IND vs ENG : கேப்டன் தினேஷ் கார்த்திக் தலைமையில் கோப்பையை வென்ற இந்தியா அபார வெற்றி – முடிவுகள் இதோ

Dinesh Karthik Shaun Masood
- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு ரத்து செய்யப்பட்ட 5-வது டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. அதில் பர்மிங்காம் நகரில் ஜூலை 1-ஆம் தேதியன்று துவங்கிய டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலைமையில் ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் விளையாடி வரும் இந்தியா முதல் இன்னிங்சில் 412 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளது. வரும் ஜூலை 5-ஆம் தேதியுடன் நிறைவுக்கு வரும் இப்போட்டியை தொடர்ந்து ஜூலை 7-ஆம் தேதியன்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா களமிறங்குகிறது. அந்த தொடருக்கு தயாராகும் வகையில் 2 பயிற்சி டி20 போட்டிகளிலும் இந்தியா விளையாடி வருகிறது.

அதில் கேப்டன் ரோகித் சர்மா ஏற்கனவே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதால் சமீபத்திய அயர்லாந்து தொடரில் 2 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியை பெற்றுக் கொடுத்த ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அனைத்து வீரர்களையும் சுழற்சி முறையில் பயன்படுத்தும் வகையில் கடைசி நேரத்தில் தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அந்த நிலைமையில் ஜூலை 1-ஆம் தேதியான நேற்று இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு டெர்பி நகரில் டெர்பிஷைர் கவுண்டி அணிக்கு எதிராக முதல் பயிற்சி போட்டியில் இந்தியா களமிறங்கியது.

- Advertisement -

சூப்பர் பவுலிங்:
அப்போட்டியில் டாஸ் வென்ற தினேஷ் கார்த்திக் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய டெர்பிஷைர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் 150/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு கேப்டன் ஷான் மசூத் 8, லூயிஸ் ரீஸ் 1, டு ப்ளாய் 9 என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றிய நிலையில் அதிகபட்சமாக வெய்ன் மாட்ஸன் 28 (21) ரன்களும், ஹில்டன் கார்ட்ரைட் 27 (26) ரன்களும், ப்ரோக் கெஸ்ட் 23 (25) ரன்களும், ஆல்ஸ் ஹுக்ஸ் 24 (17) ரன்களும் ,மாட்டி மெக்ரேன் 20 (9) ரன்களும் போராடி எடுத்தனர். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஐபிஎல் 2022 தொடரில் அசத்திய உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அதை தொடர்ந்து 151 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ருதுராஜ் கைக்வாட் 3 (4) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் அயர்லாந்துக்கு எதிரான 2வது போட்டியில் 176 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த சஞ்சு சாம்சன் – தீபக் ஹூடா ஜோடி இப்போட்டியிலும் 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை காப்பாற்றியது. அதில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் சஞ்சு சாம்சன் 38 (30) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சூர்யகுமார் யாதவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 5 பவுண்டரி 2 சிக்சருடன் 59 (37) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இந்தியா வெற்றி:
இறுதியில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் சூரியகுமார் யாதவ் 36* (22) ரன்களும் தினேஷ் கார்த்திக் 7* (7) ரன்களும் எடுத்து பிஷிங் கொடுத்ததால் 16.4 ஓவரிலேயே 151/3 ரன்களை எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் இப்போட்டிக்கான வெற்றிக்கோப்பையை தினேஷ் கார்த்திக் தலைமையில் இந்தியா வென்றுள்ளது. அடுத்ததாக ஜூலை 3-ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நார்த்தம்டன் நகரில் நார்த்தம்டன்ஷைர் கவுண்டி அணிக்கு எதிரான 2-வது பயிற்சி போட்டியில் இந்தியா களமிறங்குகிறது.

இப்போட்டியில் தினேஷ் கார்த்திக் எனும் தமிழர் தலைமையில் இந்தியா வெற்றியை பதிவு செய்துள்ளது ஒவ்வொரு தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெருமையான அம்சமாகும். ஏனெனில் பொதுவாகவே இந்தியா பங்கேற்கும் பெரும்பாலான போட்டிகளில் விளையாடும் 11 பேர் அணியில் 1 தமிழக வீரர் இடம் பிடிப்பதே அரிதாக மாறிவிட்டது.

- Advertisement -

அப்படிப்பட்ட நிலையில் 37 வயதில் கேரியர் முடிந்துவிட்டது என கருதப்பட்ட தினேஷ் கார்த்திக் இந்தியாவுக்காக அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்தில் கடந்த ஒரு வருடமாக கடினமாக உழைத்து ஐபிஎல் 2022 தொடரில் 330 ரன்களை 183.33 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்க விட்டு 3 வருடங்கள் கழித்து இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்தார்.

அதில் தென் ஆப்ரிக்க தொடரில் அபாரமாக செயல்பட்டு உலக கோப்பை இந்திய அணியில் தனது இடத்தை ஏறத்தாழ உறுதி செய்துள்ள அவர் தற்போது தன் மீது நம்பிக்கை வைத்து கொடுக்கப்பட்ட கேப்டன்ஷிப் பொறுப்பிலும் அபாரமாக செயல்பட்டு முதல் போட்டியிலேயே வெற்றியை பதிவு செய்துள்ளது உண்மையாகவே பாராட்டத்தக்கதாகும்.

இதையும் படிங்க : IND vs ENG : பதவியேற்ற முதல் போட்டியிலேயே பும்ரா தலைமையில் இந்திய அணி படைத்த பிரமாண்ட சாதனை

மேலும் உள்ளூர் கிரிக்கெட்டில் தமிழகத்திற்காக சயீத் முஷ்டாக் அலி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த அவர் நார்த்தம்டன்ஷைர் அணிக்கு எதிரான 2-வது போட்டியிலும் வென்று இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுப்பார் என்று நம்பலாம்.

Advertisement