ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் டி20 கிரிக்கெட் தொடர் விரைவில் துவங்குள்ளது. அதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விராட் கோலி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடைசியாக நடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்திப்பதற்கு ரோகித் சர்மா, ராகுல், தினேஷ் கார்த்திக் போன்ற மூத்த வீரர்கள் சுமாரான செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது.
அதன் காரணமாக அவர்களை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய வீரர்களைக் கொண்ட இளம் அணியை 2024 டி20 உலகக் கோப்பையில் பிசிசிஐ களமிறக்க முடிவெடுத்ததாக செய்திகள் வெளிவந்தன. இருப்பினும் தற்போது ஹர்திக் பாண்டியா காயமடைந்துள்ளதால் மீண்டும் ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதனால் ரோகித் மற்றும் விராட் கோலி 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாகியுள்ளது.
இளம் வீரர்களின் சான்ஸ்:
இந்நிலையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் தேர்வாகியுள்ளதால் கடந்த ஒரு வருடமாக வாய்ப்பு பெற்று சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு 2024 டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைக்காது என்று முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக ரிங்கு சிங், திலக் வர்மா, ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“இந்த முடிவால் ரிங்கு சிங் போன்றவருக்கு வாய்ப்பு கிடைக்காது. விக்கெட் கீப்பராக நீங்கள் சஞ்சு சாம்சன் அல்லது ஜிதேஷ் சர்மாவை தேர்வு செய்ய வேண்டும். இங்கே நான் டி20 உலகக் கோப்பை பற்றி பேசுகிறேன். குறிப்பாக ரிங்கு மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் சமீபத்தில் கிடைத்த வாய்ப்புகளில் நம்மை கவரும் வகையில் செயல்பட்டார்கள்”
“அதிலும் குறிப்பாக ரிங்கு சிங் ஃபினிஷிங் செய்யக்கூடிய ஸ்பெஷலான தனித்துவமான வேலையை சிறப்பாக செய்தார். உங்களுக்கு எப்போதுமே நிறைய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எளிதாக கிடைப்பார்கள். ஆனால் 7 அல்லது 8 போன்ற மிகவும் கடினமான இடத்தில் அசத்தக்கூடிய ரிங்கு சிங் போன்ற வீரர்கள் அரிதாகவே கிடைப்பார்கள். ரிங்கு மற்றும் திலக் வர்மா ஆகியோருக்கு ஆப்கானிஸ்தான் தொடரில் வாய்ப்பு கிடைக்கலாம்”
இதையும் படிங்க: இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் நட்சத்திர இந்திய வீரர் பங்கேற்க மாட்டார் – வெளியான தகவல்
“ஆனால் அதன் பின் ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் ஆகியோர் வரும் போது கண்டிப்பாக ரிங்கு மற்றும் திலக் வர்மா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்காது” என்று கூறினார். மேலும் 2022 டி20 உலகக் கோப்பையில் சுமாராக விளையாடிய சீனியர் வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படுவது இந்திய அணியை வருங்காலத்தை நோக்கி சரியான பாதையில் நடக்க வைக்க உதவாது என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.