
21ஆம் நூற்றாண்டில் டி20 கிரிக்கெட்டின் வருகையால் வீரர்களிடையே சர்வதேச கிரிக்கெட்டுக்கு மவுசும் முக்கியத்துவமும் குறைந்து வருகிறது. அதை விட ஐபிஎல் போன்ற டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட கோடிக்கணக்கான ரூபாய்கள் சம்பளமாக கிடைக்கிறது. அதனால் இப்போதெல்லாம் பல வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதை விட டி20 தொடர்களில் விளையாடுவதற்கு முக்கியத்துவத்தை கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
அதற்காக ஜேசன் ராய், ட்ரெண்ட் போல்ட் போன்ற வீரர்கள் தங்களுடைய தேசிய அணியின் மத்திய சம்பள ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தனர். இந்நிலையில் டி20 லீக் தொடர்களால் நியூசிலாந்து அணி தற்போது மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க துவங்கியுள்ளது. ஆம் ஏற்கனவே அந்த அணியின் மத்திய சம்பள ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய ட்ரெண்ட் போல்ட் 2024 டி20 உலகக் கோப்பையுடன் நியூஸிலாந்துக்காக சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக 35 வயதிலேயே அறிவித்தார்.
சரியும் நியூஸிலாந்து:
அதைத்தொடர்ந்து நியூசிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் கேன் வில்லியம்சன் மத்திய ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். அந்த வரிசையில் தற்போது டேவோன் கான்வே நியூசிலாந்து அணியின் மத்திய சம்பள ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி சாதாரண வீரராக விளையாட உள்ளதாக அறிவித்துள்ளார். குறிப்பாக டி20 லீக் தொடர்களில் விளையாடுவதற்காகவும் தமது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக கான்வே தெரிவித்துள்ளார்.
அதே சமயம் தாம் விரும்பும் தொடர்களில் தொடர்ந்து நியூசிலாந்துக்காக விளையாடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முதலில் இந்த செயல்பாடுக்கு அனுமதியளித்த நியூஸிலாந்து கிரிக்கெட்டுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது நான் எடுத்த இலகுவான முடிவல்ல”
“ஆனால் இந்த நேரத்தில் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இதுவே சிறந்தது என்று தான் நம்புகிறேன். இப்போதும் நியூசிலாந்துக்காக விளையாடுவது என்னுடைய உச்சமாக இருக்கிறது. நியூசிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்துவதிலும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறுவதிலும் நான் ஆர்வத்துடன் இருக்கிறேன். அதனால் அடுத்ததாக வரும் டெஸ்ட் தொடர்களில் நான் விளையாட உள்ளேன்”
இதையும் படிங்க: 5 மெய்டன் 14 ரன்ஸ் 5 விக்கெட்ஸ்.. இன்னும் முடிஞ்சு போகல.. அகர்கர், கம்பீருக்கு இங்கிலாந்தில் சஹால் பதிலடி
“பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி தொடரிலும் தேர்வானால் விளையாட தயாராக உள்ளேன்” என்று கூறினார். இதே போல லாக்கி பெர்குசன், பின் ஆலன் ஆகியோரும் நியூசிலாந்து அணியின் மத்திய ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளனர். மொத்தத்தில் குறுகிய காலத்தில் ட்ரெண்ட் போல்ட், வில்லியம்சன், கான்வே, ஆலன், பெர்குசன் ஆகிய 5 முக்கியமான வீரர்கள் மத்திய ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியுள்ளனர். இது நியூசிலாந்தின் வீழ்ச்சிக்கு வித்திடும் விதையாக அமையும் என்பதால் அந்நாட்டு ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.