இலங்கை கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கல்லே மைதானத்தில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
சாதனையுடன் ஓய்வை அறிவித்த இலங்கை வீரர் :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி கல்லே மைதானத்தில் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் துவக்க வீரரான திமுத் கருணரத்னே அதிரடியான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அது குறித்த விவரம் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இலங்கை அணியின் துவக்க வீரரான திமுத் கருணரத்னே கடந்து 2011-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்காக அறிமுகமாகி இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 16 சதம் மற்றும் 39 அரைசதம் என 7172 ரன்கள் குவித்துள்ளார்.
அது தவிர்த்து 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒரு சதம் மற்றும் 11 அரைசதம் என 1316 ரன்களை குவித்துள்ளார். தற்போது 36 வயதை எட்டியுள்ள அவர் இனியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய எதிர்காலம் இல்லை என்பதற்காக இந்த ஓய்வு முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. அதோடு ஒரு மாபெரும் சாதனையுடன் அவர் இந்த ஓய்வை அறிவித்துள்ளார்.
அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு 100-ஆவது டெஸ்ட் போட்டியாக அமைய இருக்கிறது. இலங்கை அணி சார்பாக ஏற்கனவே ஆறு வீரர்கள் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வேளையில் ஏழாவது வீரராக நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டு அவர் ஓய்வு பெற உள்ளார்.
இதையும் படிங்க : சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா – விவரம் இதோ
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு கருத்தில் : நான் இதுவரை இலங்கை அணிக்காக விளையாடி சாதித்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது நான் ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என்பதனால் இந்த ஓய்வு முடிவை எடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இலங்கை நாட்டில் இருந்து வெளியேறும் அவர் ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.