தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஜூலை 31ஆம் தேதி திண்டுக்கல்லில் எலிமினேட்டர் பிளே ஆஃப் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் 3 மற்றும் 4வது இடங்களைப் பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இரவு 7.15 மணிக்கு என்பிஆர் காலேஜ் மைதானத்தில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய சேப்பாக்கம் அணிக்கு சந்தோஷ் குமார் ஆரம்பத்திலேயே திணறி 1 (5) ரன்னில் அவுட்டானார். இருப்பினும் அடுத்து வந்த கேப்டன் பாபா அபாரஜித் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடினார். அவருடன் சேர்ந்து மறுபுறம் அதிரடி காட்ட முயற்சித்த மற்றொரு நட்சத்திர துவக்க வீரர் நாராயண் ஜெகதீசன் 25 (16) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார்.
அஸ்வின் அசத்தல்:
அதற்கடுத்ததாக வந்த பிரதோஷ்பால் தடுமாற்றமாக விளையாடி 19 (19) ரன்களில் ரன் அவுட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த ஃபெராரியா 4, ஆண்ட்ரே சித்தார்த் 7 ரன்னில் அவுட்டாகி அழுத்தத்தை அதிகரித்தனர். இருப்பினும் மறுபுறம் முடிந்தளவுக்கு தொடர்ந்து சிறப்பாக விளையாடி போராடிய கேப்டன் அபாரஜித் அரை சதமடித்து 72 (54) ரன்கள் குவித்து அவுட்டானார்.
இறுதியில் அபிஷேக் நம்பர் 3 சிக்ஸருடன் 22* (9) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் சேப்பாக்கம் 158/6 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் சார்பில் சந்திப் வாரியர் 2, வருண் சக்கரவர்த்தி, விக்னேஷ், சுபோத் பாட்டி தலா 1 விக்கெட் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 157 ரன்களை துரத்திய திண்டுக்கல் அணிக்கு விமல் குமார் 3 (6) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
ஆனால் அடுத்ததாக வந்த கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியாகவும் அட்டகாசமாகவும் விளையாடினார். அவருடன் மற்றொரு துவக்க வீரர் சிவம் சிங் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். அந்த வகையில் 14 ஓவர்கள் வரை அசத்திய இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து திண்டுக்கல்லை வலுப்படுத்தியது. அப்போது ரவிச்சந்திரன் அஸ்வின் 4 பவுண்டரி 4 சிக்சருடன் அரை சதமடித்து 57 (35) ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையும் படிங்க: இலங்கை தொடர் முடிந்து இந்திய வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய ஹார்டிக் பாண்டியா – நின்று பார்த்த கம்பீர்
ஆனால் அடுத்து வந்த பாபா இந்திரஜித் 0, பூபதி குமார் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அடுத்த சில ஓவரில் மறுபுறம் அசத்திய சிவம் சிங்கும் 64 (49) ரன்களில் அவுட்டானார். இறுதியில் சரத்குமார் 12 (11) ரன்னில் அவுட்டானாலும் சுபோத் பாட்டி 14* (12) தினேஷ் ராஜ் 4* (2) ரன்கள் எடுத்தனர். அதனால் 19.5 ஓவரில் 161/6 ரன்கள் எடுத்த திண்டுக்கல் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று நாளை நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் திருப்பூரை எதிர்கொள்ள தகுதி பெற்றது. மறுபுறம் சேப்பாக் சார்பில் ரஹீல் ஷா பிரேம்குமார் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை சந்தித்து நாக் அவுட்டாகி வெளியேறியது.



