11 ரன்ஸ் லீடிங்.. ரிட்டையராகும் தொடரில் மல்லுக்கட்டும் எல்கர் அசத்தல் சாதனை.. இந்தியா திருப்பி அடிக்குமா?

Dean Elgar 140
- Advertisement -

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோதி வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் சென்சூரியன் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் 26ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் போராடி 245 ரன்கள் சேர்த்தது.

கேப்டன் ரோஹித் சர்மா 5, ஜெய்ஸ்வால் 17, கில் 2, விராட் கோலி 38, ஷ்ரேயாஸ் ஐயர் 31 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 107/5 என தடுமறியது. ஆனாலும் மிடில் ஆர்டரில் மிகச் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் தென்னாப்பிரிக்க பவுலர்களுக்கு சவாலாக மாறி 14 பவுண்டரி 4 சிக்சருடன் சதமடித்து 101 ரன்கள் குவித்து ஓரளவு இந்தியாவை காப்பாற்றினார்.

- Advertisement -

அசத்திய எல்கர்:
தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ககிஸோ ரபாடா 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு ஐடன் மார்க்ரம் 5 ரன்களில் சிராஜ் வேகத்தில் அவுட்டானாலும் மற்றொரு துவக்க வீரர் டீன் எல்கர் ஆரம்பம் முதலே நங்கூரமாக விளையாடி இந்தியாவுக்கு சவாலை கொடுத்தார். அவருடன் அடுத்ததாக வந்த டோனி டீ ஜோர்சி 2வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது 28 ரன்களில் அவுட்டாக்கிய பும்ரா அடுத்ததாக வந்த கீகன் பீட்டர்ஸனை 2 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கினார்.

இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து சவாலை கொடுத்த டீன் எல்கர் அரை சதம் கடந்து அசத்தினார். அவருடன் எதிர்ப்புறம் வந்த டேவிட் பெடிங்காம் தம்முடைய பங்கிற்கு 4வது விக்கெட்டுக்கு 131 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 56 ரன்கள் எடுத்த போது சிராஜ் வேகத்தில் கிளீன் போல்டானார். ஆனாலும் மறுபுறம் இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய டீன் சதமடித்து அசத்தியதால் 2வது நாள் முடிவில் தென்னாபிரிக்கா 256/5 ரன்கள் எடுத்து இந்தியாவை விட 11 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

களத்தில் 140* ரன்களுடன் இருக்கும் டீன் எல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் சதமடித்த 3வது தென்னாப்பிரிக்க துவக்க வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் கேரி க்ரிஸ்டன் (1997), ஹெர்சல் கிப்ஸ் (2001) ஆகியோர் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் துவக்க வீரர்களாக சதமடித்திருந்தனர்.

இதையும் படிங்க: தனது ஹோம் கிரவுண்டில் சதமடித்த தென்னாப்பிரிக்க வீரருக்கு ரசிகர்கள் கொடுத்த மரியாதை – விவரம் இதோ

குறிப்பாக முன்னாள் கேப்டனான அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள இந்த கடைசி தொடரில் தம்முடைய மொத்த அனுபவத்தையும் காட்டி மல்லு கட்டி வருவது இந்திய ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் பும்ரா, சிராஜ் தலா 2 விக்கெட்கள் எடுத்த போதிலும் இதர பவுலர்கள் தடுமாறி வருவதால் 2வது நாள் ஆட்டத்தின் முடிவில் சற்று பின்தங்கியுள்ள இந்தியா 3வது நாளில் விரைவாக தென்னாப்பிரிக்காவை சுருட்டி திருப்பி அடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Advertisement