
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பினிஷர் என்கிற ரோலில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் விளையாடி வருகிறார். இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவருக்கு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை அவர் தற்போது வரை பயன்படுத்த தவறி வருகிறார். ஏனெனில் இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியின் போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய அவர் இந்திய அணியின் வெற்றிக்கு இரண்டு பந்துகளில் 2 ரன்கள் தேவை என்கிற நிலையில் ஸ்டம்பிட் ஆகி வெளியேறி இருந்தார். அதனை தொடர்ந்து இரண்டாவதாக நடைபெற்று முடிந்த நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆனால் நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் அவருக்கு முன்கூட்டியே பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பையாவது பயன்படுத்தி சிறப்பாக செயல்படுவார் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த வேளையில் 15 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டம் இழந்தார். இப்படி தொடர்ச்சியாக தினேஷ் கார்த்திக் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அவர் மீது மீண்டும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவருக்கு பதிலாக ரிஷப் பண்டை அணிக்குள் கொண்டு வரவும் கருத்துக்கள் வலுத்து வருகிறது.
இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது இந்திய பீல்டிங் செய்து கொண்டிருக்கையில் திடீரென 16-வது ஓவர் துவங்குவதற்கு முன்னதாக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவரை மருத்துவ குழு நிர்வாகி ஒருவர் வந்து பரிசோதித்து அவரால் தொடர்ந்து விளையாட முடியாது என்று கூறி அவரை பெவிலியனுக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் களத்திற்குள் வந்து கடைசி சில ஓவர்கள் விக்கெட் கீப்பிங் செய்தார். இது குறித்து வெளியான தகவலில் தினேஷ் கார்த்திக் நேற்று கீப்பிங் செய்யும்போது முதுகுப் பகுதியில் அசவுகரியம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே அவர் இந்த போட்டியின் பாதியிலேயே வெளியேறினார் என புவனேஸ்வர் குமார் கூறியிருந்தார். தினேஷ் கார்த்திக் இப்படி சொதப்பி வரும் வேளையில் அவருக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் முழு உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க : ஓடாத வண்டிய எவ்ளோ நாள் ஓட்டுவிங்க, ராகுலுக்கு பதில் அவருக்கு சான்ஸ் கொடுங்க – ஹர்பஜன் சிங் காட்டம்
அதோடு நாளை மறுதினம் நவம்பர் இரண்டாம் தேதி வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஒருவேளை அவருக்கு உடல் தகுதி சரியாகவில்லை எனில் நிச்சயம் ரிஷப் பண்டிற்கு அந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.