வீடியோ : மிரட்டிய லேடி சேவாக் ஷபாலி, முதல் போட்டியிலேயே துவம்சம் செய்யப்பட்ட ஆர்சிபி – மகளிர் தொடரிலும் தொடரும் பரிதாபம்

- Advertisement -

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் புதிய உச்சமாக கருதப்படும் மகளிர் ஐபிஎல் தொடர் வரலாறு முதல் முறையாக ஆடவர் தொடருக்கு நிகராக இந்த வருடம் கோலாகலமாக துவங்கியுள்ளது. மொத்தம் 5 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் நிறைய வெளிநாட்டு நட்சத்திர வீராங்கனைகள் பங்கேற்கும் நிலையில் முதல் போட்டியில் குஜராத்தை அடித்து நொறுக்கிய மும்பை 143 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. அந்த நிலையில் மார்ச் 5ஆம் தேதியன்று மதியம் 3.30 மணிக்கு ப்ராபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

அப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணிக்கு கேப்டன் மெக் லென்னிங் – ஷபாலி வர்மா ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி விரைவாக ரன்களை சேர்த்தனர். குறிப்பாக லேடி சேவாக் என்று இந்திய ரசிகர்களால் கொண்டாடப்படும் இளம் இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா முதல் ஓவரிலிருந்தே பெங்களூரு பவுலர்களை சரமாரியாக வெளுத்து வாங்கினார். அவருடன் இணைந்து தனது பங்கிற்கு வெளுத்து வாங்கிய மெக் லென்னிங் 100 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான தொடக்கம் கொடுத்தார்.

- Advertisement -

பரிதாப ஆர்சிபி:
நேரம் செல்ல செல்ல நன்கு செட்டிலாகி பெங்களூரு பவுலர்களை வெளுத்து வாங்கிய இந்த ஜோடியில் இருவருமே அரை சதம் கடந்தும் அவுட்டாகாமல் அடம் பிடித்து சதத்தை நோக்கி அதிரடியாக பேட்டிங் செய்தனர். இருப்பினும் 162 ரன்கள் குவித்து மகளிர் ஐபிஎல் தொடரில் அதிக ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடியாக சாதித்த இந்த ஜோடியில் மெக் லென்னிங்கை 14 பவுண்டரியுடன் 72 (43) ரன்களில் அவுட்டாக்கிய ஹீதர் நைட் அதே ஓவரில் மறுபுறம் 10 பவுண்டரி 4 சிக்சருடன் சவாலை கொடுத்த ஷபாலி வர்மாவையும் 84 (45) ரன்களில் காலி செய்தார்.

ஆனால் அடுத்து வந்த மேரிஸின் கேம்ப் 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் 39* (17) ரன்களும் ஜெமிமா ரோட்ரிகஸ் 3 பவுண்டரியுடன் 22* (15) ரன்களும் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் 223/2 ரன்கள் குவித்த டெல்லி மகளிர் ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து 224 என்ற கடினமான இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு கேப்டன் ஸ்ம்ரிதி மந்தனா 35 (23) சோபி டேவின் 14 (11) எலிஸ் பெரி 31 (19) என டாப் 3 வீராங்கனைகள் அதிரடியாக செயல்பட்டு நல்ல தொடக்கத்தை பெற்றாலும் அதை பெரிய ரன்களாக மாற்றாமல் அவுட்டானார்கள்.

- Advertisement -

போதாக்குறைக்கு மிடில் ஆர்டரில் ஹீதர் நைட் 34 (21) ரன்கள் எடுத்தது தவிர ரிச்சா கோஸ் 2 (4) என இதர வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 20 ஓவரில் எவ்வளவோ போராடியும் பெங்களூரு 163/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. பேட்டிங் போலவே பந்து வீச்சிலும் அசத்திய டெல்லி சார்பில் அதிகபட்சமாக தாரா நோரிஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதனால் 60 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி பெற்ற டெல்லி மகளிர் ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக துவக்கியுள்ளது. ஆனால் மந்தனா, டேவின், எலிஸ் பெரி என நட்சத்திர உலகத்தரம் வாய்ந்த வீராங்கனைகளை ஏலத்தில் வாங்கிய போது ஆடவர் தொடரை காட்டிலும் மகளிர் தொடரில் முதல் கோப்பையை வெல்லப்போகிறோம் என்று கெத்தாக பேசிய பெங்களூரு ரசிகர்களுக்கு முதல் போட்டியை கூட வெல்லாத மகளிர் அணி பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

- Advertisement -

கடந்த 2008 முதல் ஆடவர் ஐபிஎல் தொடரில் எத்தனையோ நட்சத்திர ஜாம்பவான் வீரர்கள் விளையாடியும் கோப்பையை வெல்ல முடியாமல் திண்டாடி வரும் பெங்களூரு அணி மகளிர் தொடரில் முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டம் வெல்லும் என்பதே அந்த அணி ரசிகர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இதையும் படிங்க: IND vs AUS : 4 ஆவது போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்பும் நட்சத்திர வீரர் – பி.சி.சி.ஐ போட்டுள்ள திட்டம்

ஆனால் நட்சத்திர தரமான வீராங்கனைகள் இருந்தும் பந்து வீச்சில் சொதப்புவது, பேட்டிங்கில் முக்கிய வீராங்கனைகள் முக்கிய நேரத்தில் கைவிடுவது என ஆடவர் அணியைப் போலவே செயல்படும் மகளிர் பெங்களூரு அணி அதே பரிதாபத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

Advertisement