துருவ் ஜுரேல், சர்ப்ராஸ் கானுக்கு பிசிசிஐ கொடுத்த மிகப் பெரிய அங்கீகாரம்.. ரசிகர்கள் வரவேற்பு

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக சமீபத்தில் நிறைவு பெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி வென்றது. குறிப்பாக டி20 போல அதிரடியாக விளையாடி தோற்கடிப்போம் என்று சொன்ன இங்கிலாந்து முதல் போட்டியில் வென்றது. ஆனால் அதற்கடுத்த 4 போட்டிகளில் அபாரமாக விளையாடி கம்பேக் கொடுத்த இந்தியா தொடரை வென்று உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாகவும் முன்னேறியது.

அந்தத் தொடரில் விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமலேயே இந்தியா வெற்றி பெறுவதற்கு ஜெய்ஸ்வால், சுப்மன் கில், சர்பராஸ் கான், துருவ் ஜுரேல் போன்ற இளம் வீரர்கள் முக்கிய காரணமாக அமைந்தனர். குறிப்பாக நீண்ட போராட்டத்திற்கு பின் அறிமுகமாக களமிறங்கிய சர்பராஸ் கான் முதல் போட்டியிலேயே 2 இன்னிங்ஸிலும் அரை சதமடித்து வெற்றியில் பங்காற்றினார்.

- Advertisement -

பிசிசிஐ அங்கீகாரம்:
மேலும் விக்கெட் கீப்பராக அறிமுகமான துருவ் ஜுரேல் 4வது போட்டியில் தோல்வியின் பிடியில் இந்தியா சிக்கியிருந்த போது 90, 39* ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது வென்றார். அதனால் தோனி போல துருவ் ஜுரேல் வருவார் என்று கவாஸ்கர் பாராட்டினார். மொத்தத்தில் அந்த 2 வீரர்களும் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களாக தங்களை அடையாளப்படுத்தினார் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோரை இந்திய அணியின் 2023 – 24 காலண்டர் வருடத்திற்கான மத்திய சம்பள ஒப்பந்தத்தில் பிசிசிஐ இணைத்துள்ளது. மார்ச் 18ஆம் தேதி மும்பையில் பிசிசிஐ தலைமை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் இங்கிலாந்து தொடரில் அறிமுகமாகி அசத்திய அந்த 2 வீரர்களுக்கும் சம்பள ஒப்பந்தத்தில் இடம் கொடுப்பதாக முடிவெடுக்கப்பட்டது.

- Advertisement -

குறிப்பாக 3 டெஸ்ட் அல்லது 8 ஒருநாள் அல்லது 10 டி20 போட்டிகளில் விளையாடி அசத்தும் வீரர்களுக்கு சம்பள ஒப்பந்தத்தில் இடம் கொடுக்கலாம் என்பது பிசிசிஐ விதிமுறையாகும். அதன் படி இங்கிலாந்து தொடரில் அறிமுகமான சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோர் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதால் விதிமுறைப்படி அவர்களை மத்திய சம்பள ஒப்பந்தத்தில் வருடத்திற்கு 1 கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கும் சி பிரிவில் பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது.

இதையும் படிங்க: கடைசி நேரத்தில் வெளியேறிய ஜேசன் பெரன்ஃடார்ப்.. உடனடியாக அதிரடி இங்கிலாந்து பவுலரை வாங்கிய மும்பை

இந்த முடிவுக்கு இந்திய ரசிகர்கள் வரவேற்பு தெரிவிக்கின்றனர். அத்துடன் ரஞ்சிக் கோப்பை டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடத்தும் போது பனியின் தாக்கம், மோசமான வானிலை போன்றவற்றால் பாதிப்பை சந்திக்கிறது. எனவே அடுத்த ரஞ்சிக் கோப்பையின் அட்டவணையை மாற்றி அமைப்பதற்கான தீர்மானமும் பிசிசிஐ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement