- Advertisement -
இந்திய கிரிக்கெட்

WTC ஃபைனல் : கோப்பை வெல்ல அஷ்வின் – ஜடேஜா ஜோடியில் ஒருவருக்கே இடம், அக்சருக்கு பதில் அவர் வேணும் – டிகே அதிரடி

டெஸ்ட் கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை வரலாற்றில் 2வது முறையாக கடந்த 2021 முதல் நடைபெற்று வருகிறது. இதற்கான லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியாவும் 2வது இடம் பிடித்த இந்தியாவும் வரும் ஜூன் 7 முதல் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் கோப்பைக்காக பலப்பரீச்சை நடத்த உள்ளன. முன்னதாக முதல் தொடரில் லீக் சுற்றில் விராட் கோலி தலைமையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளை பெற்ற இந்தியா ஃபைனலில் நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்தது.

எனவே இம்முறை எப்படியாவது கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க போராடும் இந்தியா அதற்கு முதலில் சிறந்த 11 பேர் அணியை தேர்வு செய்ய வேண்டியது கட்டாயமாகிறது. ஏனெனில் ஸ்விங் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கக்கூடிய கால சூழ்நிலைகளை கொண்ட இங்கிலாந்தில் கடந்த முறை நடைபெற்ற ஃபைனலில் இந்தியாவில் விளையாடுவது போலவே 2 ஸ்பின்னர்கள் மற்றும் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கியது. குறிப்பாக விளையாடும் 11 பேர் அணியை தைரியமாக இந்தியா ஒருநாள் முன்பாகவே அறிவித்தது.

- Advertisement -

டிகே அதிரடி:
ஆனால் கடைசி நேரத்தில் மேக கூட்டங்களுடன் கூடிய மழை பொழிந்த ஈரப்பதமான சூழ்நிலையில் நடந்த அந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் தான் ஆதிக்கம் செலுத்தினர். அதில் பும்ரா உள்ளிட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சொதப்பிய நிலையில் அஷ்வின் சிறப்பாக செயல்பட்டாலும் ஜடேஜா பெரிய அளவில் பந்து வீசும் வாய்ப்பை கூட பெற முடியாத அளவுக்கு கால சூழ்நிலைகள் இருந்தது. இருப்பினும் தற்போது மிகச்சிறந்த ஆல் ரவுண்டர்களாக நடைபெற்று முடிந்த பார்டர் – காவாஸ்கர் கோப்பையை வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்ட அவர்கள் இந்த ஃபைனலில் ஜோடியாக விளையாடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே கடந்த ஃபைனலில் செய்த தவறை இம்முறை செய்யக்கூடாது என்று தெரிவிக்கும் தினேஷ் கார்த்திக் அஷ்வின் – ஜடேஜா ஆகியோரில் ஒருவர் மட்டுமே விளையாட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக சுழலுக்கு சாதகமில்லாத இங்கிலாந்தில் ஜடேஜா விளையாட வேண்டும் என தெரிவிக்கும் அவர் அக்சர் பட்டேல் இடத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு இதே ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 50 வருடங்களுக்குப் பின் வெற்றி பெற ஆல் ரவுண்டராக அசத்தி முக்கிய பங்காற்றிய ஷார்துல் தாகூர் விளையாட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி பிரபல கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. ” வெளிப்படையாக உண்மையை பேச வேண்டுமெனில் அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் அக்சர் பட்டேல் ஃபைனலை தவற விட வேண்டும். அவரது இடத்தை ஷார்துல் தாக்கூர் எடுத்துக் கொள்வார் என்று நினைக்கிறேன். அத்துடன் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோரில் யாராவது ஒருவர் மட்டுமே விளையாடுவார்கள். உண்மையை சொல்ல வேண்டுமெனில் கடந்த முறை இந்தியா 2 ஸ்பின்னர்களை தேர்வு செய்தது. ஆனால் அவர்களை அதிகம் பந்து வீச பயன்படுத்தவில்லை”

“அது ஒரு மோசமான போட்டியாக அமைந்தது. இருப்பினும் தற்போது ஒரு வருடம் முடிந்து புத்துணர்ச்சியான தொடர் நடைபெற்றதால் இம்முறை அந்த போட்டியில் வெல்வதற்கு எது சிறந்த 11 பேர் அணியாக இருக்கும்? என்று நீங்கள் நினைப்பீர்கள். அதற்காக நீங்கள் ஜடேஜா அல்லது அஸ்வினை விட வேண்டிய சூழல் வந்தால் விடுங்கள். அந்த இருவரில் ஜடேஜா சற்று சிறப்பாக பேட்டிங் செய்வர் என்பதால் அவருக்கு அதிக வாய்ப்புள்ளது. அதே போல் இந்த ஆஸ்திரேலிய தொடரில் கேஎஸ் பரத் விக்கெட் கீப்பராக சுமாராக செயல்பட்டதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: இந்தியா ஒன்னும் அவங்க தயவுல ஃபைனலுக்கு போகல, அப்றம் ஏன் நன்றி சொல்லணும் – சுனில் கவாஸ்கர் அதிரடி பேச்சு

அவர் கூறுவது போல கடந்த முறை செய்த தவறை செய்யாமல் இம்முறை இங்கிலாந்தில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் 1 ஸ்பின்னரை தேர்வு செய்தால் தான் வெற்றிக்காக இந்தியா போராட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -