ஆஸ்திரேலிய மண்ணில் தென்னாப்பிரிக்கா 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியாவை 2வது போட்டியில் தென்னாப்பிரிக்கா 53 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்த வெற்றிக்கு 22 வயதாகும் இளம் வீரர் தேவால்ட் ப்ரேவிஸ் 125* (56) ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் சதத்தை அடித்து அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற இரட்டை சாதனைகளையும் அவர் படைத்தார். தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் போல விளையாடும் ஸ்டைலைக் கொண்ட அவரை பேபி ஏபி என்று பலரும் பாராட்டுகின்றனர். கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அறிமுகமான அவர் நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தினார்.
பேபி ஏபிடி கிடையாது:
இந்நிலையில் ஏபி டீ வில்லியர்ஸ் உட்பட யாரைப் போலவும் அல்லாமல் சிறப்பாக விளையாடி தம்முடைய பெயரை நிரூபிக்க விரும்புவதாக பிரேவிஸ் கூறியுள்ளார். கடவுள் தமக்கு கொடுத்துள்ள திறமையை பயன்படுத்தி தமக்கென்று பெயரை எடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அதிரடியாக விளையாடுவதற்கான திறமையைக் கடவுள் எனக்கு ஆசீர்வாதமாகக் கொடுத்துள்ளார் என்று நம்புகிறேன்”
“கடந்த வருடம் டிசம்பர் 28ஆம் தேதி எனக்கு நானே உறுதி எடுத்துக் கொண்டேன். எனக்கு சில பெயர்கள் கிடைத்துள்ளன. இருப்பினும் நான் ஒரிஜினல் தேவால்ட் ப்ரேவிஸாக இருக்க மட்டுமே விரும்புகிறேன். அந்தப் பக்கத்திலிருந்து ஒவ்வொரு பந்தையும் பார்த்து அடிக்க விரும்புகிறேன். அங்கே தான் எப்போதும் நான் இருக்க வேண்டுமென்று நம்புகிறேன்”
ஒரிஜினல் தேவால்ட் ப்ரேவிஸ்:
“இவை அனைத்தும் கிரிக்கெட்டை பொறுத்தது, எப்படி விஷயங்கள் வேலை செய்கின்றன என்பதைப் பொறுத்தது. இந்த நெடிய ஓட்டத்தில் நீங்கள் மேடு பள்ளங்களில் இருப்பீர்கள். ஆனால் அப்போதெல்லாம் என்னைப் பற்றி நான் சந்தேகப்பட்டதில்லை. இங்கே நானும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்”
இதையும் படிங்க: இந்தியாவை விட பாகிஸ்தான் மேட்ச் முக்கியமா? எங்கள மாதிரி வெளியேறுங்க.. பிசிசிஐயை விமர்சித்த ஹர்பஜன்
“அவை அனைத்தும் உங்களுடையப் பயணத்தின் ஒரு அங்கமாகும். அதுவே உங்களை வலுவாக மாற்றும். அதனாலேயே நானும் இங்கே விளையாட வந்திருக்கிறேன்” என்று கூறினார். மொத்தத்தில் தென்னாபிரிக்க அணிக்கு வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக பிரேவிஸ் கிடைத்துள்ளது அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அதே போல சிஎஸ்கே கிரிக்கெட் அணி ரசிகர்களும் அவருடைய ஆட்டத்தால் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.



