இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு பிறகு 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது கடந்த ஆண்டு இறுதியில் சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணிகளும் தக்கவைக்கப்பட்ட வீரர்களை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் மெகா ஏலத்தில் பங்கேற்றனர். அந்த வகையில் நடைபெற்ற மெகா ஏலத்தில் 10 அணிகளை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான வீரர்களை விலைக்கு வாங்கியிருந்தனர். இதன் காரணமாக பெரிய அளவில் வீரர்களின் அணி மாற்றமும் நிகழ்ந்தது. அதோடு நட்சத்திர வீரர்கள் சிலர் பல கோடிக்கு விலை போகியிருந்தனர். அதே போன்று வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கும் வாய்ப்புகள் கிடைத்தது.
ரிஷப் பண்ட்டின் ஆட்டத்தை விமர்சிக்கும் ரசிகர்கள் :
அந்த வகையில் நடைபெற்ற முடிந்த 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு விலைபோன வீரராக ரிஷப் பண்ட் 27 கோடி ரூபாய்க்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார். அவருக்கு அடுத்து ஷ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி 26 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு வாங்கியது. மேலும் மூன்றாவது பெரிய தொகைக்கு வெங்கடேஷ் ஐயரை 23 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டார்.
இந்நிலையில் இப்படி பெரிய தொகையில் வாங்கப்பட்ட வீரர்களில் ஷ்ரேயாஸ் ஐயர் மட்டுமே தற்போது பஞ்சாப் அணிக்காக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் வேளையில் ரிஷப் பண்ட் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சொதப்பி வருகின்றனர். அதிலும் குறிப்பாக லக்னோ அணியால் வாங்கப்பட்டு அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரிஷப் பண்ட்டின் ஆட்டம் மிக மோசமாக உள்ளது.
இந்த தொடரில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற வேளையில் இந்த மூன்று போட்டியிலும் ரிஷப் பண்ட் முறையே 0, 15, 2 ஆகிய ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதிலும் குறிப்பாக நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் அணியின் ஸ்கோரை அதிகரிக்க வேண்டிய முக்கியமான நான்காவது இடத்தில் இறங்கி 5 பந்துகளை மட்டுமே சந்தித்து 2 ரன்களில் ஆட்டமிழந்தது அந்த அணியின் சரிவுக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது.
இதன் காரணமாக தற்போது ரசிகர்கள் அனைவரும் பிஷப் பண்ட்டின் மோசமான ஆட்டத்தை சுட்டிக்காட்டி அவரை காட்டமாக விமர்சித்தும் வருகின்றனர். ஏனெனில் ஐபிஎல் தொடரில் திறமை வாய்ந்த பலருக்கு சில கோடிகள் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டு வரும் வேளையில் இதுவரை ஐபிஎல் தொடரில் 2018 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளை தவிர்த்து எந்த ஒரு தொடரிலும் சிறப்பாக செயல்படாத ரிஷப் பண்டிற்கு எதற்கு 27 கோடி? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க : இது கிடைச்சா போதும் இந்தியாவுக்காக விளையாடலாம்.. பாண்டிங் கொடுத்த மெசேஜ் இது தான்.. பிரப்சிம்ரன் பேட்டி
2018 ஆம் ஆண்டு 1 சதம் மற்றும் 5 அரைசதம் என 686 ரன்களை குவித்த ரிஷப் பண்ட் அதற்கடுத்து கடந்த ஆண்டு 446 ரன்களை குவித்திருந்தார். அதனை தவிர்த்து அவர் வேறு எந்த தொடரிலும் பெரிய அளவில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை. எனவே இவருக்கு எதுக்கு 27 கோடி ரூபாய்? இப்படி ஆட்டமிழப்பதற்காகவா இவ்வளவு தொகை கொடுக்கிறீர்கள்? என்று ரசிகர்கள் அவரை விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.



