
ஐபிஎல் 2022 தொடரில் மே 11-ஆம் தேதி நடைபெற்ற 58-ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் சந்தித்தன. நவி மும்பையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தானுக்கு 3 சதங்களை அடித்து நல்ல பார்மில் இருக்கும் ஜோஸ் பட்லர் 7 (11) ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்ததாக யாருமே எதிர்பாராத வகையில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3-வது இடத்தில் களமிறங்கினார்.
வழக்கதிற்கு மாறாக அற்புதமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்ய அவருக்கு கை கொடுக்க வேண்டிய மற்றொரு இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 (19) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். இருப்பினும் அடுத்து களமிறங்கிய தேவ்தூத் படிக்கல் உடன் கைகோர்த்த அஸ்வின் 3-வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்.
ராஜஸ்தான் 160:
மொத்தம் 4 பவுண்டரி 2 சிக்சருடன் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்து ரசிகர்களின் பாராட்டை அள்ளிய அவர் 50 (38) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 6 (4) ரியான் பராக் 9 (5) என அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக மறுபுறம் போராடிக்கொண்டிருந்த படிக்கல் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 48 (30) ரன்கள் எடுத்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்ததால் 20 ஓவர்களில் ராஜஸ்தான் 160/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி சார்பில் பந்துவீச்சில் சேட்டன் சக்காரியா, மிட்செல் மார்ஷ், அன்றிச் நோர்ட்ஜெ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
அதை தொடர்ந்து 161 ரன்கள் என்ற இலக்கை துரத்திய டெல்லிக்கு முதல் ஓவரிலேயே கேஎஸ் பரத் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க 0/1 என அந்த அணி மோசமான தொடக்கத்தை பெற்றது. இருப்பினும் அடுத்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் உடன் கைகோர்த்த மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னர் அதிரடியாக ரன்களை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஆஸி ஜோடி:
இதில் ஒருபுறம் வார்னர் மெதுவாக பேட்டிங் செய்து கம்பெனி கொடுக்க மறுபுறம் ராஜஸ்தான் பவுலர்களை நொறுக்கிய மிட்செல் மார்ஷ் அதிரடியான பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். நேரம் செல்ல செல்ல அதிரடியை அதிகப்படுத்தி ஒரு கட்டத்தில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்தும் அவுட்டாகாமல் அடம்பிடித்தது. 2-வது விக்கெட்டுக்கு 144 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதிசெய்த இந்த ஆஸ்திரேலிய ஜோடியில் ஒருவழியாக 5 பவுண்டரி 7 சிக்ஸர்களுடன் 89 (62) ரன்கள் குவித்த மிட்செல் மார்ஷ் கடைசி நேரத்தில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.
இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக நின்ற டேவிட் வார்னர் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 52* (41) ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் 2 சிக்சர்களை பறக்கவிட்ட கேப்டன் ரிஷப் பண்ட் 13* (4) ரன்கள் எடுத்து பினிஷிங் செய்ததால் 18.1 ஓவரில் 161/2 ரன்களை எடுத்த டெல்லி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வாழ்வா – சாவா போட்டியாக அமைந்த இப்போட்டியில் பேட்டிங் பந்துவீச்சில் அசத்திய அந்த அணி பங்கேற்ற 12 போட்டிகளில் 6-வது வெற்றியை பதிவு செய்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.
லக் இல்லாத ராஜஸ்தான்:
முன்னதாக இந்த போட்டியில் ராஜஸ்தானுக்கு அந்த அணியின் பினிஷராக சிம்ரோன் ஹெட்மையர் தனது குழந்தை பிறப்புக்காக நாடு திரும்பியுள்ளதால் அதை சரிசெய்ய அஷ்வினை மேலே இறக்கிய அந்த அணி நிர்வாகம் கேப்டன் சஞ்சு சாம்சனை அவரின் இடத்தில் களமிறக்கியது. அதில் ஜெய்ஸ்வால் – பட்லர் ஓப்பனிங் ஜோடி பெரிய ரன்கள் எடுக்கவில்லை என்றாலும் அஸ்வின் தனது வேலையை சரியாக செய்தார். ஆனால் கேப்டன் சஞ்சு சாம்சன் பெரிய ரன்கள் எடுக்கத் தவறியதால் அந்த அணி கூடுதலாக 20 – 30 ரன்கள் எடுக்க முடியாமல் போய் தோல்வியடைந்தது.
அத்துடன் மிட்செல் மார்ஷ் 1 ரன்னில் இருந்த போது ட்ரெண்ட் போல்ட் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அதை ராஜஸ்தான் வீரர்கள் கேட்டபோது அம்பயர் அவுட் கொடுக்காத நிலையில் அதை ரிவியூ எடுக்காமல் விட்டதால் இறுதியில் 89 ரன்களை விளாசிய அவர் தோல்வியை பரிசளித்தார். அதேபோல் வார்னர் குறைந்த ரன்கள் எடுத்திருந்தபோது சஹால் வீசிய பந்தில் போல்டாகியும் துரதிர்ஷ்டவசமாக பெய்ல்ஸ் விழாததால் தப்பித்த அவரும் 52 ரன்கள் எடுத்து தோல்வியை பரிசளித்தார்.
இதுபோல பொதுவாகவே சிறப்பாக பந்துவீச கூடிய சஹால், அஷ்வின், போல்ட் ஆகியோருக்கு இந்த போட்டியில் துரதிஸ்டவசமாக சிறப்பாக பந்துவீசிய போதிலும் பெரிய அளவில் விக்கெட்டுகள் கிடைக்காததால் 12 போட்டிகளில் 5-வது தோல்வியை பதிவு செய்த அந்த அணி எஞ்சிய 2 போட்டிகளில் வென்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.