
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் போராடி சமன் செய்தது. அந்த வெற்றிக்கு முகமது சிராஜ் 5 போட்டிகளிலும் முழுமையாக விளையாடி 23 விக்கெட்டுகள் எடுத்து கருப்பு குதிரையாக செயல்பட்டார். மறுபுறம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜஸ்ப்ரித் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.
அந்த 3 போட்டிகளிலுமே இந்தியா வெற்றி பெறவில்லை. அதனால் இதுவரை பெற்றுக்கொடுத்த வெற்றிகளை மறந்த பலரும் ஜஸ்ப்ரித் பும்ராவை விமர்சிக்கத் துவங்கியுள்ளார்கள். அதே போல பும்ரா விளையாடாத போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறுவதாக சமூக வலைதளங்களில் பல ரசிகர்கள் கிண்டலடிக்கிறார்கள்.
இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடிய போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்தித்தது அவருடைய தவறல்ல என்று தினேஷ் கார்த்திக் விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும் பல காயங்கள், அறுவை சிகிச்சைகளை கடந்து விளையாடும் பும்ரா 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பது நியாயமற்றது என்றும் கார்த்திக் கூறியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.
“நீங்கள் ஜஸ்ப்ரித் பும்ராவின் பார்வையிலும் இதைப் பார்க்க வேண்டும். இம்மாதிரியான வெற்றிகள், தொடரை முறியடித்த விதம், இளம் அணி போராடிய விதம் ஆகியவை அவரது கேரியருக்கு உதவும் என்று நினைக்கிறேன். உண்மையில் மற்ற பவுலர்கள் இந்திய அணியை வெற்றி பெற வைத்ததை நினைத்து அவர் பெருமைப்படுவார். பொதுவாக அவர் அழுத்தம் மற்றும் பெரிய போட்டிகளைப் பார்த்து கூச்சப்பட்டு வெளியேறுபவர் கிடையாது”
“பும்ரா களத்தில் விளையாடும் போது, இக்கட்டான சூழ்நிலையில் விக்கெட் தேவைப்பட்டாலும், 5 விக்கெட்டுகள் தேவைப்படும் போதும் ஒரு கேப்டனாக நீங்கள் அவரையே பயன்படுத்த விரும்புகிறீர்கள். அந்தளவுக்கு ஜஸ்ப்ரித் பும்ரா எனும் பெயர் நம்பிக்கையை சம்பாதித்துள்ளது. அதற்கு அவர் மிகவும் தகுதியானவர். தற்போது அவர் விளையாடாவிட்டால் இந்தியா வெல்கிறது என்ற நிலைமை இருப்பது அவருடைய தவறு கிடையாது”
இதையும் படிங்க: சுப்மன் கில் 754 ரன்கள் அடிச்சிருந்தாலும் ஜடேஜா தான் இதுல பெஸ்ட்.. காரணத்தை கூறிய – அஜய் ஜடேஜா
“மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அவர் உலகச் சாம்பியன். கிரிக்கெட்டை முடித்ததும் அவர் மெக்ராத், வார்னே, ஸ்டைன் போன்றவர்களுடன் ஒன்றாக இணைத்துப் பேசப்படுவார். எப்போது தயாராக இருக்கிறோம் என்பதை உணர்ந்து விளையாடும் போட்டிகளை தேர்ந்தெடுக்கும் அவர் நீண்ட காலம் விளையாடுவார் என்று நம்புகிறேன். ஏனெனில் 2 முதுகு காயங்களை சந்தித்த அவர் 2014இல் மோசமான காயத்தை சந்தித்தார். எனவே சில நேரங்களில் நாம் அவரை கொஞ்சம் தளர்த்த வேண்டும், விமர்சிப்பது நியாயமற்றது” எனக் கூறினார்