தென்ஆப்பிரிக்காவை தெறிக்கவிட்ட தினேஷ் கார்த்திக், தரவரிசையில் இந்தியாவை முன்னேற்றி தாமும் பிரம்மாண்ட முன்னேற்றம்

Dinesh Karthik vs RSA
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் இந்தியா தனது சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பங்கேற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் பரபரப்பான போட்டிகளுக்கு பின் 2 – 2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. ஜூன் 9 – 19 வரை தலைநகர் டெல்லி, கட்டாக், விசாகப்பட்டினம், ராஜ்கோட் ஆகிய நகரங்களில் நடைபெற்ற இந்த தொடரின் முதல் 2 போட்டியில் பேட்டிங்கில் மிரட்டிய தென்னாப்பிரிக்கா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று இந்தியாவிற்கு அதிர்ச்சி கொடுத்தது. ஆனால் அதற்காக அஞ்சாத இந்தியா அதற்கடுத்த 2 போட்டிகளில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் அபாரமாக செயல்பட்டு அடுத்தடுத்த வெற்றிகளுடன் பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்தது.

அதை தொடர்ந்து பெங்களூருவில் நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 5-வது போட்டி மழையால் 21 பந்துகள் வீசப்பட்ட நிலையில் ரத்து செய்யப்பட்டதால் இரு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு கோப்பை பகிர்ந்து கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து வரும் ஜூன் 26, 28 ஆகிய தேதிகளில் அயர்லாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா பங்கேற்கிறது. அந்த தொடருக்கு ஐபிஎல் 2022 கோப்பையை வென்ற ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்டு சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி போன்ற தென் ஆப்ரிக்க தொடரில் வாய்ப்பு பெறாத வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது.

- Advertisement -

அசத்திய டிகே:
முன்னதாக தென் ஆப்ரிக்க தொடரில் இந்திய அணியின் பேட்டிங்கை பெரும்பாலான போட்டிகளில் நீண்ட நாட்களுக்குப் பின் கம்பேக் கொடுத்த ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தான் தாங்கி பிடித்தார்கள். அதிலும் இந்தியாவுக்காக வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாடி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தில் பெங்களூரு அணிக்காக 16 போட்டிகளில் 183.33 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் 330 ரன்களை தெறிக்க விட்ட அவருக்கு 3 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு விளையாடும் வாய்ப்பு தாமாக தேடி வந்தது.

அதில் 4 போட்டிகளில் 92 ரன்களை 158 என்ற அற்புதமான ஸ்டிரைக் ரேட்டில் தென் ஆப்பிரிக்காவை தெறிக்கவிட்ட அவர் இந்தியாவின் வெற்றிக்கு துருப்பு சீட்டாக செயல்பட்டார். குறிப்பாக ராஜ்கோட்டில் நடந்த 4-வது போட்டியில் 81/4 என இந்தியா தடுமாறிய போது 55 (27) ரன்களை குவித்த அவர் 37 வயதிலும் அதிக வயதில் ஆட்டநாயகன் விருதை வென்ற இந்திய வீரர் என்ற சாதனையுடன் இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அதனால் டி20 உலக கோப்பையில் அவருக்கான இடம் கிட்டதட்ட உறுதியாகியுள்ள நிலையில் அடுத்ததாக அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் அவர் விளையாட உள்ளார்.

- Advertisement -

தரவரிசையில் முன்னேற்றம்:
இந்நிலையில் தென்னாப்பிரிக்க தொடருக்குப் பின் சர்வதேச டி20 போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்த தொடருக்கு முன்பாக 195-வது இடத்திலிருந்த தினேஷ் கார்த்திக் இந்த தொடரில் அட்டகாசமாக செயல்பட்டதால் 108 இடங்கள் ராக்கெட் வேகத்தில் முன்னேறி 87-வது இடத்தை பிடித்து பிரம்மாண்ட வளர்ச்சி கண்டுள்ளார். அவரைப் போல இந்த தொடரில் 201 ரன்கள் குவித்து அசத்திய இளம் வீரர் இஷான் கிஷன் டாப் 10 பட்டியலில் இருக்கும் ஒரே இந்திய பேட்ஸ்மேனாக 6-வது இடம் பிடித்துள்ளார்.

அதேபோல் பந்துவீச்சில் அசத்திய யுஸ்வேந்திர சஹால் 3 இடங்கள் முன்னேறி 26-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இருப்பினும் இந்த தொடரில் சுமாராக செயல்பட்ட ஷ்ரேயஸ் ஐயர் 19-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ரோகித் சர்மா 18-வது இடத்திலும் விராட்கோலி 21-வது இடத்திலும் நீடிக்கின்றனர். இவர்களுடன் பாகிஸ்தானின் கேப்டன் பாபர் அசாம் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக தொடர்கிறார். அதே போல் பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசல்வுட் உலகின் நம்பர் ஒன் டி20 பந்துவீச்சாளராக தொடர்கிறார்.

இந்தியாவும் முன்னேற்றம்:
அத்துடன் டி20 அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் தென் ஆப்ரிக்க தொடரில் 2 தொடர் தோல்விகளுக்கு பின்பும் கொதித்தெழுந்து அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து தொடரை சமன் செய்த இந்தியா 266 புள்ளிகளுடன் உலகின் நம்பர்-1 டி20 அணியாக ஜொலிக்கிறது. 2-வது இடத்தில் இங்கிலாந்து 265 புள்ளிகளுடனும் 3-வது இடத்தில் பாகிஸ்தான் 261 புள்ளிகளுடன் உள்ளன. விரைவில் நடைபெறும் அயர்லாந்துக்கு எதிரான தொடரில் இந்தியா வெல்லும் பட்சத்தில் தனது முதலிடத்தை வலுவாக தக்கவைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement