ப்ராபோர்ன் மைதானத்துக்கு எவன் வந்தாலும் வெட்டுவோம் ! கெத்து காட்டும் டெல்லி – என்ன நடந்தது?

- Advertisement -

மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெற்ற 32-வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய அணிகள் சந்தித்தன. மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் கடந்த முறை காயத்தால் விலகியிருந்த பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால் அணியில் இணைந்த நிலையில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப்க்கு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் மயங்க் அகர்வால் அதிரடியாக 15 பந்துகளில் 4 பவுண்டரிகள் எடுத்து 24 ரன்களில் அவுட்டானார்.

DC vs PBKS

- Advertisement -

ஆனால் அதன்பின் மாயாஜாலம் நிகழ்த்திய டெல்லியில் சுழல் பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து பஞ்சாப்பை தரைமட்டம் ஆக்கினார்கள் என்று கூறலாம். ஏனெனில் அகர்வால் அவுட்டான பின் ஷிகர் தவான் 9 (10), லிவிங்ஸ்டன் 2 (3), ஜானி பேர்ஸ்டோ 9 (8) ஆகிய முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து பொறுப்பின்றி அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

பஞ்சாப் பரிதாபம்:
அதனால் 54/4 என ஆரம்பத்திலேயே சரிந்த அந்த அணிக்கு அடுத்ததாக களமிறங்கிய இளம் வீரர் ஜிதேஷ் சர்மா 23 பந்துகளில் 5 பவுண்டரி உட்பட 32 ரன்களை அதிரடியாக எடுத்து ஆட்டமிழந்தார். அந்த வேளையில் காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் சாருக்கானும் 12 (20) ரன்களில் அவுட்டாகி நடையை கட்டிய நிலையில் இதர வீரர்களும் பெரிய அளவில் ரன்கள் எடுக்காத காரணத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பஞ்சாப் 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இது இந்த வருடம் ஐபிஎல் தொடரில் பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த ஸ்கோராகும்.

Liam Livingstone 2.jpeg

அந்த அளவுக்கு பந்துவீச்சில் மிரட்டலாக செயல்பட்ட டெல்லி சார்பில் அதிகபட்சமாக கலீல் அஹமட், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், லலித் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 116 என்ற சுலபமான இலக்கை துரத்திய டெல்லிக்கு தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் பிரிதிவி ஷா ஆகியோர் முதல் ஓவரில் இருந்தே சரவெடி பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். ஏற்கனவே பேட்டிங்கில் சொதப்பியதால் சோர்ந்துபோன பஞ்சாப் அணிக்கு கருணை காட்டாத அவர்கள் முதல் பந்திலிருந்தே பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் வெளுத்து வாங்கி ரன் மழை பொழிந்தனர்.

- Advertisement -

டெல்லி மெகா வெற்றி:
தொடர்ந்து மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது. இதில் 20 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 41 ரன்கள் எடுத்து பிரிதிவி ஷா ஆட்டமிழக்க மறுபுறம் தொடர்ந்து அவுட்டாகாமல் அடம்பிடித்து பஞ்சாப் பவுலர்களை புரட்டி எடுத்த டேவிட் வார்னர் வெறும் 30 பந்துகளில் 10 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 60* ரன்கள் எடுத்து போட்டியை 10 ஓவரிலேயே பினிஷிங் செய்தார். இதனால் 10.3 ஓவர்களிலேயே 119/1 ரன்களை எடுத்த டெல்லி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

DC vs PBKS 2

இந்த பிரம்மாண்ட வெற்றியால் இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 3-வது வெற்றியை பதிவு செய்த டெல்லி அதே 6 புள்ளிகளைப் பெற்றுள்ள பஞ்சாப் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளை காட்டிலும் கூடுதல் ரன்ரேட்டை பெற்று புள்ளி பட்டியலில் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பி பந்துவீச்சிலும் சுமாராக செயல்பட்ட பஞ்சாப் படுதோல்வியை சந்தித்து 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

ப்ராபோர்ன் கோட்டை:
முன்னதாக இந்தப் போட்டி புனே நகரிலுள்ள எம்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் உள்ள ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் மற்றும் ஒருசில பயிற்சியாளர்களுக்கும் மருத்துவர்களுக்கும் கரோனா ஏற்பட்டதால் புனே நகரில் நடைபெறுவதாக இருந்த இப்போட்டி மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் எதிர்பாராத நிகழ்ந்த இந்த முடிவு டெல்லிக்கு மட்டும் சாதகமாகவும் அதிர்ஷ்டமாக அமைந்தது என்றே கூற வேண்டும்.

DC

ஏனெனில் இந்த வருடம் அந்த அணி இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் பதிவு செய்த 3 வெற்றிகளும் இதே ப்ராபோர்ன் மைதானத்தில் வந்துள்ளது என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. ஆம் மும்பைக்கு எதிராக இந்த மைதானத்தில் முதல் போட்டியிலேயே முதல் வெற்றியை பதிவு செய்த அந்த அணி அதன்பின் குஜராத்துக்கு எதிராக புனேவிலும், லக்னோவுக்கு எதிராக நவி மும்பையிலும் அடுத்தடுத்து தோற்றது.

- Advertisement -

ஆனால் கொல்கத்தாவுக்கு எதிராக மீண்டும் இதே ப்ராபோர்ன் மைதானத்தில் நடந்த 4-வது போட்டியில் 2-வது வெற்றியை பதிவு செய்த அந்த அணி அதன்பின் புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் பெங்களூருவுக்கு எதிரான 5-வது போட்டியில் தோற்றது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : எதிரணிகளை தெறிக்கவிடும் வார்னர் – ஷா ஜோடி, புதிய வரலாற்று பார்ட்னர்ஷிப் சாதனை

அந்த நிலையில் மீண்டும் நேற்று தனக்கு ராசியான ப்ராபோர்ன் மைதானத்தில் 3-வது வெற்றியை பதிவு செய்து வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. இதைப் பார்த்தால் ப்ராபோர்ன் மைதானம் எங்களது கோட்டை இங்கே யார் வந்தாலும் வெட்டுவோம் என்பதுபோல் டெல்லி மிரட்டலாக செயல்பட்டு வருகிறது என்று கூறினால் அது மிகையாகாது.

Advertisement