ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 16ஆம் தேதி தலைநகர் டெல்லியில் 32வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டெல்லி அணி ராஜஸ்தானை சூப்பர் ஓவரில் தோற்கடித்து திரில்லர் வெற்றி பெற்றது. அதில் முதலில் விளையாடிய டெல்லி 20 ஓவரில் போராடி 188-5 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அபிஷேக் போரேல் 49, ராகுல் 38, ஸ்டப்ஸ் 34*, கேப்டன் அக்சர் படேல் 34 ரன்கள் எடுத்தனர்.
அடுத்து விளையாடிய ராஜஸ்தான் அணியும் 20 ஓவரில் 188-4 ரன்கள் அடித்ததால் போட்டி சமநிலையில் முடிந்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 51, கேப்டன் சாம்சங் 31*, நிதிஷ் ராணா 51, துருவ் ஜுரேல் 26* ரன்கள் எடுத்தனர். கடைசி ஓவரில் அபாரமாக பவுலிங் செய்த மிட்சேல் ஸ்டார்க் ராஜஸ்தான் வெற்றியை தடுத்து நிறுத்தினார்.
நடுவருடன் வாக்குவாதம்:
அத்துடன் சூப்பர் ஓவரிலும் தெறிக்க விடும் வகையில் பவுலிங் செய்த அவர் 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். அந்த வகையில் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்ட ஸ்டார்க் ஆட்டநாயகன் விருதை வென்றார். அப்படி பரபரப்பாக நடைபெற்று முடிந்த அந்தப் போட்டியில் டெல்லியின் பவுலிங் பயிற்சியாளர் முனாப் பட்டேலுக்கு பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது.
ஏனெனில் அப்போட்டியில் ராஜஸ்தான் சேசிங் செய்த இன்னிங்ஸில் 3வது நடுவர் ஒரு தீர்ப்பை சோதித்துக் கொண்டிருந்தார். அந்த இடைவெளியில் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய திட்டத்தை முனாப் படேல் தங்களது அணியின் ஒரு வீரரிடம் சொல்லி களத்தில் இருக்கும் டெல்லி வீரர்களிடம் சொல்லுமாறு அனுப்பி வைத்தார். ஆனால் அதைப் பார்த்த நான்காவது நடுவர் அந்த வீரரை களத்திற்குள் செல்ல விடாமல் பவுண்டரி எல்லையிலேயே தடுத்தார்
பிசிசிஐ தண்டனை:
அதனால் அதிருப்தியடைந்த முனாப் படேல் தங்களது வீரரை அனுப்பாமல் ஏன் தடுக்கிறீர்கள்? என்று 3வது நடுவரிடம் சண்டை செய்தார். அப்படி செய்ததன் வாயிலாக அவர் ஐபிஎல் 2.20 விதிமுறையை மீறியுள்ளார். அதனால் அவருக்கு அந்தப் போட்டியின் சம்பளத்திலிருந்து 25% சம்பளம் அபராதம் மற்றும் ஒரு கருப்பு புள்ளியை தண்டனையாக வழங்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: எனக்கு மட்டும் அந்த வாய்ப்பை ஆர்.சி.பி அணி கொடுத்தா இன்னும் சூப்பரா ஆடுவேன் – டிம் டேவிட் பேட்டி
பொதுவாக கேப்டன்கள், வீரர்கள் விதிமுறைகளை மீறுவதும் அதற்கு தண்டனை வழங்குவதையும் அதிகம் பார்த்துள்ளோம். ஆனால் தற்போது பயிற்சியாளருக்கே பிசிசிஐ தண்டனை வழங்கியது ரசிகர்களை திரும்பி பார்க்க வைப்பதாக அமைகிறது. இதைத் தொடர்ந்து டெல்லி தங்களது அடுத்தப் போட்டியில் குஜராத்தை சந்திக்கிறது.



