வினோத நோபால்.. நேர்மைத் தவறாத பண்ட்.. தடை பெற்றும் திருந்தாமல் ஜிதேஷிடம் அடி வாங்கிய திக்வேஷ்

Digvesh Rathi
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்தது. மே 27ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 228 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் 118* ரன்களை எடுத்து அசத்தினார்.

அடுத்து விளையாடிய பெங்களூரு மிகச் சிறப்பாக விளையாடி 18.4 ஓவரிலேயே 230/4 ரன்களை எடுத்து தங்களுடைய 9வது வெற்றியைப் பெற்றது. அதனால் புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பிடித்த அந்த அணி குவாலிபயர் 1 போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக பில் சால்ட் 30, விராட் கோலி 54, கேப்டன் ஜிதேஷ் ஷர்மா 85* (33), மயங் அகர்வால் 41* (23) ரன்களை அடித்து வெற்றிக்கு உதவினர்.

- Advertisement -

திருந்தாத திக்வேஷ்:

மறுபுறம் சொந்த மண்ணில் லக்னோ ஆறுதல் வெற்றி கூட பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறியது. முன்னதாக இந்த வருடம் லக்னோ அணிக்காக அறிமுகமாகி விளையாடிய இளம் வீரர் திக்வேஷ் சிங் ரதி விக்கெட்டை எடுக்கும் போதெல்லாம் நோட்புக்கில் எழுதுவது போல கொண்டாடினார். அதற்காக 2 முறை அபராதத்தை சந்தித்த அவர் ஹைதராபாத்துக்கு எதிரானப் போட்டியில் அதே போல கொண்டாடி அபிஷேக் ஷர்மாவுடன் சண்டையிட்டார்.

அதனால் கடந்த போட்டியில் விளையாடுவதற்கு தடைப் பெற்ற அவர் இப்போட்டியில் விளையாடினார். அந்த சூழ்நிலையில் ஆர்சிபி கேப்டன் ஜிதேஷ் சர்மா 49 ரன்னில் இருந்த போது அவர் வீசிய முதல் பந்தை அடித்து கேட்ச் கொடுத்து அவுட்டானார். அப்போது வழக்கம் போல திக்வேஷ் தரையில் எழுதி விக்கெட்டை கொண்டாடினார்.

- Advertisement -

இதெல்லாம் தேவையா:

ஆனால் அதை நடுவர்கள் சோதித்த போது திக்வேஷ் பக்கவாட்டு பகுதியின் உச்சபட்ச வெள்ளைக்கோட்டை தாண்டி பந்தை வீசியது தெரிய வந்தது. அதனால் அந்தப் பந்தை நோபால் என்று நடுவர்கள் அறிவித்ததை தொடர்ந்து மீண்டும் வீசப்பட்ட பந்தில் ஜிதேஷ் சர்மா சிக்ஸரை பறக்கவிட்டு அவருக்கு பதிலடி கொடுத்தார். அதனால் எப்படியாவது ஜிதேஷ் அவுட்டாக வேண்டும் என்று நினைத்த திக்வேஷ் அதற்காக அதே ஓவரின் 5வது பந்தில் அவரை மன்கட் முறையில் ரன் அவுட்டாக்கினார்.

இதையும் படிங்க: நான் சிம்பிளா இதை மட்டும் தான் பண்ணேன்.. மத்ததெல்லாம் ஜிதேஷ் பாத்துக்கிட்டாரு – மாயங்க் அகர்வால் பூரிப்பு

அதைப் பார்த்த விராட் கோலி மற்றும் பெங்களூரு ரசிகர்கள் கோபத்தின் உச்சத்திற்கே சென்றனர். இருப்பினும் அப்போது அந்த விக்கெட்டை வாபஸ் பெறுவதாக அறிவித்த லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் நேர்மைத் தவறாமல் நடந்து கொண்டார். மொத்தத்தில் திக்வேஷ் செய்கைகளைப் பார்த்த ரசிகர்கள் தடைப் பெற்றும் நீங்கள் திருந்தவில்லையா என்று சமூக வலைதளங்களில் சாடுகின்றனர்.

Advertisement