ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் ஏமாற்றமானதாக அமைந்தது. 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக சாதனைப் படைத்துள்ள சென்னை இந்த வருடம் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடியது. மொத்தமாக 14 போட்டிகளில் விளையாடிய அந்த அணி வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் வரலாற்றிலேயே முதல் முறையாக கடைசி இடத்தைப் பிடித்து மோசமான சாதனை படைத்தது.
மேலும் 2020, 2022, 2024 ஆகிய வருடங்களுக்குப் பின் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் சிஎஸ்கே வெளியேறியது சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் அடுத்த வருடம் கம்பேக் கொடுப்பதற்காக சிஎஸ்கே நிர்வாகம் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தது. அந்த வாய்ப்பில் தென்னாப்பிரிக்காவின் இளம் வீரர் தேவால்ட் ப்ரேவிஸ் அதிரடியாக விளையாடி நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.
அசத்திய ப்ரேவிஸ்:
குறிப்பாக குஜராத்துக்கு எதிரான போட்டியில் 19 பந்தில் 50 ரன்கள் அடித்த அவர் சிஎஸ்கே அணிக்காக 2வது வேகமான அரை சதத்தை அடித்த வீரராக சாதனை படைத்தார். அதே போல கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 30 ரன்கள் அடித்த அவர் சென்னையின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். மொத்தத்தில் வெறும் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் சிஎஸ்கே அணிக்காக 2வது அதிக ரன்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.
இந்நிலையில் ஐபிஎல் 2025 தொடரை முடித்துக் கொண்டு தேவால்ட் ப்ரேவிஸ் தென்னாப்பிரிக்கா திரும்பியுள்ளார். அதற்கு முன்பாக தமக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டை ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பளித்த சிஎஸ்கே நிர்வாகத்திற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் சேப்பாக்கத்தில் தமக்கு சிஎஸ்கே ரசிகர்கள் கொடுத்த ஆரவாரமிக்க ஆதரவை மறக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ப்ரேவிஸ் நன்றி:
இது பற்றி இன்ஸ்டாகிராமில் தோனி மற்றும் சிஎஸ்கே வீரர்களுடன் இருக்கும் புகைப்படங்களுடன் ப்ரேவிஸ் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “சென்னை, நிர்வாகம் பயிற்சியாளர்கள், என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி. அவர்கள் நான் விரும்பும் விஷயமான கிரிக்கெட்டை விளையாடுவதற்கான வாய்ப்பைக் கொடுத்தார்கள்”
இதையும் படிங்க: ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் முப்படை தளபதிகளுக்கு கிடைக்கவுள்ள கவுரவம் – பி.சி.சி.ஐ செய்துள்ள ஏற்பாடு
“முதல் நாளிலிருந்தே என்னை வரவேற்று சிறப்பாக உணர வைத்த என்னுடைய சக சிஎஸ்கே வீரர்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள். இந்தியாவில் இருக்கும் எங்களுடைய அனைத்து சிஎஸ்கே ரசிகர்களும் அற்புதமானவர்கள். சேப்பாக்கம் மைதானத்தில் அவர்கள் ஏற்படுத்திய சூழ்நிலையும் கொடுத்த ஆதரவும் மறக்க முடியாதது. நான் மீண்டும் விரைவில் வருவேன் என்று நம்புகிறேன்” என அன்புடன் பதிவிட்டுள்ளார்.



