11 ஆண்டுகள் கழித்து மாஸ்டர் பிளானுடன் மும்பையை மண்ணைக்கவ்வ வைத்த டெல்லி – இப்படி ஒன்னு இருக்கா?

MI vs DC IPL 2022
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மார்ச் 26-ஆம் தேதியன்று உலகப் புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக துவங்கியது. இந்த தொடரின் 2-வது நாளில் 2 போட்டிகள் நடைபெற்ற நிலையில் மதியம் 3.30 மணிக்கு மும்பையின் ப்ராபோர்ன் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் சந்தித்தன. இதில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

MIvsDC

- Advertisement -

அசத்திய இஷான் கிஷான்:
இதை அடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு நட்சத்திர தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிசான் ஆகியோர் பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தனர். இதில் கேப்டன் ரோகித் சர்மா 32 பந்துகளில் 41 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழக்க அடுத்துவந்த அன்மோல்ப்ரீட் சிங் 8 ரன்களில் நடையை கட்டினார். அடுத்ததாக வந்த திலக் வர்மா 22 (15) ரன்களில் ஏமாற்ற அதன்பின் களமிறங்கிய அதிரடி வீரர்கள் கைரன் பொல்லார்ட் 3 ரன்களில் அவுட்டானதால் 122/4 என மும்பை தடுமாறியது.

அந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிம் டேவிட் 12 ரன்களில் அவுட்டான போதிலும் மறுபுறம் தொடர்ந்து ஆரம்பம் முதல் நங்கூரமாக விளையாடி வந்த மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிசான் ஆரம்பம் முதலே அதிரடி சரவெடியாக டெல்லி பவுலர்களை பந்தாடினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் டெல்லியை பதம் பார்த்த அவர் 48 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உட்பட 81* ரன்கள் விளாசினார். இதனால் தப்பிய மும்பை 20 ஓவர்களில் 177/5 ரன்கள் குவித்தது. டெல்லி அணி சார்பில் பந்துவீச்சில் அசத்திய குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும் கலீல் அஹமட் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

ishan 2

மும்பையை மண்ணைக்கவ்வ வைத்த டெல்லி:
இதை தொடர்ந்து 178 என்ற இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு தொடக்க வீரர் டிம் ஷைபர்ட் 21 (14) ரன்களும் பிரிதிவி சா 38 (24) ரன்களும் எடுத்து ஓரளவு சுமாரான தொடக்கம் அளித்தனர். ஆனால் அடுத்து வந்த மந்தீப் சிங் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுக்க அவருடன் களமிறங்கிய ரிஷப் பண்ட் 1 ரன்னில் அவுட்டாகி மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தார். இதனால் 72/4 என திண்டாடிய டெல்லி அணியை காப்பாற்றுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீசின் அதிரடி வீரர் ரோவ்மன் போவல் டக் அவுட்டாகி மாபெரும் அதிர்ச்சி கொடுத்தார். இதனால் 72/5 என தவித்த டெல்லி அணியின் தோல்வி உறுதியென அனைவரும் நினைத்த வேளையில் களமிறங்கிய ஷர்துல் தாகூர் 4 பவுண்டரிகள் உட்பட 11 பந்துகளில் 22 ரன்கள் விளாசினார்.

- Advertisement -

அத்துடன் அவருக்கு முன்பாக களமிறங்கிய லலித் யாதவ் உடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த அக்சர் படேல் அதிரடியாக ரன்களை குவிக்க தொடங்கினார். இந்த ஜோடியை எளிதாக அவுட் செய்து விடலாம் என நினைத்த ரோகித் சர்மாவிற்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த இந்த ஜோடி கடைசி நேரத்தில் அதிரடி சரவெடியாக விளையாடி 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட கடைசி விக்கெட்டுக்கு 75* ரன்கள் பார்ட்னர்ஷிப் யாருமே எதிர்பாராத வண்ணம் டெல்லியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். இதனால் 18.2 ஓவர்களில் 179/6 ரன்களை எடுத்த டெல்லி 4 விக்கெட் வித்தியாசத்தில் வலுவான மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ வைத்து திரில் வெற்றியை பதிவு செய்தது.

DC Axar Patel Lalit Yadav

11 வருடத்துக்கு பின் மாஸ்டர் பிளான்:
இந்த வெற்றியின் வாயிலாக 2 புள்ளிகளை பெற்ற டெல்லி இந்த ஐபிஎல் தொடரை வெற்றியுடன் துவங்கியது. மறுபுறம் கையிலிருந்த வெற்றியை கோட்டை விட்ட மும்பை கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 10-ஆவது வருடமாக பங்கேற்ற முதல் லீக் போட்டியில் 10-வது முறையாக மீண்டும் தோல்வியை சந்தித்தது. முன்னதாக இந்த போட்டியில் 2 வெளிநாட்டு வீரர்களை மட்டும் தேர்வு செய்த டெல்லி 9 இந்திய வீரர்களுடன் களமிறங்கி இந்த அபார வெற்றி பெற்றது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. பொதுவாக ஒரு போட்டியில் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலைமையில் நியூசிலாந்தின் டிம் ஷைபர்ட் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரோவ்மன் போவெல் ஆகிய 2 வீரர்களை மட்டுமே ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி தேர்வு செய்தது.

ஐபிஎல் வரலாற்றில் இது போல ஒரு போட்டியில் 2 வெளிநாட்டு வீரர்களை ஒரு அணி தேர்வு செய்வது இது 2-வது முறையாகும். கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் ஜேக் காலிஸ் மற்றும் இங்கிலாந்தின் இயன் மோர்கன் ஆகிய 2 வெளிநாட்டு வீரர்களை மட்டும் கௌதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பயன்படுத்தியது.

dc

அதன்பின் தற்போது 11 வருடங்கள் கழித்து டெல்லி கேபிட்டல்ஸ் அணிதான் அதுபோன்ற ஒரு யுக்தியை கையாண்டுள்ளது. சொல்லப்போனால் சென்னைக்கு எதிரான அந்த போட்டியில் கொல்கத்தா தோல்வியடைந்த நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ள டெல்லி ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் 2 வீரர்களை மட்டும் உபயோகித்து வெற்றி பெற்ற முதல் அணி என்ற புதிய அரிதான சாதனையை முதல் முறையாக படைத்துள்ளது.

Advertisement