ஐபிஎல் 2022 : எதிரணிகளை தெறிக்கவிடும் வார்னர் – ஷா ஜோடி, புதிய வரலாற்று பார்ட்னர்ஷிப் சாதனை

David Warner Prithivi Shaw
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மிகுந்த விறுவிறுப்பான திருப்பங்களுடன் 3-வது வாரத்தைக் கடந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. பொதுவாக ஐபிஎல் மட்டுமல்லாது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கூட ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் என்பது வெற்றியை மிகவும் சுலபமாக்கும் தன்மையைக் கொண்டது. அந்த வகையில் இந்த வருட ஐபிஎல் தொடரில் இதர அணிகளை காட்டிலும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் மிகுந்த வலுவான ஓப்பனிங் ஜோடி பெற்றுள்ளதை பற்றி பார்ப்போம். மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெற்ற 32-வது ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

அந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி டெல்லியின் அதிரடியான பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வெறும் 115 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இந்த வருட ஐபிஎல் தொடரின் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து பரிதாபத்திற்கு உள்ளானது. அந்த அணிக்கு அதிக பட்சமாக ஜிதேஷ் சர்மா 32 (23) ரன்களும் கேப்டன் மயங்க் அகர்வால் 24 (15) ரன்களை அதிரடியாக எடுத்த போதிலும் லியாம் லிவிங்ஸ்டன், ஷிகர் தவான் போன்ற முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர்.

- Advertisement -

மிரட்டிய ஷா – வார்னர் ஜோடி:
டெல்லி சார்பில் அதிகபட்சமாக சுழலில் மேஜிக் காட்டிய குல்தீப் யாதவ், லலித் யாதவ், அக்சர் பட்டேல் ஆகியோருடன் கலீல் அகமத் சேர்ந்து தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 116 என்ற சுலபமான இலக்கை துரத்திய டெல்லிக்கு இந்திய இளம் வீரர் பிரதிவி ஷா உடன் ஜோடி சேர்ந்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் முதல் பந்திலிருந்தே அதிரடி சரவெடியாக பவுண்டரிகளை பறக்கவிட்டார். குறைவான இலக்கு தானே எந்தவித அவசரமும் இல்லாமல் பொறுமையாக சேசிங் செய்யலாம் என்று நினைக்காத இந்த ஜோடி மாறாக வெறித்தனமாக விளையாடி சீக்கிரமாகவே முடித்துவிட்டு நேரமே சென்று தூங்கலாம் என்பது போல் பஞ்சாப் பவுலர்களை பந்தாடியது.

மறுபுறம் ஏற்கனவே பேட்டிங்கில் சொதப்பிய நிலையில் பந்துவீச்சிலாவது வெற்றிக்காக போராடலாம் என நினைத்த பஞ்சாப்பின் எண்ணங்களை சுக்குநூறாக உடைக்கும் வகையில் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்த ஜோடி பவர்பிளே ஓவர்களில் பட்டாசாக வெடித்து ரன்களை சேர்த்தது. அதிலும் பவர்பிளே ஓவர்களில் 81 ரன்கள் குவித்த இந்த ஜோடி மொத்தமாக வெறும் 6.3 ஓவர்களில் 83 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது. அந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்ட இந்த ஜோடியில் 20 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 41 ரன்கள் எடுத்து பிரித்திவி ஷா ஆட்டமிழக்க மறுபுறம் அவுட்டாக மாட்டேன் என அடம் பிடித்த டேவிட் வார்னர் 30 பந்துகளில் 10 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 60* ரன்கள் எடுத்து பினிஷிங் செய்யும் வரை ஓயாமல் ரன்களை அடித்தார்.

- Advertisement -

பட்டாசு ஜோடி:
இதனால் 10.3 ஓவர்களிலேயே 119/1 ரன்களை எடுத்த டெல்லி 9 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றியை பெற்றது. இப்படி அதிரடியாக விளையாடி முன்கூட்டியே போட்டியை முடித்த வார்னர் – ஷா ஜோடி பெரிய வெற்றியைப் பெற்றுக்கொடுத்த காரணத்தால் பங்கேற்ற 6 போட்டிகளில் 3-வது வெற்றியை பதிவு செய்த டெல்லி அதே 6 புள்ளிகளை பெற்றுள்ள கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய அணிகளை காட்டிலும் கூடுதலான ரன்ரேட்டை பெற்று புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தற்போதைய நிலைமையில் முதலிடத்தில் இருக்கும் குஜராத்தைவிட 6-வது இடத்தில் இருக்கும் டெல்லியின் ரன்ரேட் பலமாக உள்ளதற்கு காரணம் இந்த அதிரடியான ஓபனிங் ஜோடிதான் என்றும் கூறலாம். அந்த அளவுக்கு அபாரமாக செயல்பட்ட இந்த ஜோடி ஐபிஎல் வரலாற்றில் டெல்லி அணிக்காக பவர்பிளே ஓவர்களில் அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த ஓப்பனிங் ஜோடி என்ற புதிய சாதனையை படைத்தது. அந்த பட்டியல் இதோ:
1. பிரிதிவி ஷா – டேவிட் வார்னர் : 81, பஞ்சாப்க்கு எதிராக, 2022*
2. விரேந்தர் சேவாக் – கெளதம் கம்பீர் : 71, பெங்களூருவுக்கு எதிராக, 2008
3. விரேந்தர் சேவாக் – டேவிட் வார்னர் : 70, பஞ்சாப்க்கு எதிராக, 2011.

- Advertisement -

இந்த அளவுக்கு அபாரமாக செயல்பட்டு வரும் இந்த ஜோடியில் ஆஸ்திரேலியாவுக்கு விளையாடியதால் முதல் 2 போட்டிகளில் டேவிட் வார்னர் பங்கேற்கவில்லை. ஆனால் 3-வது போட்டியில் ஜோடி சேர்ந்த இவர்கள் அதன்பின் நடந்த 4 போட்டிகளிலும் குறைந்தது 50க்கும் மேற்பட்ட ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்து இந்த வருட ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த ஓப்பனிங் ஜோடியாக சாதனை படைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க : உலக அளவில் மிக்பெரிய கௌரவத்தை பெற்ற ரோஹித் சர்மா – ஜஸ்பிரித் பும்ரா, என்ன தெரியுமா?

அந்த பட்டியல் இதோ:
1. 67 ரன்கள் (7.3 ஓவர்களில்) – லக்னோவுக்கு எதிராக.
2. 93 ரன்கள் (8.4 ஓவர்களில்) – கொல்கத்தாவுக்கு எதிராக.
3. 50 ரன்கள் (4.4 ஓவர்களில்) – பெங்களூருவுக்கு எதிராக.
4. 83 ரன்கள் (6.3 ஓவர்களில்) – பஞ்சாப்க்கு எதிராக.

Advertisement