தம்பி இதெல்லாம் உனக்கு தேவையா? இப்படியெல்லாம் செய்யக்கூடாது.. எச்சரிக்கையுடன் தண்டிக்கப்பட்ட லக்னோ வீரர்

Digvesh Rathi
- Advertisement -

நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13-ஆவது லீக் போட்டியானது நேற்று லக்னோ நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் முதலில் தங்களது அணி பந்து வீசுவதாக அறிவித்தார்.

விக்கெட் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட லக்னோ வீரருக்கு விதிக்கப்பட்ட அபராதம் :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணி பஞ்சாப் அணியின் சிறப்பான பந்துவீச்சை சற்று தடுமாற்றத்துடன் எதிர்கொண்டு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது. லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக பூரான் 44 ரன்களையும், ஆயுஷ் பதோனி 41 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது 16.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 177 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது லக்னோ அணி சார்பாக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய சுழற்பந்து வீச்சாளரான திக்வேஷ் ரதி 4 ஓவர்கள் பந்துவீசி 30 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது அவர் பஞ்சாப் அணியின் துவக்க வீரரான பிரியான்ஷ் ஆர்யாவின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் மோசமான முறையில் ஆக்ரோஷமாக விக்கெட் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் அவருக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதமும் விதித்துள்ளது. அந்த வகையில் பிரியான்ஷ் ஆர்யா ஆட்டமிழந்து வெளியேறும் போது அவரது அருகில் சென்ற திக்வேஷ் ரதி கையில் ஏதோ எழுதுவது போன்று “நோட்புக்” செலிப்ரேஷனில் ஈடுபட்டார்.

- Advertisement -

இப்படி பேட்ஸ்மேனை நோகடிக்கும் வகையில் மோசமான வகையில் நடந்து கொண்டதற்காக அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25% அபராதம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்று இனி நடந்து கொள்ளக்கூடாது என அவருக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இவருக்கு எதுக்கு 27 கோடி? சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ரிஷப் பண்ட் மீது – ரசிகர்கள் அதிருப்தி

ஏற்கனவே கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா ஆக்ரோஷமாக விக்கெட் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதற்காக தண்டிக்கப்பட்டு இருந்த வேளையில் நேற்று இந்த ஆண்டின் முதல் வீரராக லக்னோ வீரர் திக்வேஷ் ரதி தண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement