- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சிராஜை விட தரமான நடராஜன்.. இந்தாங்க ஆதாரம்.. கழற்றிவிட்டது ஏன்? தேர்வுக்குழுவை விளாசும் தமிழக ரசிகர்கள்

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பல விவாதங்களுக்கு மத்தியில் தேர்வாகியுள்ளார். அதே போல ஜெய்ஸ்வால், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ரவீந்திர ஜடேஜா, சஹால், குல்தீப் யாதவ் ஆகியோர் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் சிஎஸ்கே அணியில் அசத்தலாக விளையாடி வரும் சிவம் துபே, காயத்திலிருந்து குணமடைந்து அசத்தலாக விளையாடும் ரிஷப் பண்ட், ராஜஸ்தான் அணியின் கேப்டனாக நல்ல ஃபார்மில் இருக்கும் சஞ்சு சாம்சன் ஆகியோரும் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த அணியில் தமிழகத்திலிருந்து ஒரு வீரர் கூட தேர்வு செய்யப்படாதது தமிழ்நாடு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.

- Advertisement -

கழற்றிவிடப்பட்ட நட்டு:
குறிப்பாக ஐபிஎல் 2024 தொடரில் அசத்தலாக செயல்பட்டு வரும் தமிழக வீரர் நடராஜன் வேகப்பந்து வீச்சு துறையில் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் தரமான ஜஸ்பிரித் பும்ராவுடன் முகமது சிராஜ் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக தேர்வாகியுள்ளனர்.

ஆனால் இதில் முகமது சிராஜ் பெங்களூரு அணியில் 9 போட்டிகளில் வெறும் 6 விக்கெட்டுகள் எடுத்து 9.50 என்ற எக்கனாமியில் சுமாராக பந்து வீசி வருகிறார். அதே போல பஞ்சாப் அணியில் 9 போட்டிகளில் அர்ஷிதீப் சிங் 12 விக்கெட்டுகளை எடுத்தாலும் 9.64 என்ற சுமாரான எக்கனாமியில் தடுமாற்றமாகவே பந்து வீசி வருகிறார். மறுபுறம் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் நடராஜன் வெறும் 7 போட்டிகளிலேயே 13 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

- Advertisement -

மேலும் சிராஜ் மற்றும் அர்ஷிதீப் ஆகியோரை விட 9.00 என்ற ஓரளவு நல்ல ஏங்கனாமியில் நடராஜன் பந்து வீசி வருகிறார். அதே போல சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் அர்ஷிதீப் 8.64, சிராஜ் 8.79 என்ற எக்கனாமியை கொண்டுள்ளனர். மறுபுறம் ஏற்கனவே இந்தியாவுக்காக விளையாடிய 4 போட்டிகளில் நடராஜன் 7.62 என்ற குறைவான எக்கனாமியில் பந்து வீசியுள்ளார். அத்துடன் அந்த இருவரையும் விட பும்ராவை போல நடராஜன் துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசுவதில் வல்லவர் என்பதை அனைவரும் அறிவோம்.

இதையும் படிங்க: பாண்டியா தேர்வு, ரிங்குவுக்கு இடமில்லை.. 2024 டி20 உ.கோ தொடருக்காக பிசிசிஐ வெளியிட்ட 15 பேர் இந்திய அணி

ஆனால் அப்படிப்பட்ட அவரை ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட சேர்க்காத இந்திய தேர்வு குழு ஆவேஷ் கான், கலீல் அஹ்மத் ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ளது. அதனால் கோபமடைந்துள்ள தமிழக ரசிகர்கள் நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள பவுலர்களை விட நடராஜன் புள்ளிவிவரத்திலும் தரத்திலும் தரமான வீரராக இருந்தும் இந்தியாவுக்கு ஏன் தேர்வு செய்யவில்லை? என்று சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -