பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது 13 ஆவது சீசனுக்கான முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே துவங்கியுள்ளது. சற்று நேரத்திற்கு முன் டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச தீர்மானித்தார்.
பகல்நேரம் சாதாரண பனிப்பொழிவின் காரணமாக முதலில் மைதானம் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்ற காரணத்தினாலும், இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் பிடிக்க வசதியாக இருக்கும் என்ற காரணத்தினாலும் இந்த முடிவை எடுத்ததாகவும் தோனி அறிவித்தார். மேலும் இந்த போட்டியில் சென்னை அணி தேர்வில் பல்வேறு அதிரடி முடிவுகளை தோனி எடுத்துள்ளார்.
அதாவது இந்த போட்டியில் முக்கிய வீரர்களான ஆல்ரவுண்டர் பிராவோ மற்றும் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் ஆகியோர் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக இளம் வீரரான சாம் கரன் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான லுங்கி நெகிடி ஆகியோர் விளையாடுகின்றனர்.
மேலும் இம்முறை யார் சென்னை அணியின் துவக்க வீரராக களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முரளி விஜயுடன் வாட்சன் களமிறங்குகிறார். பலரும் எதிர்பார்த்த மூன்றாவது இடத்தில் டுபிளேசிஸ் விளையாடுகிறார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திரும்பிய தீபக் சஹர் அணியில் திரும்பி இருப்பது அணிக்கு பலத்தை அளிக்கும் விதமாக உள்ளது.
மும்பை அணியை பொறுத்தவரையில் ரோஹித் மற்றும் பின் டிகாக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்க உள்ளனர். இன்னும் சிறிது நேரத்தில் போட்டி ஆரம்பிக்க உள்ளது. மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து விளையாட இருப்பது சென்னை அணிக்கு சாதகமாகவும் பார்க்கப்படுகிறது.