புஜாராவை நம்பாதீங்க, ரோஹித்துக்கு பதில் அஸ்வின் தான் சரியான டெஸ்ட் கேப்டன் – முன்னாள் வீரர் அதிரடி

- Advertisement -

இங்கிலாந்தில் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்றின் முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பையின் ஃபைனலில் விராட் கோலி தலைமையில் நியூஸிலாந்திடம் தோல்வியை சந்தித்த இந்தியா இம்முறையும் அதிலிருந்து எந்த பாடத்தையும் கற்காமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலககோப்பை ஃபைனலில் ரோகித் சர்மா தலைமையில் தோற்றது. குறிப்பாக இம்முறை ஒரு படி மேலே சென்று 209 ரன்கள் வித்தியாசத்தில் மெகா தோல்வியை சந்தித்த இந்தியா ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக இருந்தும் டாஸ் அதிர்ஷ்டத்தை பயன்படுத்த தவறியதும் சரியான 11 வீரர்களை தேர்வு செய்யாததும் தோல்வியை கொடுத்தது.

அதிலும் குறிப்பாக ஏற்கனவே அதிக இடது கை பேட்ஸ்மேன்களை அவுட் செய்த வீரராக உலக சாதனை படைத்து தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அஸ்வினை ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் 5 பேர் இடது கை வீரர்களாக இருந்தும் தேர்ந்தெடுக்காத ரோஹித் சர்மாவின் முடிவு உச்சகட்ட விமர்சனங்களை எழுப்பியது. முன்னதாக 2014ஆம் ஆண்டு தரவரிசையில் 7வது இடத்தில் திண்டாடிய இந்தியாவை தம்முடைய ஆக்ரோஷம் நிறைந்த கேப்டன்ஷிப் வாயிலாக 2016 முதல் 2021 வரை உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வெற்றிகளை பெற்றுக் கொடுத்த விராட் கோலி சர்ச்சைக்குரிய முறையில் கேப்டனாக விலகிய பின் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார்.

- Advertisement -

கேப்டனாக அஸ்வின்:
இருப்பினும் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் வாய்ந்த அவரது தலைமையில் வழக்கம் போல இருதரப்பு தொடர்களில் வென்று நம்பர் ஒன் இடத்தைப் பெற்ற இந்தியா 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்தித்த நிலையில் தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் வெற்றி காண முடியவில்லை. அந்த வகையில் எந்த மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் சந்திக்காத அவருக்கு பதிலாக புதிய கேப்டன் நியமிக்கப்பட வேண்டும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் ஏற்கனவே ஹர்திக் பாண்டியா கேப்டனாக மறைமுகமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏன் அஸ்வின் கேப்டனாக வரக்கூடாது என முன்னாள் இந்திய வீரர் தேர்வுக்குழு உறுப்பினர் தேவங் காந்தி கூறியுள்ளார். குறிப்பாக சயின்டிஸ்ட் என்று சேவாக் போன்றவர்கள் பாராட்டும் அளவுக்கு கிரிக்கெட்டின் நுணுக்கமான அறிவுகளை தெரிந்த அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்று கூறும் அவர் இது பற்றி சமீபத்தில் பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஏன் அஸ்வின் கேப்டனாக வரக்கூடாது? ஒருவேளை வெளிநாடுகளில் அவர் முக்கியமற்ற வீரர் என்று நீங்கள் சொன்னால் துணை கேப்டனாக இருந்த ரகானே ஒரு கட்டத்தில் விளையாடும் 11 பேர் அணியில் இருந்து நீக்கப்பட்டதை நினைத்துப் பாருங்கள். எனவே இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக அஸ்வின் அல்லது ரகானேவை தற்காலிகமாக நியமிக்கலாம். மேலும் சுப்மன் கில் வரும் காலங்களில் அணியில் தன்னுடைய இடத்தை உறுதிப்படுத்துவார் என்று நம்பலாம்” என்று கூறினார். அவர் கூறுவது போல டெஸ்ட் கிரிக்கெட்டில் 450க்கும் மேற்பட்ட விக்கெட்களையும் 5 சதங்களையும் அடித்து நம்பர் ஒன் பவுலராகவும் உலகின் நமபர் 2 ஆல் ரவுண்டராகவும் இருக்கும் அஸ்வின் கேப்டனாக பொறுப்பேற்க முழு தகுதியுடையவர்.

குறிப்பாக 36 வயதை தொட்டாலும் 2008இல் ஸ்பின்னராக மூத்த வயதில் கேப்டனாக செயல்பட்ட ஜாம்பவான் அனில் கும்ப்ளேவுக்கு நிகராக அனுபவத்தையும் தரத்தையும் கொண்ட அஸ்வின் அந்த பதவிக்கு தகுதியுடையவர். ஆனாலும் இதுவரை அவரை துணை கேப்டனாக கூட பிசிசிஐ அறிவிக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு புரியாத புதிதாக இருக்கிறது. அத்துடன் இங்கிலாந்து சூழ்நிலைகளில் கவுண்டி தொடரில் விளையாடி நல்ல ஃபார்மில் இருந்தும் இப்போட்டியில் சொதப்பிய புஜாராவை இனியும் நம்பாமல் ஜெயஸ்வால் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்த அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க:உ.கோ விட ஐபிஎல் கோப்பை ஜெயிப்பது கஷ்டம், இன்னும் 6 மாசத்துல ரோஹித், டிராவிட் அந்த மேஜிக் பண்ணுவாங்க – கங்குலி உறுதி

“அடுத்ததாக நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒருவேளை புஜாரா ரன்கள் அடித்தால் அதன் பின் டிசம்பர் வரை எந்த டெஸ்ட் தொடரும் இல்லாததால் அடுத்த ஒரு வருடத்திற்கு அவர் காலத்தை தள்ளி விடுவார். எனவே அந்த தவறை செய்யாமல் நேரடியாக ஜெயஸ்வால் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து பெரிய போட்டிகளுக்கு முன்பாக தயாராக்குங்கள்” என்று கூறினார்.

Advertisement