ஐபிஎல் தொடரின் 38 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஐயர் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக தொடக்க வீரர் ஷிகர் தவான் 61 பந்துகளில் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவரை தவிர மற்ற யாரும் 15 ரன்கள் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணி சார்பாக நிக்கலஸ் பூரன் 53 ரன்களையும், மேக்ஸ்வெல் 32 ரன்களை குவித்தனர். இறுதியில் தீபக் ஹூடா மற்றும் ஜிம்மி நீஷம் ஆகியோர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். பஞ்சாப் அணி கடைசியாக நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் ஷிகர் தவான் கூறுகையில் : இந்த போட்டியில் நான் விளையாடியது சிறப்பான ஒன்று. ஆனால் மற்ற வீரர்கள் நிலைத்து ஆடவில்லை அதனால் இந்த போட்டியில் அனைத்து பொறுப்பையும் நான் எடுத்து இறுதி வரை சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருக்கிறேன். பவுண்டரிகள் அடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் அடித்துக்கொண்டே இருந்தேன்.
என்னுடைய டெஸ்ட் அறிமுகத்தின் போதும் கூட நான் இதே போன்று பவுண்டரிகளை அவ்வப்போது அடித்துக் கொண்டிருந்தது எனக்கு நினைவுக்கு வந்தது. ஒரு நல்ல ஓய்வுக்குப் பிறகு சிறப்பாக விளையாட தொடங்கியிருக்கிறேன். அடுத்தடுத்து இரண்டு சதங்களை அடித்த முதல் ஆள் நான்தான் என்பது எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை. அதை விட இப்போது அணியில் என்ன விடயத்தை அதிகப்படுத்தி முன்னேற்ற வேண்டும் என்ற கருத்தையே நாங்கள் டிஸ்கஸ் செய்து வருகிறோம்.
எங்களால் சிறப்பாக தொடர்ச்சியாக விளையாட முடியும். இந்த தோல்வி எங்களை கீழே தள்ளவில்லை என்றாலும் இதிலிருந்து பலமாக திரும்பி வர முயற்சிப்போம் என்று தவான் கூறியது குறிப்பிடத்தக்கது.