ராகுல் டிராவிட்டின் 14 வருட சாதனையை உடைத்த டிகே.. ஆர்சிபி அணியின் தவறை அம்பலமாக்கும் சாதனை

Dinesh Karthik 4
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக போராடி வருகிறது. ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த பெங்களூரு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை வலுவாக பிடித்ததால் முதல் அணியாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின் 4 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்ற அந்த அணி தற்போது புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

குறிப்பாக மே ஒன்பதாம் தேதி நடைபெற்ற பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அபார வெற்றி பெற்றது. தரம்சாலாவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு விராட் கோலி 92, கேமரூன் கிரீன் 45, ரஜத் படிடார் 55 ரன்கள் எடுத்த உதவியுடன் 242 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

- Advertisement -

டிகே சாதனை:
அதை துரத்திய பஞ்சாப் அதிரடியாக விளையாட முயற்சித்து 17 ஓவரில் 181 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. அதனால் இரண்டாவது அணியாக பஞ்சாப் லீக் சுற்றுடன் வெளியேறியது. முன்னதாக அந்தப் போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஒரு பவுண்டரி 2 சிக்சருடன் 18 (7) ரன்கள் குவித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். இந்த 18 ரன்களையும் சேர்த்து பெங்களூரு அணிக்காக அவர் மொத்தம் 918 ரன்கள் அடித்துள்ளார்.

அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக அதிக ரன்கள் அடித்த 2வது இந்திய வீரர் என்ற ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின் 14 வருட சாதனையை உடைத்த தினேஷ் கார்த்திக் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2008 – 2010 காலகட்டத்தில் பெங்களூரு அணிக்காக ராகுல் டிராவிட் 898 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

சொல்லப்போனால் இந்தப் பட்டியலில் விராட் கோலி 7897 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஆனால் 2வது இடத்தில் உள்ள தினேஷ் கார்த்திக் 1000 ரன்கள் கூட அடிக்கவில்லை. இதிலிருந்து கடந்த 17 வருடங்களில் நிறைய இந்திய வீரர்களுக்கு பெங்களூரு அணி நிர்வாகம் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது அப்பட்டமாக அம்பலமாகிறது. மறுபுறம் சென்னை அணியில் கடந்த 3 வருடங்களாக விளையாடும் சிவம் துபே அதற்குள் 1000 ரன்கள் கடந்து விட்டார்.

இதையும் படிங்க: டிராவிடுக்கு பதிலாக இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு வரப்போகும் முன்னாள் வீரர் – வந்தா செம மாஸ்தான்

அந்த வகையில் ஏபி டீ வில்லியர்ஸ், கெயில் போன்ற வெளிநாட்டு வீரர்களுக்கு நிகராக இந்திய வீரர்களுக்கு நம்பி தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்காதது ஆர்சிபி அணி இதுவரை கோப்பையை வெல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்றே சொல்லலாம். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 7897
2. தினேஷ் கார்த்திக் : 918*
3. ராகுல் டிராவிட் : 898
4. தேவ்தூத் படிக்கல் : 884
5. பார்திவ் பட்டேல் : 731

Advertisement