இந்தியா ஒன்னும் அவங்க தயவுல ஃபைனலுக்கு போகல, அப்றம் ஏன் நன்றி சொல்லணும் – சுனில் கவாஸ்கர் அதிரடி பேச்சு

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 1 (4) என்ற கணக்கில் வென்ற இந்தியா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. முன்னதாக இத்தொடரில் ஒய்ட் வாஷ் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா 3வது போட்டியில் அதிரடியான வெற்றி பெற்று தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. அதனால் பின்னடைவை சந்தித்த இந்தியா ஃபைனலுக்கு செல்ல கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

IND vs AUS

- Advertisement -

ஆனால் அஹமதாபாத் நகரில் நடைபெற்ற கடைசி போட்டியில் பிளாட்டான பிட்ச்சில் முதலில் பேட்டிங் செய்து 480 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியாவுக்கு 571 ரன்கள் குவித்து இந்தியா பதிலடி கொடுப்பதற்குள் 4 நாட்கள் முடிந்து விட்டது. அதனால் டிராவை நோக்கி சென்ற அப்போட்டியில் நிச்சயம் வென்றால் தான் ஃபைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையால் இந்திய ரசிகர்கள் கலக்கமடைந்தனர். ஆனால் புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் இலங்கைக்கு எதிராக கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் அனல் பறந்த கடைசி நாளில் கடைசி பந்தில் நியூசிலாந்து போராடி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

கவாஸ்கர் அதிரடி:
அதனால் அகமதாபாத் போட்டி டிராவில் முடிவடைவதற்கு முன்பாகவே ஜூன் 7ஆம் தேதி லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆஸ்திரேலியாவுடன் மோதுவதற்கு இந்தியா தகுதி பெற்றது. அதன் காரணமாக வரலாற்றில் பலமுறை தங்களை ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் தோற்கடித்து வெளியேற்றிய நியூசிலாந்துக்கு இந்திய ரசிகர்களும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் வெளிப்படையாக நன்றி தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும் ஒருவேளை அப்போட்டியில் நியூசிலாந்து தோற்றிருந்தால் கூட அடுத்த போட்டியில் வெற்றி அல்லது டிராவை பதிவு செய்யும் பட்சத்தில் இந்தியா தாமாகவே ஃபைனலுக்கு செல்ல 100% பிரகாச வாய்ப்புகள் இருந்தது.

அப்போதும் நியூசிலாந்தின் மறைமுக உதவி இருந்தாலும் ஏற்கனவே லீக் சுற்றில் புள்ளி பட்டியலில் 2வது இடம் பிடித்த காரணத்தாலேயே அந்த ஃபைனல் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்திருக்கும். இந்நிலையில் கடந்த 2021 முதல் மிகச் சிறப்பாக செயல்பட்டு 2வது அணியாக தகுதி பெறும் செயல்பாடுகளை வெளிப்படுத்திய காரணத்தாலேயே ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெற்றது என்று தெரிவிக்கும் சுனில் கவாஸ்கர் இந்த விஷயத்தில் நன்றி சொல்லும் அளவுக்கு நியூசிலாந்து ஒன்றும் பெரிய உதவிகளை செய்யவில்லை என்று அதிரடியாக பேசியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நியூசிலாந்துக்கு இந்தியா எந்த வகையிலும் கடன் பட்டிருக்கவில்லை என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன சொன்னாலும் நம்பர் 2 அணியாக ஃபைனலுக்கு தகுதி பெறுவதற்கு இந்தியா பல ஆண்டுகளாக சிறப்பான கிரிக்கெட்டை விளையாடியுள்ளது. நியூசிலாந்து வெற்றி பெற்றது அந்நாட்டின் கிரிக்கெட்டுக்கு நல்லதாகும். ஆனால் அதற்காக நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு இந்திய கிரிக்கெட் நன்றிக்கடன் பட்டு நன்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்”

gavaskar

“ஏனெனில் 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் முடிந்தது முதல் கடந்த 2 வருடங்களாக இந்தியா மிகச் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. அதனால் ஃபைனலுக்கு இந்தியா தங்களுடைய சொந்த கையை நம்பி தகுதி பெற்றுள்ளது. யாருடைய உதவியையும் நம்பி ஃபைனலுக்கு தகுதி பெறவில்லை” என்று கூறினார். அவர் கூறுவது போல கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற நியூசிலாந்து அதன் பின் லீக் சுற்றில் சுமாராக செயல்பட்டு 2வது அணியாக கூட ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெறவில்லை.

இதையும் படிங்க:லெஜெண்ட்ஸ் லீக் : வாயில் பேசினாலும் செயலில் நீங்க புயல் தான், வயசானாலும் கம்பீரின் அதிரடி ஆட்டத்தால் ரசிகர்கள் வியப்பு

மறுபுறம் லீக் சுற்றில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஏற்கனவே 2வது இடத்தை பிடித்த காரணத்தாலேயே இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. எனவே கடைசி நேரத்தில் சிறிய உதவி செய்வதற்காக நியூஸிலாந்துக்கு மனதார நன்றி சொல்வதில் தவறில்லை என்றாலும் அதற்காக இந்தியா நன்றி கடன் படவில்லை என்றே சொல்லலாம்.

Advertisement