
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 208 ரன்கள் குவித்தும் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை சந்தித்தது பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்ள காரணமாக அமைந்தது. மேலும் ஏற்கனவே ஆசிய கோப்பையில் இருந்து தொடர்ச்சியாக இந்திய அணி தோல்வியை சந்தித்து வருவதால் இந்திய அணியின் தேர்வு மீதும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று நாக்பூர் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டி மழை காரணமாக தாமதமாக துவங்கியதால் இரு அணிகளுமே 8 ஓவர்கள் வரை மட்டுமே விளையாடும் என அம்பயர்கள் அறிவித்தனர். அதன்படி நேற்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பந்துவீசிய இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியை தங்களது மிகச் சிறப்பான பந்துவீச்சின் மூலம் 90 ரன்களில் சுருட்டியது. நிர்ணயிக்கப்பட்ட 8 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணியானது 5 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் மட்டுமே குவித்தது.
பின்னர் 91 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது ரோகித் சர்மாவின் அட்டகாசமான ஆட்டத்தினாலும், தினேஷ் கார்த்திக்கின் அருமையான ஃபினிஷிங்கினாலும் 7.2 ஓவர்களிலேயே நான்கு விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் குவித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இறுதி நேரத்தில் தினேஷ் கார்த்திக் இரண்டே பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 10 ரன்கள் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தினேஷ் கார்த்திக் கூறுகையில் : நான் சமீப காலமாகவே பினிஷிங் ரோலில் விளையாட பயிற்சி எடுத்து வருகிறேன். ஐபிஎல் தொடரிலும் நான் அதைத்தான் செய்திருந்தேன். அதனைத்தொடர்ந்து இந்திய அணியிலும் விக்ரம் ரத்தோர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் எனக்கான அந்த இடத்தை அளித்திருக்கின்றனர்.
நான் இந்த போட்டிக்காக புதிதாக எதையும் முயற்சி செய்யவில்லை. வழக்கம் போலவே போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தே விளையாடியதாக கூறினார். அதன் பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டிங் குறித்து பேசிய தினேஷ் கார்த்திக் கூறுகையில் : புதிய பந்திற்கு எதிராகவும் சரி, உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் சரி வேகப்பந்து வீச்சில் ரோகித் சர்மா போன்று பெரிய பெரிய ஷாட்டுகளை விளையாடுவது அவ்வளவு எளிதானது அல்ல.
இதையும் படிங்க : IND vs AUS : இதுல உலகின் பணக்கார வாரியம்னு பெருமை வேற – நாக்பூர் போட்டியால் பிசிசிஐயை விளாசும் ரசிகர்கள், நடந்தது என்ன
அவர் இவ்வளவு அதிரடியாக விளையாடும் இந்த ஒரு விடயம் போதும் அவர் எவ்வளவு பெரிய வீரர் என்பதற்கு அதுவே சான்று. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இப்படிப்பட்ட ஷாட்டுகளை விளையாடும் திறமை என்பது சாதாரணமானது கிடையாது. ரோகித் சர்மா அந்த வகையில் மிகச் சிறப்பான பேட்ஸ்மேன் என்று தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.