இங்கிலாந்தில் 100 பந்துகளை கொண்ட மகளிர் ஹண்ட்ரட் தொடரில் லண்டன் ஸ்பிரிட் அணி சாம்பியன் பட்டம் வென்றது. குறிப்பாக ஆகஸ்ட் 18ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் வெல்ஸ் ஃபயர் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய அந்த அணி கோப்பையை வென்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெல்ஸ் ஃபயர் 100 பந்துகளில் 115/8 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஜெஸ் ஜோனசன் 54 (41) ரன்கள் எடுத்த நிலையில் லண்டன் சார்பில் அதிகபட்சமாக எவா கிரே, சாரா கிரன் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 116 ரன்களை துரத்திய லண்டன் அணிக்கு மெக் லென்னிங் 4 (9) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். இருப்பினும் ஜார்ஜியா ரெட்மெய்ன் 34 (32), கேப்டன் ஹீதர் நைட் 24 (18), டேனில் கிபிசன் 22 (9) ரன்கள் அடித்து போராடி அவுட்டானார்கள்.
கொண்டாடிய இங்கிலாந்து:
இறுதியில் கடைசி 3 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்ட போது இந்திய வீராங்கனை தீப்தி சர்மா அட்டகாசமான சிக்ஸரை அடித்து மொத்தம் 16* (16) ரன்கள் குவித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அப்போது எதிர்புறம் இருந்த இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீன் வெற்றியைப் பெற்றுக் கொடுத்த தீப்தி சர்மாவை கட்டிப்பிடித்து துள்ளி குதித்து கொண்டாடினார்.
கடந்த வருடம் 2022ஆம் ஆண்டு இதே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் கடைசி நேரத்தில் ஒரு விக்கெட் மட்டுமே கைவசம் வைத்திருந்த இங்கிலாந்தின் வெற்றிக்கு 39 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது சார்லி டீன் 47 ரன்கள் அடித்து வெற்றிக்காக போராடினார்.
ஆனால் அப்போது இந்திய வீராங்கனை தீப்தி சர்மா அவரை பந்து வீசுவதற்கு முன்பாக எதிர்ப்புறமிருந்து வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறியதற்காக மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். அதனால் இந்தியா ஏமாற்றி வெற்றி பெற்றதாக இங்கிலாந்து சேர்ந்தவர்கள் விமர்சித்தனர். அத்துடன் தீப்தி சர்மா நேர்மைக்கு புறம்பாக நடந்து கொண்டதாக ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டுவர்ட் பிராட், நாசர் ஹுசைன் உட்பட இங்கிலாந்தைச் சேர்ந்த அனைவரும் மொத்தமாக சேர்ந்து திட்டி தீர்த்தார்கள்.
இதையும் படிங்க: 10 வருஷ கணக்கு ஒன்னு பென்டிங்ல இருக்கு.. அதை இந்தமுறை முடிச்சிடுவோம்.. இந்திய அணியை எச்சரித்த – நாதன் லயன்
அப்படியே 2 வருடம் கழித்து தற்போது அதே மைதானத்தில் தீப்தி சர்மா சிக்ஸருடன் லண்டனை வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதனால் சார்லி டீன் உள்ளிட்ட இங்கிலாந்து வீராங்கனைகளும் ரசிகர்களும் தீப்தி சர்மாவை கொண்டாடி பாராட்டினர். அதைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் காலம் எவ்வளவு வேகமாக சுழல்கிறது என்பதை உணர்ந்து வியப்பை வெளிப்படுத்துகின்றனர்.



