அம்பயருக்கு எதிராக குரல் கொடுத்த தினேஷ் கார்த்திக், ஐபிஎல் நிர்வாகம் கொடுத்த தண்டனை – அப்படி என்ன செய்தார்?

Dinesh Karthi 66
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்து பிளே ஆப் சுற்று போட்டிகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இதில் மே 25-ஆம் தேதி நடைபெற்ற வாழ்வா – சாவா என்ற வகையிலான எலிமினாட்டர் போட்டியில் புள்ளிப் பட்டியலில் 3 மற்றும் 4 ஆகிய இடங்களை பிடித்த லக்னோ மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பரபரப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை சாய்த்த பெங்களூரு 2020, 2021 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் இதே எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்த நிலையில் இந்த 3-வது முயற்சியில் வெற்றி பெற்றது.

faf

- Advertisement -

அதனால் மே 27-ஆம் தேதியான இன்று நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் ராஜஸ்தானை அந்த அணி எதிர் கொள்கிறது. ஆஹமதாபாத் நகரில் நடைபெறும் அந்தப்போட்டியில் மீண்டும் வெற்றி பெற்று 2016க்கு பின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து அந்த வருடம் தவறவிட்ட கோப்பையை இந்த முறை புதிய கேப்டன் டுப்லஸ்ஸிஸ் தலைமையில் முத்தமிட அந்த அணி போராட உள்ளது. இதற்காக பெங்களூரு வீரர்கள் அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கலக்கல் டிகே:
இந்த வருடம் அந்த அணி இந்த அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்படுவதற்கு கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து வெற்றிகரமாக போட்டிகளை பினிஷிங் செய்யும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் முக்கிய காரணமாக இருந்து வருகிறார். ஏனெனில் பெரும்பாலான போட்டிகளின் முடிவுகளை கடைசியில் அடிக்கப்படும் அந்த எக்ஸ்ட்ரா 20 – 30 ரன்கள் தான் தீர்மானிக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் இதுவரை பங்கேற்ற 15 போட்டிகளில் 324* ரன்களை 187.28 என்ற ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ள அவரால் மட்டுமே பெங்களூரு குறைந்தது 4 – 5 வெற்றிகளை சுவைத்தது. அதனாலேயே 3 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கும் அவர் தேர்வாகியுள்ளார்.

Dinesh Karthik 2

அந்த வரிசையில் முக்கியமான எலிமினேட்டர் போட்டியில் ரஜத் படிதார் அதிரடியாக சதமடித்து 112* (54) ரன்கள் விளாசிய நிலையில் கடைசி நேரத்தில் களமிறங்கிய அவர் அதிரடியாக 5 பவுண்டரி 1 சிக்சருடன் 37* ரன்கள் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார். இறுதியில் பெங்களூரு 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதற்கு அவர் ஒரு துருப்புச் சீட்டாக செயல்பட்டார் என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

தண்டனை:
முன்னதாக அந்த எலிமினேட்டர் போட்டியில் ஐபிஎல் விதிமுறைகளுக்கு எதிராக தினேஷ் கார்த்திக் நடந்து கொண்டதாக அந்த போட்டியின் முடிவில் நடுவர் புகார் அளித்துள்ளார். அதை ஏற்றுக்கொண்ட ஐபிஎல் நிர்வாகம் தினேஷ் கார்த்திக்கிடம் விசாரணை செய்ததில் அவரும் அதை ஒப்புக் கொண்டார். இதுபற்றி ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது பின்வருமாறு. “ஆர்ட்டிகல் 2.3 அடிப்படையில் லெவல் 1 பிரிவின் கீழ் மிஸ்டர் கார்த்திக் குற்றம் செய்ததை ஒப்புக்கொண்டதால் ஐபிஎல் விதிமுறைகளை மீறியுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

IPL Umpires

நல்ல வேளையாக இது லெவல் 1 குற்றம் மட்டுமே என்பதால் அவருக்கு அபராதம் அல்லது தடை எதுவும் விதிக்காமல் வெறும் எச்சரிக்கை மட்டும் அதிகாரபூர்வமான வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் இன்று நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் அவர் விளையாடுவதற்கு எந்தவித தடையும் கிடையாது. இருப்பினும் வரும் போட்டிகளில் இதேபோல் அவர் மீண்டும் நடந்து கொண்டால் அபராதம் அல்லது தடை விதிக்கப்படும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

என்ன செய்தார்:
பொதுவாக இதுபோல் லெவல் 1 குற்றம் செய்யும்போது அந்த வீரர் என்ன செய்தார் என்பது பற்றி வெளிப்படையாக ஐபிஎல் நிர்வாகமும் நடுவரும் தெரிவிக்க மாட்டார்கள். அதனால் எதற்காக இந்த தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது என்று பல ரசிகர்களும் குழப்பமடைந்துள்ளனர். இருப்பினும் அதற்கான காரணம் என்னவெனில் எலிமினேட்டர் போட்டியின் போது கடைசி ஓவரில் பேட்டிங் செய்து கொண்டிருந்த அவர் அந்த ஓவரின் ஒரு பந்தில் வித்தியாசமாக சற்று நகர்ந்து திரும்பி சிக்ஸர் அடிக்க முயன்றார். ஆனால் அந்த பந்து ஒய்ட் போல வந்தபோதிலும் தினேஷ் கார்த்திக் நகர்ந்த காரணத்தால் அம்பயர் ஒயிட் எதுவும் வழங்கவில்லை.

இதையும் படிங்க : பட்லர் பேட்டிங் பண்ணாலே கேமராவில் என் முகத்தை காட்டுறாங்க – கலகலக்கும் வெளிநாட்டு வீரர் மனைவி

அதனால் கோபமடைந்த அவர் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் “என்னயா இது அம்பயரிங்” என்பது போல் கைகளை அசைத்து ஒருசில வார்த்தைகளை உபயோகித்ததாக தெரிகிறது. அதன் காரணமாகவே அம்பயர் அவருக்கு இப்படி ஒரு தண்டனை வழங்கியுள்ளார். இந்த தொடரில் நிறைய போட்டிகளில் அம்பயர்கள் ஏடாகூடமாக அம்பயரிங் செய்து தவறான முடிவுகளை வழங்கி வருவதை பார்க்கிறோம். அப்படி எலிமினேட்டர் போட்டியில் அம்பயருக்கு எதிராக தினேஷ் கார்த்திக் குரல் கொடுத்ததால் அவருக்கு இந்த தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிகிறது.

Advertisement