நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா தற்சமயத்தில் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருகிறார். வித்தியாசமான பவுலிங் ஆக்சனை கொண்ட அவர் உலகின் பெரும்பாலான பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்து இதுவரை 397* விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.
குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் 15 விக்கெட்டுகளை எடுத்த அவர் தொடர்நாயகன் விருது வென்றார். அவருடைய சிறந்த செயல்பாடுகளால் இந்தியா 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்ற சாதனை படைத்தது. அந்த சூழ்நிலையில் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களை விட பவுலர்கள் தான் மிகவும் சாதுரியமானவர்கள் என்று ஜஸ்ப்ரித் பும்ரா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
கோஹினூர் வைரம்:
இருப்பினும் பவுலர்களுக்கு பெரும்பாலும் கேப்டன்ஷிப் மறுக்கப்படுவதாகவும் ஆதங்கத்தை பும்ரா வெளிப்படுத்தினார். ஆனால் இம்ரான் கான், கபில் தேவ், பட் கமின்ஸ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் வரலாற்றில் சிறந்த கேப்டனாக செயல்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே இந்திய அணியில் தாமாக சென்று கேப்டன்ஷிப்பை கேட்க முடியாது என்றும் பும்ரா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா கோஹினூர் வைரத்தை போல மிகவும் மதிப்புமிக்கவர் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். எனவே அவர் கேப்டன்ஷிப் பொறுப்பு இல்லாமல் சுதந்திரமாக விளையாடுவதே நல்லது என்றும் தினேஷ் கார்த்திக் ஆலோசனை கூறியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அனைத்தும் சரியாக இருக்கிறது. மிகவும் அமைதியான பொறுமையான பும்ரா நல்ல முதிர்ச்சியை கொண்டுள்ளார்”
கேப்டன்ஷிப் வேண்டாம்:
“இருப்பினும் வேகப்பந்து வீச்சாளரான அவரை எப்படி 3 விதமான கிரிக்கெட்டிலும் விளையாட வைக்க முடியும் என்பதே தேர்வாளர்களின் மனதில் இருக்கும் பெரிய கேள்வியாகும். பும்ரா போன்ற வேகப்பந்து வீச்சாளரின் ஃபிட்னஸ் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். அவரைப் போன்ற வீரர் முக்கியமான போட்டிகளில் மட்டுமே விளையாடுவதற்காக பாதுகாக்கப்பட வேண்டும். பும்ரா கோகினூர் வைரத்தைப் போன்றவர் என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்”
இதையும் படிங்க: 16/3 டூ 448.. பாகிஸ்தானிடம் வீணடித்த வங்கதேசம்.. கானல் நீரான முகமது ரிஸ்வானின் 44 வருட சாதனை கனவு
“எனவே நாம் அவரை பாதுகாப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் எந்த வகையான கிரிக்கெட்டில் விளையாடினாலும் அவர் தாக்கத்தை ஏற்படுத்துவார். அது தான் நமக்கு வேண்டும். ஆனால் கேப்டன்ஷிப் பொறுப்பால் ஏற்படும் பாரம் மற்றும் அழுத்தத்தால் அவர் காயத்தை சந்திக்கக்கூடும்” என்று கூறினார். அந்த வகையில் பும்ரா முக்கியமானவர் என்பதாலேயே சமீபத்திய இலங்கை தொடரில் அவருக்கு பிசிசிஐ ஓய்வு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.



