- Advertisement -
ஐ.பி.எல்

என்னா மனசுயா! சச்சின், கில்கிறிஸ்ட் மாதிரி நேர் வழியில் நடந்து கொண்ட டிகாக் – ரசிகர்கள் பாராட்டு

ஐபிஎல் 2022 தொடர் 5-வது வாரத்தை தொட்டு மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில் ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெற்ற 42-வது லீக் போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாபை பதம்பார்த்த கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ 20 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியது. புனே நகரில் விறுவிறுப்புடன் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய லக்னோ 20 ஓவர்களில் கடும் போராட்டத்திற்குப் பின் 153/8 ரன்கள் சேர்த்தது.

அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுல் 6 (11) க்ருனால் பாண்டியா 7 (7) மார்கஸ் ஸ்டோனிஸ் 1 (4) ஜேசன் ஹோல்டர் 11 (8) போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் அதிகபட்சமாக குவின்டன் டி காக் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 46 (37) ரன்களும் தீபக் ஹூடா 34 (28) ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் மிரட்டிய காகிஸோ ரபாடா 4 விக்கெட்டுகளையும் ராகுல் சஹர் 2 விக்கெட்களையும் எடுத்தனர்.

- Advertisement -

சொதப்பிய பஞ்சாப்:
அதை தொடர்ந்து 154 என்ற எளிய இலக்கை துரத்திய பஞ்சாப்புக்கு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் மயங்க் அகர்வால் அதிரடியாக 2 பவுண்டரி 2 சிக்சருடன் 25 (17) ரன்கள் எடுத்து அவுட்டான பின் ஷிகர் தவான் 5 (15) ராஜபக்சா 9 (7) லியாம் லிவிங்ஸ்டன் 18 (16) ஜிதேஷ் சர்மா 2 (5) போன்ற முக்கிய வீரர்கள் சீரான இடைவெளிகளில் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். ஒரு கட்டத்தில் 5 பவுண்டரிகளுடன் 32 (28) ரன்கள் எடுத்து போராடிய ஜானி பேர்ஸ்டோவும் அவுட்டாக இறுதியில் ரிஷி தவான் 21* (22) ரன்கள் எடுத்தாலும் 20 ஓவர்களில் 133/8 ரன்கள் மட்டுமே எடுத்த பஞ்சாப் பேட்டிங்கில் சொதப்பி பரிதாபமாக தோற்றது.

அதனால் 9 போட்டிகளில் 5-வது தோல்வியை பதிவு செய்த அந்த அணி புள்ளி பட்டியலில் 7-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. மறுபுறம் 154 என்ற குறைவான ரன்களை அற்புதமாக பந்துவீசி கட்டுப்படுத்திய லக்னோ சிறப்பான வெற்றியை ருசித்து 6-வது வெற்றியுடன் 3-வது இடத்திற்கு முன்னேறியது. அந்த அணிக்கு பந்துவீச்சில் அதிகபட்சமாக மோசின் கான் 4 விக்கெட்டுகளையும் க்ருனால் பாண்டியா மற்றும் துஷ்மந்த சமீரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

- Advertisement -

நேர்வழியில் டீ காக்:
முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோவுக்கு 46 (37) எடுத்து அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த குயின்டன் டி காக் இந்திய பவுலர் சந்தீப் சர்மா வீசிய 13-ஆவது ஓவரின் 4-வது பந்தில் பவுண்டரியை பறக்க விட முயன்றாலும் அது அவரின் பேட்டில் பட்டு எட்ஜ் வாங்கி விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவின் கையில் தஞ்சம் அடைந்தது. அதை உடனடியாக ஜிதேஷ் சர்மா மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் அம்பயரிடம் அவுட் கேட்க அதை அம்பயர் வழங்க மறுத்துவிட்டார்.

ஆனால் அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அது அவுட்டு தான் என தெளிவாக உணர்ந்த குவின்டன் டி காக் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை என்றாலும் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நேர்மையான வழியில் பெவிலியன் நோக்கி நடந்து சென்றார். அதை பார்த்த அனைவரும் ஆச்சரியப்பட்ட நிலையில் அவரின் நேர்மையை பாராட்டி பவுலர் சந்தீப் சர்மா அவரின் தோளில் தட்டி அனுப்பி வைத்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் நேர் வழியில் நடந்த குயின்டன் டி காக்கை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

சச்சின், கில்கிறிஸ்ட் வழியில்:
குறிப்பாக நேற்றைய போட்டியில் அவர் நடந்து கொண்ட விதம் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோரை நினைவு படுத்துவதாக பல ரசிகர்கள் பெருமையுடன் நினைவு கூர்ந்தார்கள். ஏனெனில் கடந்த 2011-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் சென்னையில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு போட்டியில் அந்த அணி பவுலர் ரவி ராம்பால் வீசிய ஒரு பந்தில் இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் இதேபோல் அவுட்டானலும் அதை அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. ஆனால் அதற்காக சற்றும் யோசிக்காத அவர் நேர் வழியில் நடந்து பெவிலியன் திரும்பியது பலரின் பாராட்டுகளைப் பெற்றது என்றுமே மறக்க முடியாது.

அதேபோல் 2003 உலக கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் அதே வகையில் அவுட்டான போது அம்பயர் அதைக் கொடுக்கவில்லை என்றாலும் அதற்காக எதைப்பற்றியும் சிந்திக்காமல் நேர் வழியில் நடந்து சென்றார்.

இதையும் படிங்க : LSGvsPBKS : என்னதான் நாங்கள் ஜெயிச்சிருந்தாலும் முட்டாள் தனம் பண்ணிட்டோம் – கே.எல் ராகுல் வெளிப்படை

அந்த காலத்தில் ரெவியூ செய்யும் முறை இல்லாத நிலையிலும் நேர் வழியில் நடந்து கொண்ட காரணத்தினாலேயே அவர்களை ஜாம்பவான்கள் என்று ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். அந்த வகையில் குயின்டன் டி காக் வருங்காலத்தில் ஒரு நல்ல மனம் கொண்ட ஜாம்பவனாக உருவாக ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

- Advertisement -
Published by