இனி நாங்களே நினைத்தாலும் தினேஷ் கார்த்திக்கை டி20 உ.கோ அணியிலிருந்து நீக்கமுடியாது – இந்திய தேர்வுக்குழு கருத்து

DInesh Karthik
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஒயிட் வாஷ் செய்து கோப்பையை முத்தமிட்ட ஷிகர் தவான் தலைமையிலான இந்தியா அடுத்ததாக நடைபெற்று வரும் டி20 தொடரில் ரோகித் சர்மா தலைமையில் முதல் போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. ட்ரினிடாட் நகரில் நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 190/6 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கி 7 பவுண்டரி 2 சிக்ஸரை வெளுத்து வாங்கிய கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் அடித்து 64 (44) ரன்கள் குவித்தார்.

Dinesh Karthik 1

- Advertisement -

இருப்பினும் மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்டியா உட்பட அனைத்து முக்கிய பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அவுட்டானதால் தடுமாறிய இந்தியாவை கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடி காட்டிய தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 41* (19) ரன்கள் குவித்து சூப்பர் பினிசிங் கொடுத்து காப்பாற்றினார். அதை தொடர்ந்து 191 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு கேப்டன் நிக்கோலஸ் பூரன், சிம்ரோன் ஹெட்மையர் உட்பட அனைத்து முக்கிய பேட்ஸ்மேன்களும் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 20 ஓவர்களில் 122/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

அசத்தும் டிகே:
இந்த வெற்றிக்கு ரோகித் சர்மா 64 ரன்கள் எடுத்தாலும் முக்கியமான 41* ரன்கள் எடுத்த தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஆரம்பகாலங்களில் தோனி இருந்ததால் பெரிய அளவில் தொடர்ச்சியான வாய்ப்பு பெறாத அவர் கடைசியாக கடந்த 2019 உலக கோப்பையில் விளையாடிய பின் மொத்தமாக கழற்றி விடப்பட்டார். இருப்பினும் மனம் தளராமல் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த அவர் ஒரு கட்டத்தில் வர்ணனையாளராக செயல்பட்டதால் இந்திய கிரிக்கெட் கேரியர் முடிந்து விட்டதாக அனைவரும் நினைத்தனர்.

Dinesh Karthik vs RSA

ஆனாலும் டி20 கிரிக்கெட்டில் இன்னும் தன்னால் சாதிக்க முடியும் என்று நம்பிய அவர் அதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூரு அணிக்காக கடைசி நேரத்தில் களமிறங்கி 330 ரன்களை 183.33 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் எதிரணிகளை வெளுத்து வாங்கி 3 – 4 வெற்றிகளை தனி ஒருவனாக பெற்றுக்கொடுத்து மிகச் சிறந்த பினிஷர் என்று நிரூபித்தார். அதனால் 3 வருடங்கள் கழித்து இந்திய அணிக்குள் மாஸ் கம்பேக் கொடுத்த அவர் அதன்பின் நடந்த தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் அசத்தலாக செயல்பட்டு தனக்கான ஒரு நிரந்தரமான இடத்தை பிடித்து விளையாடி வருகிறார்.

- Advertisement -

கழற்றிவிட முடியாது:
குறிப்பாக 37 வயதை கடந்தும் அசத்தலாக செயல்படும் அவர் டி20 கிரிக்கெட்டில் 37 வயதுக்குப்பின் அதிக ரன்கள் மற்றும் அதிக ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரர் என்ற சாதனையுடன் சிறப்பாக செயல்படுவதால் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவரின் இடம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இருப்பினும் ரிஷப் பண்ட், இஷான் கிசான் போன்ற இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கு மத்தியில் அதிக வயதுடைய அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகமும் நிலவி வருகிறது. இந்நிலையில் இனிமேல் நாங்களே நினைத்தாலும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து தினேஷ் கார்த்திக்கை நீக்க முடியாது என்று தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

Dinesh Karthik MoM

ஏனெனில் அந்தளவுக்கு வயதையும் கடந்த அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் இந்திய டி20 அணியின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளதாக தேர்வுக்குழு கருதுகிறது. இது பற்றி தேர்வுக்குழுவில் இடம் வகிக்கும் உறுப்பினர் ஒருவர் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளது பின்வருமாறு. “தினேஷ் கார்த்திக்கை தற்போது யாரால் நிறுத்த முடியும்? ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் அவர் முக்கியமானவர். அவர் தன்னுடைய சிறப்பான அணுகுமுறைகளால் தொடர்ச்சியாக நாங்கள் எதிர்பார்க்கும் செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறார். அவரின் அனுபவம் மிகப்பெரிய சொத்தாகும்”

“இது பற்றி நாங்கள் எதுவும் விவாதிக்கவில்லை என்றாலும் நாங்கள் அனைவருமே அவரின் செயல்பாடுகள் மற்றும் அணுகுமுறையால் மிகவும் கவர்ந்துள்ளோம். குறிப்பாக அந்தப் போட்டியில் (முதல் டி20) பேட்டிங் சவாலாக இருந்தது. எனவே அந்த தருணத்தில் பிட்ச்சின் தன்மையை புரிந்து கொண்டு எந்த வகையான ஷாட்டுகளை அடிக்க போகிறீர்கள் என்பது முக்கியம். அதற்கேற்றார்போல் பயிற்சி செய்வதும் முக்கியம். எனவே முக்கிய இடத்தில் அசத்தும் அவரின் செயல்பாடுகளுக்கு கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் ஆதரவும் மிகப்பெரிய உதவியாக இருந்து வருகிறது” என்று கூறினார். இதனால் கடினமான உழைப்பின் பலனாக டி20 உலக கோப்பையில் தினேஷ் கார்த்திக் உறுதியாக விளையாடப் போகிறார் என்ற தகவல் தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement