WTC Final : பிட்ச்ச நேரடியா பாத்துட்டேன், அவர கழற்றி விட்டு அந்த டெம்ப்ளேட் யூஸ் பண்ணுங்க – இந்திய அணிக்கு டிகே கோரிக்கை

Rohit Sharma Dinesh Karthik
- Advertisement -

இங்கிலாந்தில் இருக்கும் புகழ் பெற்ற லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 7ஆம் தேதி 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி துவங்குகிறது. அதில் லீக் சுற்றில் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியாவை ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா எதிர்கொள்கிறது. உலக டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை தீர்மானிக்கும் இந்த போட்டியில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ரோகித் சர்மா, டேவிட் வார்னர் போன்ற நிறைய உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்திருப்பதால் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் 2019/20, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே தோற்கடித்து சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பையிலும் வென்ற தன்னம்பிக்கையுடன் இந்தியா களமிறக்கிறது. முன்னதாக சௌதம்டன் நகரில் நடைபெற்ற கடந்த ஃபைனலில் அடிக்கடி மாறக்கூடிய இங்கிலாந்தின் வானிலையை சரியாக கணிக்க தவறிய இந்தியா மழை பெய்து ஈரமாக இருந்த ஸ்விங் வேகத்துக்கு சாதகமான சூழ்நிலையில் அஸ்வின் – ஜடேஜா ஆகிய 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்கியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மறுபுறம் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கிய நியூஸிலாந்து போட்டியின் அனைத்து நாட்களிலும் ஆதிக்கம் செலுத்தி முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது.

- Advertisement -

டிகே கோரிக்கை:
அதனால் இம்முறை ஷமி, சிராஜ், உமேஷ் ஆகியோருடன் ஆல் ரவுண்டரான ஷார்துல் தால்கூர் 4வது பவுலராகவும் அஸ்வினை விட பேட்டிங்கில் அசத்தக்கூடிய ஜடேஜா ஒரே ஒரு ஸ்பின்னராகவும் விளையாட வேண்டும் என்ற கோரிக்கைகள் காணப்படுகின்றன. ஆனால் சௌதம்டன் மட்டுமல்லாமல் இங்கிலாந்தில் இருக்கும் இதர மைதானங்களை காட்டிலும் இப்போட்டி நடைபெறும் ஓவல் சுழலுக்கு அதிக சாதகமாக இருக்கும் என்பதால் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவருமே விளையாட வேண்டுமென ரிக்கி பாண்டிங் போன்ற நிறைய முன்னாள் வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த ஃபைனலில் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் இப்போட்டி நடைபெறும் ஓவல் மைதானம் வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் அவரை கழற்றி விட்டு உமேஷ் யாதவுடன் தாக்கூர் 4வது பவுலராக விளையாடும் டெம்ப்ளேட்டை இந்தியா பயன்படுத்த வேண்டுமென தினேஷ் கார்த்திக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த போட்டியில் வர்ணையாளராக இருக்கும் அவர் ஓவல் பிட்ச்சை நேரடியாக பார்த்து தனது ட்விட்டரில் ஏற்கனவே பதிவிட்டிருந்த நிலையில் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அஸ்வின் விட்டுவிட்டு 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுங்கள். சௌதம்டன் மைதானத்தில் அஸ்வினின் பவுலிங்கை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் பார்த்தேன். ஆனால் தோல்வியை தந்த அந்த யுக்தியை மீண்டும் பயிற்சியாளர் பின்பற்றுவாரா? என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது. உமேஷ் யாதவ் வலைப்பயிற்சியில் சிறப்பாக பந்து வீசினார். மிகவும் கூர்மையாக செயல்பட்ட அவர் உடலளவிலும் ஃபிட்டாக இருக்கிறார். அதனால் இந்தியா அவரை தேர்வு செய்யும் என்று நினைக்கிறேன்”

“ஓவல் மைதானத்தில் ஸ்கொயர் பகுதி வரை நிறைய பிட்ச்கள் இருக்கும். பொதுவாக ஒரு மைதானத்தில் 6 முதல் 7 பிட்ச்கள் மட்டுமே இருக்கும். ஆனால் ஓவல் மைதானத்தில் 20 முதல் 23 வரை இருக்கிறது. அதற்கான காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்தியாவில் இருக்கும் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தை போல இது பேட்ஸ்மேன்ன்கள் ராஜாங்கம் நடத்தக்கூடிய இடமாகும். குறிப்பாக வெளிப்புறம் மைதானம் மின்னலைப் போல் வேகமானது”

இதையும் படிங்க:WTC Final : இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? நாசர் ஹுசேன், ஏபிடி கணிப்பு

“அத்துடன் டாஸ் என்பது இந்த போட்டியின் வெற்றியாளரை தீர்மானிப்பதாக இருக்கும். குறிப்பாக யார் டாஸ் வென்றாலும் முதலில் பந்து வீசினால் வேகம் மற்றும் மித வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே இந்த போட்டியில் டாஸ் வெல்லும் அணி நிச்சயமாக பெரிய சாதகத்தை சந்திக்கும்” என்று கூறினார். முன்னதாக 2021இல் கடைசியாக இங்கு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அஸ்வின் இல்லாமல் தாக்கூர் – ஜடேஜா, உமேஷ், ஷமி, பும்ரா ஆகியோருடன் களமிறங்கிய இந்தியா 157 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement