காலம் கடந்தாச்சு! இனி புலம்புவதில் அர்த்தமில்லை, அவரை கழற்றிவிட்டது சரியான முடிவுதான் – தினேஷ் கார்த்திக்

karthik
- Advertisement -

இலங்கைக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் மார்ச் 4 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மொகாலி மற்றும் பெங்களூரு ஆகிய மைதானங்களில் நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்பதற்காக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மொஹாலியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

INDvsSL

- Advertisement -

முன்னதாக இந்த தொடருக்காக கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட 18 பேர் கொண்ட இந்திய அணியில் கடந்த சில வருடங்களாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திணறி வந்த மூத்த வீரர்கள் அஜிங்கிய ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டார்கள். அவர்களுடன் மூத்த விக்கெட் கீப்பர் ரித்திமான் சஹா மற்றும் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா ஆகியோரையும் இந்திய அணி நிர்வாகம் கழற்றி விட்டது. ஏற்கனவே 35 வயதை கடந்துவிட்ட இவர்கள் சமீப காலங்களாக சிறப்பாக செயல்பட தவறியதால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து தரமான இந்திய அணியை உருவாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்வு குழு அறிவித்துள்ளது.

saha

புலம்பும் சஹா:
இதில் 37 வயதை கடந்துள்ள அனுபவம் மூத்த விக்கெட் கீப்பர் ரித்திமான் சஹா நீக்கப்பட்டது பெரிய சர்ச்சையாக வெடித்தது. ஏனெனில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வண்ணம் இலங்கை தொடர் மட்டுமல்லாது இனி இந்திய அணியில் எப்போதுமே வாய்ப்பு இல்லை என தேர்வு குழு தலைவர் சேட்டன் சர்மா தம்மிடம் தெரிவித்ததாக கடந்த வாரம் சஹா கூறினார். இருப்பினும் நான் பிசிசிஐயில் இருக்கும்வரை இந்திய அணியில் உனக்கு இடம் இருக்கும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்த போதிலும் அதே காரணத்துக்காக அணியில் இடம்பிடித்து இருக்கும்போதே கௌரவத்துடன் ஓய்வு பெறுவது பற்றி சிந்திக்குமாறு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாகவும் அவர் வேதனையில் புலம்பினார்.

போதாக்குறைக்கு ஒரு மூத்த பத்திரிக்கையாளர் தம்மை பேட்டி எடுக்க கேட்டதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவர் மிரட்டல் அளிக்கும் வகையில் பேசியதாக சஹா கூறியது அதைவிட மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி கடந்த 2 வருடங்களாக இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கித் தவித்து வரும் அவர் இப்படி புலம்புவதில் எந்த பயனும் இல்லை என மற்றொரு இந்திய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அறிவுரை வழங்கியுள்ளார்.

- Advertisement -

Saha-1

தரமான விக்கெட் கீப்பர் :
இது பற்றி ஐசிசி அதிகாரபூர்வ இணைய பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “சஹாவுக்கு பாராட்டுக்கள். இந்திய கிரிக்கெட்டுக்காக நீண்டகாலம் பணியாற்றிய பலரில் அவரும் ஒருவர் என நினைக்கிறேன். இப்போதும்கூட அவர் உலகில் ஒரு மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் என நான் மதிப்பிடுவேன். அவரின் கைகள் மிக வேகமாக செயல்படுவதால் அவர் ஒரு அபாரமான விக்கெட் கீப்பர். அதே போல் பேட்டிங்கிலும் ஒரு சில சதங்கள் அடித்துள்ள அவர் இந்தியா தடுமாறிய வேளைகளில் பல முக்கிய இன்னிங்ஸ் ஆடியுள்ளார். இருப்பினும் நாங்கள் விளையாடிய போது எம்எஸ் தோனி வந்ததைப் போல இப்போது ரிசப் பண்ட் வந்து விட்டார். கடந்த சில வருடங்களாக அவர் அபாரமாக செயல்பட்டு வருகிறார்” என கூறிய அவர் ரிதிமான் சஹாவை மனதார பாராட்டினார்.

ஒரு காலத்தில் எம்எஸ் தோனி என்ற மகத்தான விக்கெட் கீப்பர் வந்ததன் காரணமாக தினேஷ் கார்த்திக், பார்த்தீவ் பட்டேல், ரித்திமான் சஹா போன்ற விக்கெட் கீப்பர்களுக்கு இந்திய அணியில் வேலை இல்லாமல் போனது. சொல்லப்போனால் தோனி இடம்பெறாத நிலையில் மட்டும் இந்த வீரர்கள் அவ்வப்போது இடம் பிடித்து வந்த நிலையில் தற்போது ரிஷப் பண்ட் வந்து அபாரமாக செயல்படுவதால் மீண்டும் இந்த வீரர்களுக்கு குறிப்பாக சஹாவுக்கு இந்திய அணியில் வேலை இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. மறுபுறம் தோனிக்கு பின் காலடி வைத்து ஒரு சில சமயங்களில் அவரையே மிஞ்சும் அளவுக்கு பட்டைய கிளப்பும் ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிட வேண்டும் என்பதை ரித்திமான் சஃகா புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என தினேஷ் கார்த்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

- Advertisement -

saha

மிரட்டல் ரிஷப் பண்ட் – காலம் கடந்தாச்சு:
“இது போன்ற நேரங்களில் ஒரு 2வது தர விக்கெட் கீப்பராக இந்திய அணியில் பயணம் செய்து ஒரு சில போட்டிகளில் மட்டும் விளையாடுபவராக அவர் இருந்தார். ஆனால் புதிதாக வந்த ரிஷப் பண்ட் அபாரமாக செயல்பட்டு தனக்கென ஒரு முத்திரை பதித்து நிரந்தரமான இடத்தைப் பிடித்து விட்டார். எனவே 2வது தர விக்கெட் கீப்பர் கூட ஒரு இளம் வீரராக இருக்க வேண்டும் என அணி நிர்வாகம் நினைப்பதில் எந்த வித ஆச்சர்யமும் இல்லை.

ஒரு சில நேரங்களில் நீண்ட வெளிநாட்டு கிரிக்கெட் தொடர் மட்டுமல்லாது சொந்த மண்ணில் நடைபெறும் தொடரின் போது கூட நல்ல இளம் 2வது விக்கெட் கீப்பர் தேவைப்படுகிறது. எனவே சகா போன்ற ஒருவரை தாண்டி இளம் விக்கெட் கீப்பருக்கு வாய்ப்பளிக்கும் நேரம் வந்துவிட்டது” என இதுபற்றி தினேஷ் கார்த்திக் மேலும் கூறினார்.

- Advertisement -

saha 2

அவர் கூறுவது போல கடந்த சில வருடங்களாக இந்திய அணியில் இடம் பிடித்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிஷப் பண்ட் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற சவால் மிகுந்த வெளிநாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சரித்திர சாதனையை படைத்தார். குறிப்பாக கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரியில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் மைதானத்தில் அந்த அணிக்கு எதிராக நடந்த 4வது போட்டியில் 89* ரன்கள் விளாசி இந்தியாவை அவர் வெற்றி பெறச்செய்தது காலத்திற்கும் மறக்க முடியாததாகும்.

மறுபுறம் 37 வயதை கடந்து விட்ட சஹா சமீப காலங்களாக சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் கூட பெரிய அளவில் ரன்களை குவிக்க தடுமாறுகிறார். அதன் காரணமாக ரிஷப் பண்ட் காயம் அடைந்தால் கூட 2வது விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத்துக்கு வாய்ப்பளித்து வளர்க்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துவிட்டது. இன்னும் கூறவேண்டுமானால் மொத்தமாக இதுவரை 40 போட்டிகளில் பங்கேற்ற சஹா அதில் 3 சதங்கள் உட்பட வெறும் 1353 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

இதையும் படிங்க : IPL 2022 : இம்முறை இவருடன் நான் சேர்ந்து விளையாட இருப்பது மிகவும் மகிழ்ச்சி – மாயங்க் அகர்வால் ஹேப்பி

எனவே ரிஷப் பண்ட், கேஎஸ் பரத் போன்ற நல்ல அடுத்த தலைமுறை வீரருக்கு சகா வழிவிட வேண்டும் என தினேஷ் கார்த்திக் வெளிப்படையாக கேட்டுக்கொண்டுள்ளார். இந்திய அணியிலிருந்து விலகும் இந்த உணர்வு அவருக்கு கடினமாக இருக்கும் என்றாலும் அதை ஏற்றுக்கொண்டு தான் தீர வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

Advertisement