீரராக வளர்ந்துள்ள அவர் 2024 டி20 உலகக் கோப்பையில் தேர்வாகியும் காம்பினேஷன் காரணத்தால் விளையாடவில்லை. ஆனால் இம்முறை அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். சிறிய நகரங்களிலிருந்து வந்துள்ள இந்த இளம் ஹீரோக்களுக்கு வாழ்த்துக்கள். இம்முறை இந்திய அணி திடமாகத் தெரிகிறது” என்று கூறினார்.



