பார்முக்கு திரும்ப சச்சினின் அந்த டெக்னிக்கை பின்பற்றுவதே ஒரு வழி – கோலிக்கு முன்னாள் கேப்டன் வைத்த கோரிக்கை

- Advertisement -

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி சுமார் கடந்த 3 வருடங்களாக சதமடிக்கவில்லை என்பதற்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். கடைசியாக கடந்த 2019இல் வங்கதேசத்திற்கு எதிராக சதமடித்திருந்த அவர் அதன்பின் பார்மை இழந்து டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து 100 போட்டிகளுக்கு மேலாக அடுத்த சதமடிக்க முடியாமல் தவித்து வருகிறார். இதற்கிடையே உலக கோப்பையை வாங்கி தரவில்லை என்பதால் விமர்சனங்களை சந்தித்த அவர் கேப்டன்ஷிப் அழுத்தம் தனது பேட்டிங்கை பாதித்ததாக உணர்ந்த காரணத்தால் அந்த பதவிகளை படிப்படியாக ராஜினாமா செய்து கடந்த ஜனவரியில் இருந்து சுதந்திரப் பறவையாக விளையாடத் தொடங்கினார்.

அதனால் விரைவில் பார்முக்கு திரும்பி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐபிஎல் 2022 தொடரில் 3 கோல்டன் டக் அவுட்டானது உட்பட முன்பை விட சுமாராக செயல்பட்டதால் பொறுமையிழந்த அனைவரும் எப்போது சதமடிப்பார் என்று பேச்சுக்களை விட்டுவிட்டு அணியிலிருந்து நீக்குமாறு விமர்சனத்தை எழுப்பி வருகின்றனர். இதிலிருந்து விடுபட சில மாதங்கள் ஓய்வெடுக்குமாறு ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் கொடுத்த ஆலோசனையை பின்பற்றாத அவர் தொடர்ச்சியாகவும் விளையாடாமல் இங்கிலாந்து தொடரில் மட்டும் விளையாடிவிட்டு அடுத்ததாக நடக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வெடுக்கிறார்.

- Advertisement -

அவுட் சைட் லைன்:
அதற்காக தனியாக விமர்சனத்தை சந்தித்த அவர் 7, 11, 1, 11, 16, 17 என கடைசி 6 இன்னிங்ஸ் 20 ரன்களைக் கூட தாண்ட முடியாமல் தனது தரத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் விளையாடி வருகிறார். இப்படியே போனால் வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அவரின் இடம் பறிபோய்விடும் என்பதால் அடுத்ததாக களமிறங்கும் தொடரில் நிச்சயம் பெரிய ரன்களை அடித்தே தீரவேண்டும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் சந்திக்கும் அத்தனை விமர்சனங்களுக்கும் இக்கட்டான சூழ்நிலைகளுக்கும் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைன் என்பது மிகவும் முக்கியமான ஒரு காரணமாக இருந்து வருகிறது.

பொதுவாகவே ஒவ்வொரு பேட்ஸ்மேனும் தங்களுக்கென்று ஒரு ட்ரேட்மார்க் ஷாட் வைத்திருப்பார்கள். சச்சினுக்கு ஸ்ட்ரைய்ட் ட்ரைவ் போல விராட் கோலிக்கு கவர் டிரைவ் அடிக்க மிகவும் பிடிக்கும். அதற்காக அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் அடித்துகளை முன்னே சென்று இழுத்தடிக்கும் அவருக்கு பார்மை இழந்த பின்பு அதுவே வில்லனாக மாறி விட்டது. ஏனெனில் இந்த 3 வருடங்களில் 90% போட்டிகளில் இதுபோன்ற பந்துகளில் தான் எட்ஜ் வாங்கி கேட்ச் கொடுத்து அவுட்டாகி வருகிறார்.

- Advertisement -

சச்சினை பின்பற்றுங்க:
அதை தெரிந்த எதிரணியினர் இப்போதெல்லாம் அந்த மாதிரியான பந்துகளை வீசி எளிதாக அவரை காலி செய்து விடுகின்றனர். அதனால் கடந்த 2004இல் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் இதேபோல சுமாரான ஃபார்மில் தவித்த ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவுட் சைட் ஆஃப் பந்துகளை தவிர்ப்பதற்காக மன உறுதியுடன் கவர் டிரைவ் அடிக்காமலேயே 241 ரன்கள் விளாசி வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடி ஃபார்முக்கு திரும்பியதை பின்பற்றுமாறு நிறைய முன்னாள் வீரர்கள் ஏற்கனவே கோரிக்கை வைத்தனர். ஆனால் அதை கொஞ்சமும் பின்பற்றாத விராட் கோலி ஈகோவை விட்டுக்கொடுக்காமல் அதே மாதிரியான பந்துகளில் அவுட்டாகி வருகிறார்.

இந்நிலையில் இந்த சுமாரான பார்மில் இருந்து திரும்ப சிட்னியில் சச்சின் காட்டிய வழியைப் பின்பற்றுமாறு முன்னாள் இந்திய கேப்டன் திலிப் வெங்சர்கார் விராட் கோலியை நேரடியாக கேட்டுக்கொண்டுள்ளார். இதுபற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவில் 2004இல் இதே மாதிரியாக தொடர்ச்சியாக அவுட்டான சச்சினை நீங்கள் எடுத்துக் காட்டாக எடுத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

அந்த பகுதியில் அவர் ரன்கள் அடிப்பதை முற்றிலுமாக நிறுத்தி அந்த தொடரின் கடைசி போட்டியில் கவர் டிரைவ் அடிக்காமலேயே 241 ரன்கள் விளாசினார். அதை செய்யும் திறமை விராட் கோலியிடமும் உள்ளது. அந்தப் பகுதியில் அவர் கடினமாக உழைத்தால் நல்ல முன்னேற்றத்தைக் காண முடியும்”. “மிகச்சிறந்த வீரரான விராட் கோலி ஆரம்ப காலம் முதல் அனைத்து இடங்களிலும் ரன்களை அடித்துள்ளார். எனவே நுணுக்கங்கள் அடிப்படையில் அவரிடம் பெரிதாக எதுவும் தவறாக இல்லை.

இதையும் படிங்க : IND vs WI : முதல் ஒருநாள் போட்டியில் மட்டுமின்றி 3 போட்டியிலும் விளையாடமுடியாத நிலையில் – இந்திய வீரர்

ஆனால் ஒரே மாதிரியாக நீங்கள் அவுட்டாகும்போது அதில் நீங்கள் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும். ஏனெனில் இப்போதெல்லாம் அனைத்து பவுலர்களும் உங்களுக்கு ஆஃப் ஸ்டம்ப் லைனில் பந்து வீசுகிறார்கள். நீங்கள் அதில் பலவீனமாக உள்ளதால் உங்களுக்கு எதிராக அவர்கள் கால்கள் மற்றும் ஹால்ஃப் வாலி பந்துகளை வீச மாட்டார்கள்” என்று கூறினார்.

Advertisement