
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3வது போட்டியில் இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. அப்போட்டியில் 193 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் ஆரம்பத்திலேயே பொறுப்பின்றி டக் அவுட்டானார். கேஎல் ராகுல் 39 ரன்கள் எடுத்த போதிலும் மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்கத் தவறினார்கள்.
அதனால் டெய்ல் எண்டர்களுடன் சேர்ந்து 61* ரன்கள் அடித்தும் ரவீந்திர ஜடேஜாவால் இந்திய அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் சதத்தை அடித்த ஜெய்ஸ்வால் தொடர்ந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கடுத்த 2 போட்டிகளில் பெரிய ரன்கள் அடிக்காத அவர் இந்திய அணிக்கு ஏமாற்றத்தையே கொடுத்தார்.
குறிப்பாக லார்ட்ஸ் போட்டியில் அவர் ஆரம்பத்திலேயே டக் அவுட்டானது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜெயஸ்வால் திறமையிருந்தும் தேவையற்ற ஆக்ரோசத்தால் விக்கெட்டை இழப்பதாக முன்னாள் இந்திய கேப்டன் திலிப் வெங்சர்கார் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். எனவே ஆக்ரோசத்தை குறைத்துக் கொண்டு ஒவ்வொரு பந்துக்கும் தகுந்தாற்போல் ஜெய்ஸ்வால் விளையாட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜெய்ஸ்வால் நிறைய திறமைக் கொண்ட நல்ல பிளேயர். ஆனால் அவர் தன்னுடைய ஆக்ரோஷமான உள்ளுணர்வுகளைப் பின்பற்றுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் ஒவ்வொரு பந்தையும் அதனுடைய சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் விளையாட வேண்டும். கொஞ்சம் தவறு செய்தாலும் அவுட்டாகி விடுவீர்கள்”
“முதல் போட்டியில் அடித்த சதத்தை தவிர்த்து அவர் பெரிய ரன்கள் குவிக்கவில்லை. ஆனால் டெஸ்ட் போட்டிகள் போன்ற உயர்தர அளவில் நீங்கள் தொடர்ச்சியாக அசத்துவது சாவியாகும். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரிடமிருந்து நான் நிறைய எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார். அதே போல ஜாக் கிராவ்லியிடம் மோதியது கேப்டன் சுப்மன் கில் ஆட்டத்தை பாதித்ததாக விமர்சனங்கள் எழுந்தன.
இதையும் படிங்க: சிராஜ் 3 சிக்ஸருடன் ஃபினிஷிங் பண்ணுவாருன்னு நினச்சப்போ.. அவர் ஜென்டில்மேனா நடந்துகிட்டாரு.. அஸ்வின் பாராட்டு
ஏனெனில் 2வது போட்டியில் 430 ரன்கள் அடித்த அவர் 3வது போட்டியில் அரை சதம் கூட அடிக்காதது இந்தியாவின் தோல்விக்கு காரணமானது. இருப்பினும் ஜாக் கிராவ்லியுடன் மோதியதால் கில் பேட்டிங் பாதிப்படையவில்லை என்று வெங்சர்கார் மறுப்பு தெரிவித்துள்ளார். அடுத்தப் போட்டிகளில் சுப்மன் கில் மீண்டும் பெரிய ரன்கள் குவிப்பார் என்றும் அவர் நம்பிக்கையை தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து நான்காவது போட்டி ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் துவங்க உள்ளது.