
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ். தோனி மிகச் சிறந்த கேப்டனாக போற்றப்படுகிறார். ஏனெனில் 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற அவருடைய தலைமையில் வரலாற்றிலேயே முதல் முறையாக 2010ஆம் ஆண்டு இந்தியா உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக முன்னேறியது. அத்துடன் தோனி தலைமையில் 28 வருடங்கள் கழித்து 2011 உலகக் கோப்பையை வென்ற இந்தியா 2013 சாம்பியன்ஸ் டிராபியையும் முத்தமிட்டது.
அதனால் உலகிலேயே 3 விதமான வெள்ளைப்பந்து ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக தோனி சாதனை படைத்துள்ளார். அத்துடன் அழுத்தமான மிடில் ஆர்டரில் 17000க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ள அவர் சிறந்த பேட்ஸ்மேனாகவும் ஃபினிஷராகவும் போற்றப்படுகிறார். அதே போல சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பராகவும் அவர் உலக சாதனை படைத்துள்ளார்.
அந்த சூழ்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் சமீபத்தில் தனது ஆல் டைம் கனவு இந்திய அணியை வெளியிட்டிருந்தார். ஆனால் தன்னுடைய அணியில் தோனிக்கு அவர் இடமளிக்காதது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்தது. அதே போல மகத்தான ஆல் ரவுண்டர் கபில் தேவ் அவருடைய அணியில் இடம் பெறாததும் ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது.
அதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் தோனி இல்லாத இந்திய அணியா? என்று சமூக வலைதளங்களில் தினேஷ் கார்த்திக்கை கிண்டலடித்தனர். இந்நிலையில் அந்த தருணத்தில் மறந்தார் போல் தோனியின் பெயரை தவற விட்டு விட்டதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தோழர்களே நான் பெரிய தவறு செய்து விட்டேன். அது பொதுவான தவறாகும்”
“11 வீரர்களை நான் தேர்ந்தெடுக்கும் போது நிறைய விஷயங்கள் நடந்தது. அப்போது நான் கீப்பரை தேர்ந்தெடுக்க மறந்து விட்டேன். அதிர்ஷ்டவசமாக அந்த அணியில் ராகுல் டிராவிட் இருந்ததால் அவரை நான் விக்கெட் கீப்பராக தேர்ந்தெடுத்ததாக அனைவரும் நினைத்தனர். ஆனால் ராகுல் டிராவிட்டை நான் கீப்பராக கருதவில்லை. உண்மையில் விக்கெட் கீப்பரான நான் கீப்பரை தேர்ந்தெடுக்க மறந்து விட்டேன்”
இதையும் படிங்க: கோஹினூர் வைரம் மாதிரியான உங்களுக்கு இது தேவையில்லாதது.. ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு டிகே அட்வைஸ்
“என்னைப் பொறுத்த வரை இந்தியா மட்டுமின்றி தோனி அனைத்து வகையான ஃபார்மெட்டிலும் இருக்கக்கூடியவர். அவர் கிரிக்கெட்டில் விளையாடிய மகத்தான வீரர்களில் ஒருவர். எனவே ஏற்கனவே நான் தேர்ந்தெடுத்த அணியில் ஒரு மாற்றத்தை செய்ய முடிந்தால் தோனி 7வது இடத்தில் இருப்பார். அவர் அனைத்து இந்திய அணியின் கேப்டனாகவும் இருப்பார்” என்று கூறினார்.