
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது. அதிலும் கடைசிப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது ரசிகர்களால் காலத்திற்கும் மறக்க முடியாததாக அமைந்தது. அந்தத் தொடரில் அனைத்து இந்திய வீரர்களும் வெற்றியில் மிகவும் முக்கிய பங்காற்றினர்.
குறிப்பாக பேட்டிங் துறையில் விராட், ரோஹித் இல்லாத சூழ்நிலையில் பொறுப்புடன் விளையாடிய சீனியர் பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் 532 ரன்கள் குவித்து அசத்தினார். இந்நிலையில் கேஎல் ராகுல் போல இந்தியா – இங்கிலாந்து ஆகிய 2 அணிகளிலும் டெக்னிக்கல் அளவில் வலுவாக வேறு பேட்ஸ்மேன்கள் இல்லையென்று தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார். மேலும் விராட், ரோஹித் போன்ற சீனியர்கள் இல்லாத பொறுப்பை ஏற்றுக்கொண்டு ராகுல் பேட்டிங் செய்ததாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் தினேஷ் கார்த்திக் பேசியது பின்வருமாறு. “இத்தொடருக்கு முன்பாக விராட், ரோஹித், அஸ்வின் போன்ற 3 பெரிய வீரர்கள் ஓய்வு பெற்றனர் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் இத்தொடருக்கு முன்பாக கே.எல். ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோரே பெரிய வீரர்களாக இருந்தனர். பும்ரா பந்து வீச்சில் சீனியராக இருந்தார்”
“ஆனால் பேட்டிங் துறையில் அனுபவம் ரீதியாக கேஎல் ராகுல் சீனியராக இருந்தார். இதற்கு முன் தொடரை நன்றாகத் துவங்கிய அவர் சிறப்பாக ஃபினிஷிங் செய்ததில்லை. ஆனால் இத்தொடரில் ராகுல் எனும் பையன் மனிதராக வளர்ந்துள்ளார். அதனால் பொறுப்பை அவர் தனது தோளில் எடுத்துக் கொண்டார். சொல்லப்போனால் ராகுல் தான் இரு அணிகளிலும் டெக்னிக்கல் அளவில் வலுவான வீரர்”
“அவர் தன்னுடைய டெக்னிக்கிற்கு ஆதரவு கொடுத்தார். அழுத்தத்தின் கீழ் தன்னுடைய திட்டத்திற்கும், தடுப்பாட்ட திறனுக்கும் ஆதரவளித்த ராகுல் நீண்ட நேரம் விளையாடி கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியிலும் நல்ல ரன்கள் குவித்தார். அவர் பேட்டிங் செய்கையில் அழுத்தம் தெரியவில்லை. தன்னுடைய தடுப்பாட்டத்தில் வலுவாக இருந்த அவர் அழகான கவர் டிரைவ்களை அடித்தார்”
இதையும் படிங்க: 601 ரன்ஸ்.. மூன்று 150ஸ்.. இந்தியாவின் தனித்துவ உலக சாதனையை சமன் செய்து.. ஜிம்பாப்வேயை புரட்டிய நியூஸிலாந்து
“ஒரு சீனியர் பேட்ஸ்மேனாக தொடர் முழுவதும் அவர் கடினமான புதிய டுக் பந்துகளை எதிர்கொள்வது இந்திய அணிக்கு முக்கியமானதாக அமைந்தது. அதை ராகுலும் அற்புதமாக செய்தார்” என்று கூறினார். முன்னதாக ராகுல் விளையாடியதிலேயே இது தான் சிறந்த ஆட்டம் என்று சச்சின் டெண்டுல்கரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.