
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 14 போட்டிகளில் நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தினை பிடித்து வெளியேறியிருந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இந்த மோசமான செயல்பாடு ரசிகர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இதன் காரணமாக அடுத்த 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அந்த அணியில் குறிப்பிட்ட சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் அந்த அணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுவதால் அவருக்கு பதிலாக புதிய கேப்டன் நியமனம் செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஏனெனில் ஏற்கனவே அந்த அணியின் நிர்வாகம் ரியான் பராக்கை புதிய கேப்டனாக மாற்ற முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்படி ஒருவேளை சஞ்சு சாம்சன் வெளியேறினால் ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டன் பதவிக்கு அந்த அணியின் நட்சத்திர இளம் விக்கெட் கீப்பரான துருவ் ஜுரேலும் போட்டிக்கு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன்சி குறித்து பேசிய துருவ் ஜுரேல் கூறுகையில் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகம் எனக்கு எந்த ரோலை வழங்கினாலும் அதனை எடுத்து செயல்பட நான் ஆர்வமாக காத்திருக்கிறேன். ஏனெனில் எனக்கு மிகவும் தேவைப்பட்ட நேரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிதான் முதல் முறையாக வாய்ப்பு வழங்கியது.
என்னுடைய திறமையை மிகப் பெரிய பிளாட்பார்மில் வெளிக்காட்ட முதல் வாய்ப்பினை ராஜஸ்தான் அணியே வழங்கியது. என்னுடைய வாழ்க்கையை மாற்றியதும் இந்த அணிதான். எனவே கேப்டன் பதவியை அவர்கள் எனக்கு தருகிறார்களோ? இல்லையோ? நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக என்னுடைய 2000 சதவீதம் உழைப்பையும் வெளிப்படுத்துவேன். எனக்கு ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவி என்பதெல்லாம் முக்கியமல்ல.
இதையும் படிங்க : ஆசிய கோப்பை தொடருக்கான துணை கேப்டன் சுப்மன் கில்லுக்கு வாழ்த்து கூறிய முகமது சிராஜ் – விவரம் இதோ
என்னுடைய அணிக்காக கோப்பையை கைப்பற்றி தர வேண்டும் அதுதான் என்னுடைய விருப்பம். எனக்கு மட்டுமல்ல சஞ்சு சாம்சன், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக் ஆகிய பலரும் இதை நினைத்தே விளையாடி வருகிறோம். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக எப்பொழுதுமே என்னுடைய முழு திறனையும் வெளிப்படுத்தி விளையாடுவேன் என துருவ் ஜுரேல் கூறியது குறிப்பிடத்தக்கது.