
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த முதலாவது டெஸ்ட் போட்டிக்காக இரு அணிகளும் தற்போது சென்னை வந்து தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 27-ஆம் தேதி கான்பூரில் துவங்குகிறது. அண்மையில் பாகிஸ்தான் சென்ற வங்கதேச அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்திருந்தது.
இதன் காரணமாக இந்திய அணிக்கு எதிராகவும் வங்கதேச அணி சவால் அளிக்கும் வகையில் விளையாடும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வங்கதேச அணியை எந்த ஒரு பிரச்சனையும் இன்றி இந்தியா எளிதில் வீழ்த்தும் என இந்திய அணியின் முன்னாள் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :
இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வெற்றி பெறுவது என்பது எந்த அணிக்குமே சவாலாக ஒன்றுதான். பாகிஸ்தானில் வங்கதேச அணி சிறப்பாக தான் விளையாடியது. ஆனால் இந்தியாவை இந்திய மண்ணில் வீழ்த்துவது அவ்வளவு எளிது கிடையாது. இந்திய அணி எளிதில் வங்கதேச அணியை தோற்கடிக்கும் என்று நான் நினைக்கிறேன்.
அதே போன்று இந்த தொடர் முழுவதுமே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை தயார் செய்வார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராகும் வகையில் அது போன்ற ஆடுகளங்கள் அமைக்கப்படும் என்று நான் நினைக்கிறேன் என தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கம்பீர், கோலி, ஷாகிப் உட்பட.. நல்ல பையன்கள் நிறைந்த ஆல் டைம் கனவு அணியை தேர்ந்தெடுத்த ஸ்ரீசாந்த்
எதிர்வரும் இந்த இந்தியா வங்கதேச டெஸ்ட் தொடர் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தமிழக கிரிக்கெட் வீரருமான தினேஷ் கார்த்திக் அளித்துள்ள இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.