ஐபிஎல் ஏலத்தில் ஒரே அணியில் 2 சண்டைக்கோழிகள் – அப்போ இந்த முறை ஐ.பி.எல்ல ஒரு ஆக்சன் சீன் இருக்கு

Hooda-1
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே கோலாகலமாக துவங்கியது. கடந்த 2018க்கு பின் முதல் முறையாக மெகா அளவில் நடைபெறும் இந்த ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 590 வீரர்கள் பங்கேற்றுள்ளார்கள். இதில் முதல் நாளில் ஏலத்தில் விடப்பட்ட 161 வீரர்களை அனைத்து அணிகளும் மிகுந்த ஆர்வத்துடன் போட்டி போட்டு வாங்கத் துவங்கினர். அதில் குறிப்பாக முதலில் ஷிகர் தவான், ரவிச்சந்திரன் அஸ்வின், டேவிட் வார்னர், குவின்டன் டி காக் போன்ற நட்சத்திர வீரர்களின் பெயர்கள் ஏலத்தில் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

தீபக் ஹூடா – க்ருனால் பாண்டியா:
இந்த ஏலம் துவங்கியது முதல் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி தங்களுக்கு தேவையான முக்கிய தரமான வீரர்களை வாங்கி சூப்பர் அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது. அதில் முதலாவதாக ஒரு நல்ல ஆல்ரவுண்டரை தேடி ஏலத்தை துவங்கிய அந்த அணி இளம் இந்திய வீரர் தீபக் ஹூடாவை வாங்க சென்னை, மும்பை ஆகிய அணிகளுடன் கடும் போட்டியிட்டது.

75 லட்சம் அடிப்படை விலையில் பங்கேற்ற இவரை இறுதியில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி 5.75 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு வெற்றிகரமாக வாங்கியது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒரு நாள் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இவர் இவ்வளவு தொகைக்கு விளையாட ஒப்பந்தமாக தகுதியானவர் என்றே கூறலாம்.

hooda

ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே ஐபிஎல் ரசிகர்களுக்கு ஒரு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் க்ருனால் பாண்டியாவை 8.25 கோடிகள் என்ற மிகப்பெரிய தொகைக்கு மீண்டும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி ஒப்பந்தம் செய்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

- Advertisement -

வாய்க்கால் சண்டை:
இந்த அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்துக்கான காரணம் என்னவெனில் கடந்த வருடம் நடந்த சையது முஷ்டாக் அலி கோப்பை தொடர் துவங்குவதற்கு முன்பாக பரோடா அணிக்காக இந்த இருவரும் வழக்கம் போல விளையாட இருந்தார்கள். ஆனால் அந்த தொடரில் பங்கேற்பதற்கு சற்று முன்பாக நிகழ்ந்த வலைப்பயிற்சியில் தன்னை க்ருனால் பாண்டியா கடுமையாக கெட்ட வார்த்தைகளால் திட்டியதாக தீபக் ஹூடா உண்மையை போட்டு உடைத்தார்.

Hooda-2

போட்டி தொடங்குவதற்கு முன்பாக அவர் அளித்த இந்த புகார் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களிடையே தீயாக பரவியது. அந்த சமயத்தில் க்ருனால் பாண்டியாவுக்கு ஆதரவாக செயல்பட்ட பரோடா கிரிக்கெட் நிர்வாகம் அந்தத் தொடரில் விளையாட தீபக் ஹூடாவுக்கு தடை விதித்தது. அதன்பின் ராஜஸ்தான் மாநிலத்திற்கு இடம்பெயர்ந்த தீபக் ஹூடா அந்த அணிக்காக விளையாட துவங்கி தற்போது இந்திய அணியிலும் விளையாடும் அளவுக்கு முன்னேறி விட்டார்.

- Advertisement -

அச்சத்தில் ரசிகர்கள்:
அப்படிப்பட்ட அந்த வேளையில் ஐபிஎல் ஏலத்தால் இந்த 2 வீரர்களும் மீண்டும் ஒரே அணியில் விளையாடும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் என்றே கூறலாம். ஏனென்றால் உள்ளூர் கிரிக்கெட்டில் சண்டை போட்டுக் கொண்ட இந்த 2 கிரிக்கெட் வீரர்களும் தற்போது ஒரே அணியில் விளையாட உள்ளதால் மீண்டும் அதுபோன்ற ஒரு சண்டை ஏற்படுமா என்ற அச்சம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஐபிஎல் முதல் நாள் ஏலத்தில் கோடிகளை அள்ளிய 5 தமிழக வீரர்கள் – லிஸ்ட் இதோ

இவர்கள் இருவரும் ஒரே அணியில் சேர்ந்து விளையாடுவதை பல முன்னாள் வீரர்களும் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்கள். குறிப்பாக இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் “ஹூடா மற்றும் க்ருனால் பாண்டியா ஒரு நல்ல ஜோடியாக இருப்பார்கள். பரோடா அணியால் பிரிக்கப்பட்டவர்கள் லக்னோ அணியால் ஒன்று சேர்ந்துள்ளார்கள்” என கலகலப்புடன் பதிவிட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் இணைந்து விளையாடுவது பற்றி பல ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை பறக்க விட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement